எங்கள் கண்ணன்
கண்ணா...உனக்கொரு
பிறந்த நாள் செய்தி....
நீ கொடுத்த கீதையை,
முழுவதுமாய் படித்து விட்டு,
பத்திரமாய் இருப்பதற்கு,
பரண் மேலே வைத்துவிட்டோம்...
ஒன்றிரண்டு உபதேசங்கள் - மட்டும்
நினைவில் வைத்துக் கொண்டு,
வாழ்க்கையை கடக்கிறோம் -
வென்றதாய் நினைத்துக் கொண்டு.....
தீமை வருகையில்,
வருவதாய் சொன்னாயே...
நீ வரவில்லை...
அஞ்சி நடுங்குகிறோம்.....
இப்போதைய நிலையினும்,
தீமை என்ற ஒன்று,
எங்கள் வாழ்வினில்,
பின்வருமோ கண்ணா....