வழியினை வகுப்போம் விரைவினில்

அயராது உழைத்திட்ட தேகமிது
அன்னாந்து ​நோக்கும் சோகமிது ​​​!​
உழைத்தே உண்டிட்ட மனிதரிவர்
உடலே தேய்ந்திட்ட வயதில்இவர் !

​வாழ்ந்திட உணவளித்த பூமியிது
வறண்டிட்ட வயலின் நிலையிது !
இயற்கையின் கொடுமை ஒருபக்கம்
இருப்பதும் அழியும்நிலை மறுபக்கம் !

விளையும் நிலங்கள் மறைகிறது
விடிவதற்குள் வீடுகள் எழுகிறது !
விவசாயம் என்பதும் மறந்ததிங்கே
விவசாயி வாழ்வும் மடிந்ததிங்கே !

பசுமைநிற பூமியோ காணவில்லை
பகைமை வெறியோ மாறவில்லை !
உழவர்க்கு இன்றோ உணவில்லை
உழுதவர் வாழ்வோ நிலையில்லை !

அறிவியல் வளர்கிறது என்போரே
அழிவியல் விவசாயம் உணர்வீரே !
அரசியல் வாதிகளே செவிமடுங்கள்
அடுத்தவர் வாழ்ந்திட வழிவிடுங்கள் !

எல்லோரும் எல்லாமும் பெற்றிட
கற்றோரும் நல்லோரும் பெருகிட
வறியோரும் வறுமையும் மறைந்திட
வழியினை வகுப்போம் விரைவினில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Sep-15, 9:31 pm)
பார்வை : 711

மேலே