சன்னலோர கதை -2

சன்னலோர கதை -2





"சில நாட்களுக்கு பின் ஒரு நாள்"

" ராம் தன் வழக்கமான சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்தான், அவன் செல்லும் காலை நேரத்தில் பேருந்து அவ்வளவாக கூட்டத்தில் நிறைவதும் இல்லை,"

"அதனால் என்னவோ நடத்துனரும், பேருந்தில் பயணம் செய்பவர்களில் சிலர் மட்டும் பார்த்தால் சிரிக்கும் அளவில் மட்டும் இருந்தனர்."

"அதில் பிரியாவும் ஒரு நபர் தான்,ஆனால் சிரிப்பெல்லாம் கிடையாது,ராம் மட்டும் எப்பொழுதும் பேருந்தின் இடது சன்னல் ஓரம் தான், வாரம் ஐந்து நாட்கள் அவனுக்காகவே என்று ஒதுக்கபட்டுஇருக்கும் என்றே சொல்லலாம்"

"பிரியா வலது புறம், ஓட்டுனர்க்கு அடுத்து இரண்டாவது இருக்கையில் அமர்வாள்"

"ஆனால் இன்று அதில் ஒரு சிறிய மாற்றம் "

"ராம் அதே இருக்கையில் அமர்ந்து இருந்தான் ,நடத்துனர் கைகளில் பணத்தை திணித்து,சன்னல் கதவை திறந்தவாரே ,"

"இன்னைக்கு கூட்டமே இல்ல..."

"தெரில"

"ரெண்டு நிமிஷம் நில்லுப்பா,வருவாங்க..."என்று நடத்துனர் கூறியவுடன் ஓட்டுனர் இன்ஜினை அணைத்து பேருந்திற்கு ஓய்வு கொடுத்தார் "

"யாரும் வரலன்னா ,கெளம்புங்க" என்றான் ராம்...

"யோவ்,வேலைக்கு நேரமாச்சு,போங்கயா".என்றார் ஒருத்தர் கண்டிப்பாக இவர் இந்த பேருந்தில் பயணிக்காதவராகத் தான் இருக்க வேண்டும்

"ராம் "எவன்டா அது "என்ற பார்வையில் பார்த்த போது ,பிரியா நடந்து வருவது பின் கண்ணாடி வழியாக தெரிந்தது.

"ண்ணா , ஒருத்தவங்க வராங்க"என்றான் ராம்

"பிரியா அன்று தன் இருக்கையில் வேறொருவர் அமர்ந்து இருந்ததால்,தேடல் பார்வையை வீசும் போது, ராமிற்கு முன் இருக்கை சுதந்திரமாக இருந்தது தென்பட்டது."

"அவள் நிச்சயமாக அமரமாட்டாள், என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யும் நினைப்பில் கவனித்துக்கொண்டு இருந்தான் ராம்"

" பேருந்தும் கிளம்பியது, பிரியா மெதுவாக கம்பியை பிடித்தவாறே ராமிற்கு முன் அமர்ந்து, அவன் சத்தியத்தை பொய்யாக்கினாள் "

"ராம், அவள் அமர்வாள், என்று நினைத்து கூடபார்க்கவில்லை,அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் ,ஒரு நுண்ணிய ஆசை மட்டும் இருந்தது ."

"பிரியாவிடம் இன்று ஒரு சுறுசுறுப்பு இருந்தது,கூடவே அந்த மந்திர புன்னகையும், தன் முதல் நாள் சந்தித்த அதே ஆடை அணிந்து இருந்ததால் ,அன்று நடந்த சந்திப்பு ஒரு சிறு காட்சிப்பிழை இல்லாமல் அவன் முன்னால் வந்து சென்றது."

" அந்த வெள்ளை ஷால் மட்டும் ராமின் முன் வந்து விழுந்து இருந்தது,மற்றும் ஒரு மல்லிப்பூ"

" இத்தனை நாட்கள் ராம்,பிரியாவை சாதாரணமாக கடந்து சென்றான்,ஆனால் இன்று இவ்வளவு அருகில் பிரியாவை கடந்து செல்ல ராம் சிறிது தடுமாறினான்."

"பிரியா எப்பொழுதும் போல நடத்துனரிடம் எதுவும் பேசாமல் பணத்தை தந்து பயணசீட்டை வாங்கிக்கொண்டாள் "

"அன்று ராமின் சன்னலின் வழியாக வரும் வெயிலின் பார்வை அவ்வளவாக இல்லை."

"ராம்,பிரியாவின் சுடிதார் நிரப்பாத முதுகு பாகத்தில் உள்ள மச்சம், அவனை வசீகரம் செய்தது,மனம் அதனை பார்க்க தடுத்தாலும், கண்களை அவன் கட்டுப்படுத்த முடியவில்லை,இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டான், யாரும் பார்த்தால் தவறாகி விடுமோ என்று எண்ணி கண்களை மூடிக்கொண்டான்"

"பகல்லயே தூக்கமா....!"

"ராம் முன்னால் யாரோ பேசுவது போல இருந்ததால், கண்களை திறந்தான்"

"ராமின் இருக்கையின் முன்னால் உள்ள வளைந்த கம்பியில் , தன் வலது கையை வைத்து,அவன் முகத்திற்கு நேராக பார்வையை செலுத்தி இருந்தாள் பிரியா"

"ராம் திறந்த கண்களை இமைக்கவேயில்லை,....இரண்டு தன் கண்களை கைகளால் துடைத்துக்கொண்டான்...ஆனால் பேச்சு தான் வரவில்லை,..."

"இரு நிமிட இடைவெளியில் "கடவுள் நேரா வந்தா கூட பேசிரலாம்,பொண்ணுங்க பேசின மட்டும், அந்த ஆச்சரியத்துல இருந்தே மீள முடியல,இதுல பேச்சு எங்க..."என்று நினைத்து முடிப்பதற்குள்

"அப்டிலாம் இல்ல... "என்றான்

"பின்ன ...இந்தியா வல்லரசு ஆகணும்னு வேண்டிட்டு இருந்தீங்களா"என்றாள்

"இதற்கும் அதே பதில் தான் "அப்டிலாம் இல்ல"

"ராமின் சன்னலின் வழியாக காற்றும், மெலிதான வெயில் மட்டும் நுழைந்து கொண்டு இருந்தது...சாலையின் சப்தமும் அவர்களை தொந்தரவு செய்தது"

"இன்னைக்கு இது மட்டும் தான் பேசுவீங்களா..."அவளுக்கே உரித்தான சிரிப்பை சிதறினாள்..."

"வேற எதாவுது பேசுடா வெங்காயம்...என்று மனதுக்குள் தன்னை திட்டிக்கொண்டான் ராம்"

"இல்லைங்க, நீங்க திடீர்னு பேசனதும்,....அதான் என்ன பேசறதுன்னு தெரில, ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.நா ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்"என்றான்.பேருந்தும் ஒரு நிறுத்தத்தில் நின்றது

"சரி" என்று தன் தலையை அசைத்துவிட்டு திரும்பிகொண்டாள்.

"ஒரு நிமிடம் முடிவதற்குள்...."தம்பி ,டிவிஎஸ் நகர் போகும்ல? ஒரு வயோதிகர் அருகில் நின்றார்.

"போகும்ங்க, இங்க உட்க்காருங்க..."

"ராமிற்கு இப்பொழுது தைரியம் வந்தது"

"ஏங்க" என்றான்

"பிரியா திரும்பி பார்த்தாள்"

"சொல்லுப்பா",அருகில் இருந்த வயோதிகர்.

"ஐயா ,உங்கள இல்ல "என்றான்

"சரிப்பா"என்று வயோதிகர்,பேருந்து செல்லும் திசையை நோக்கி கவனத்தை செலுத்தினார் .

"சொல்லுங்க இப்போ பேசலாம்" என்றான் பிரியாவிடம்

"ராமிற்கு தைரியம் இருந்தது, கூடவே குழப்பத்திலும் இருந்தான்"

"நாம முதல் தடவ பார்த்து,பேசினப்போ இந்த கலர் சுடிதார் தான போட்டு இருந்தீங்க"...இத பேசறதுக்கு தான் ஒரு நிமிஷம் யோசிச்சியா..என்று அவனே திட்டிக்கொண்டான்.சரி நமக்கு அவ்ளோதான் வரும் என்றும் அவனே சமாதானமும் செய்துகொண்டான்.

"எனக்கு நியாபகம் இல்ல,ஆனா நீங்க வந்து நின்ன போது, உங்க மூஞ்சில இருந்த ரியாக்ஷன் மட்டும் நியாபகம் இருக்கு,என்று திரும்பிக்கொண்டாள் பிரியா"

"தம்பி டிவிஎஸ் நகர் வந்தா சொல்றயாப்பா..."வயோதிகர்

"கண்டிப்பா சொல்றேன் தாத்தா"அவனிடம் கோபம் இல்லை

"ராம் அதன் பின்னால் பிரியாவை அழைக்கவில்லை, சன்னல் வழியாக கட்டிடங்கள் செல்லும் வேகத்திற்கு எதிர்புறமாக தன் நினைவுகளை கடந்த காலம் நோக்கிச்சென்றான்"

"அல்லோ "தன் இடுப்பில் கை வைத்து நின்றதை, தன் முகபாவனையை ,கற்பனையில் பிரியாவின் பின் புறமாக, ராம் பார்த்தான்.

"தன் வாய் திறந்து மூச்சை வாங்கிக்கொண்டு,கண்கள் சுருங்கி, மூக்கு புடைத்துக்கொண்டு இருந்த பாவனை தெரியவில்லை, பிரியாவின் மச்சம் மட்டும் தெரிந்தது கற்பனையிலும் கூட... ஏனென்றால் அவன் பிரியாவின் பின் புறமாக இருந்தான்,கற்பனையிலும், நிஜத்திலும்....

பயணம் தொடரும்....

எழுதியவர் : காதல் வாழ்க்கை (11-Sep-15, 11:01 pm)
பார்வை : 162

மேலே