மௌனத்தில் நனையும் தேனீர்

உனக்குத் தந்த
ஒரு கோப்பைத் தேனீர்
மௌனத்தில் நனைத்திருக்கிறது
பிரியும் வேளையை.

வருத்தங்களின் சன்னல்களில்
படிந்த ஒட்டடைகள்
பிரிக்கிறது நம் முகங்களை
திரைச் சீலையென.

துளிர்த்து வழியும் நஞ்சு
தீயில் கனல்கிறது
நமது அவமதிப்புகளை
நினைவுறுத்தியபடி.

சிதைந்த குரல்களின்
சித்திரங்கள்
அமானுஷ்யத்தை நிறைக்கிறது
திசை திரும்பிய
நமது பாதைகளில்.

பைத்தியத்தின் மறைவிடமாகும்
என் கற்பனைகளை
எதிர் கொள்ளத் தெரியாமல்
தவிக்கிறது
என் நேற்றைய பிரியங்கள்.

விலகிச் செல்லும் நிழலை
கூடென அடைய இயலாது
திசையறியாத பறவையாய்
நீள்கிறது வாழ்வின் பாதை.

நெருங்கி வரும் இரவில்
சுருள்கிறது
வன்மத்தின் சிரிப்புடன்...

என் ஆதிகாலக் குகையிலிருந்து
வெளியேறாமல்...

என் கை பிடித்து நடக்கும்
பிடிவாதங்கள்.

எழுதியவர் : rameshalam (4-Sep-15, 8:02 pm)
பார்வை : 98

மேலே