மதிப்பிற்குரியவர்கள் - கற்குவேல் பா

மதிப்பிற்குரியவர்கள்
``````````````````````````
காடுகள் அழித்து
மடங்கள் திறந்து
மதம் வளர்க்கும்
கார்போரேட் சாமியார்கள்
கன்னியவான்களே !

வரிப்பணம் ஏய்த்து
கறுப்புப்பணமாக
வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி பதுங்கும்
வியாபாரக்காந்தங்கள்
போற்றப்படவேண்டியவர்களே !

சட்டங்களை உடைத்து
நீதிபதிகளை விலைபேசி
நீதிதேவதையை
தாசியாக்கும் ஊழல்வாதிகள்
உத்தமர்களே !

கண்ணியமாய் பேசி
கையூட்டு வாங்கி
கோப்புகள் நகர்த்தும்
அரசாங்க ஊழியர்கள்
நம்பிக்கைக்குரியவர்களே !

அரைசவரன் காதணிக்காய்
மூதாட்டியின் காதறுக்கும்
திருட்டு நாய்களிடம்
பங்கு வாங்கிக்கொண்டு
குற்றங்களை வளர்க்கும்
கசங்காத காக்கிசட்டைகள்
கவுரவிக்கப்படவேண்டியவர்களே !

இலவசங்கள் கொடுத்து
ஓட்டுகள் வாங்கி
ஆட்சியில் அமரும்
அரசியல் வியாதிகள்
அவசியமானவர்களே !

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (11-Sep-15, 12:55 pm)
பார்வை : 103

மேலே