அம்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்த நாள் காணும் எனது அன்புத் தாய்க்கு எனது பரிசுக் கவிதை !!
தாயே ! தாயே !
என்தாயே !
உடலை உயிரைத்
தந்தாயே !
என்துயருக்காக
நொந்தாயே !
எனக்காய்க் காப்பாய்
வந்தாயே !
அம்மா !
உன் மார் மீது
மீண்டும்
மடிச் சிசுவாய்த்
தவழ்ந்திட ஆசை !!
உன்
தாலிக் கையிற்றை
இறுகப் பற்றிக் கொண்டு
தளிராக மீண்டும்
பாலுண்ண ஆசை !!
உனக்குத் தான்
எத்தனை உருவம் !
உனக்குத் தான்
எத்தனை பருவம் !
சுயநலம் அற்ற
சேவகி நீ !
இரண்டு
கிருஷ்ணர்களின்
தேவகி நீ !
உனக்குள் இருந்த
என்னைத் தாங்க
நீ பட்ட
அனுபவங்கள் பார்க்கவே !
இன்று
வரம் கேட்கிறேன்
எனக்கும்
கர்பப் பை தரச்சொல்லி
இறைவனிடம் !
நான் முதலில்
காதல் கொண்டதும்
கோபம் கொண்டதும்
உன்னிடம் தான் !!
நான்
என்றென்றும் அழுதிடத்
துடிப்பதும்
உன் மடியில் தான் !!
அம்மா !
அன்பின் நிழலே !!
ஆயிரம்
மரபுக் கவிதைகளுக்கு
மத்தியில்
என்றும் நீ இனிக்கிறாய்
புரியாத
புதுக் கவிதையாய் !!
-விவேக்பாரதி