அதோடு நான் செத்துப் போனேன்
ஆடை கலைந்தவள்
அதிகாலை வாசலில்
சோம்பலைச் சிதற வந்தாள்.
கதவில்லா வளிமண்டலத்தை
கையால் திறந்தாள்.
அழுத்தமாக அதுவும் அகலமாக.
செல்லமாய் அழுதாள் .
அழுதுகொண்டே சிரித்தாள்.
அடிக்கடி சினுங்கினாள்.
சொட்டுச் சொட்டாய் சோம்பலைச்
சிந்தி தென்றல் தயாரித்தாள்.
பாதிக்கண்ணை மூடிக்கொண்டு
மீதிக்கண்ணில் காமம்கொண்டு
மீண்டும் மீண்டும்
என்னைப் பார்த்தாள்.
பயந்துவிட்டேன்!
பக்கம் வந்தாள்.
பதறிவிட்டேன்!
தொட்டாள்.
சிலிர்த்தேன்.
எடுத்தாள்.
அச்சம் விட்டுச் சிரித்தேன்.
எவ்வளவு அழகு நீ!
உனக்கான அழகை எனக்காக கொடு
அல்ல எனக்கானவனாய் இரு...
என்றாள்.
என் ஆணவத்தின் மொழியை
மௌனத்தால் பேசினேன்...
அழைத்தாள். போகவில்லை.
இழுத்தாள். வளைந்தேன்.
இருகரம் கொண்டு
என் இடைதனைத் தொட்டாள்.
இடுப்பு மெலிந்த நான்
இன்னும் மெலிந்தேன்.
உறுப்பைப் பிடித்தவள்
என் உடன்பாட்டை உடைத்துவிட்டாள்.
ஆடினாள் ஓடினாள் பாடினாள்
என்னைத் தூக்கி
தூர வானத்திற்கு விலையில்லா
விளம்பரம் செய்தாள்.
அவள் உறுப்பில் உலாவர
எனக்கு அவளே உதவி செய்தாள்.
நான் பயணித்த அந்த நெற்றி முதல்
நெஞ்சு வரைப் பயணத்தில்
இரண்டே இடைநிறுத்தம்.
ஒன்று மூக்கு இரண்டு உதடு.
மூக்கில் மோப்பமிட்டு
மூச்சால் குளிப்பித்தாள்.
என் சிவந்த இதழை
அவள் உதட்டால் கடித்தாள்.
என்னோடு வா என்று
அவளோடு கூட்டிச் சென்றாள்.
நான் ஒழிய கருப்பான இடம் தந்தாள்.
அதில் அவளுக்கு தெரியாமல்
அடுத்தவர்க்கு தெரியும்படி
தெளிவாய் ஒழிந்தேன்.
அவள் போக நானும் போனேன்.
பணியிடத்தில் அவளைப் பார்க்கும்
சகலரும் அன்று சரமாரியாய்
என்னைப் பார்த்தார்கள்.
நேரம் ஆக ஆக பார்வைகள் பரவின
அவர்கள் பார்க்க பார்க்க
என்னுள் பக்கவிளைவு வந்தது.
வாடினேன் வதங்கினேன்
ஆங்காங்கே வறண்டேன்.
என் வட்டத்தில் சுருண்டேன்.
அடுத்து அழகாய் இருப்பேனென்று
பார்த்தவர்கள் முகபாவனையில்
முறுக்குச் சுட்டார்கள்.
அழுக்காய் இருந்தேன் போலும்.
முடிவில் நானும் அவளும்
வீடு வந்தோம்.
அவள் ஆடை கலட்ட
ஆவலாய்ப் பார்த்தேன்.
பாதி பார்த்திருப்பேன்,
என்னை கசக்கி
கையால் கற்பழித்து
ஜன்னல் வழியே
வாசலில் தள்ளி விட்டாள்.
அங்கே விடிய விடிய
பாதி உயிரில் பரிதவித்தேன்.
அடுத்த நாள் காலையில்
ஒரு செருப்பு காலில்
மிதிபட்டு திமிறி திரும்பி
மேலே பார்த்தால்......
அவள் கூந்தலில்
என் தம்பியைச் சூடிக்கொண்டு
வேலைக்குச் சென்றாள்!
"அதோடு நான் செத்துப் போனேன்"