தந்தை பெரியார்

பெரியாரை நாம்மறந்தால் தாழ்வோம் நாமே
பாவலர் கருமலைத்தமிழாழன்

கருமுகிலைக் கிழித்திட்ட மின்னல் கீற்று
ககனத்தை அதிரவைத்த இடியின் ஓசை
இருகரையை உடைத்தெறிந்த வெள்ளச் சீற்றம்
இரும்பினையே உருக்குலைத்த தீக்கொ ழுந்து
மருட்டுகின்ற இருள்மாய்த்த கதிரின் வீச்சு
மலையினையே ஆட்டுவித்த புயலின் பாய்ச்சல்
கருவாகி அத்தனையும் ஒருங்கி ணைந்து
கண்முன்னே இருந்தவர்தாம் தந்தை பெரியார்

விடியாத இரவுக்கு விடியல் தந்து
விரிகதிராய் எழுந்திட்ட வீரச் சிங்கம்
மடியாதோ எனயேங்கி மாய்ந்த மக்கள்
மனக்குமுறல் தீர்த்திட்ட ஞான வித்து
பிடியாதோ எனும்மயலில் கூம்பிச் சோர்ந்த
புரைதன்னை நீக்கிட்ட புரட்சி வேந்தன்
படியீதோ எனத்தன்னைத் தந்து தாழ்ந்தோர்
படியேறக் கரம்கொடுத்த ஈக நெஞ்சோன் !

மூத்திரப்பை கையேந்தி ஊர்ஊ ராக
மூடத்தை ஓட்டிக்கால் வெட்டி யவன்நீ
ஆத்திகர்கள் பின்னிவைத்த சூழ்ச்சி வலையை
அறிவென்னும் கத்தியாலே அறுத்த வன்நீ
சாத்திரங்கள் எல்லாமே புளுகு மூட்டை
சாய்த்துவிடும் எனஉண்மை உணர்த்தி யவன்நீ
சூத்திரர்கள் எனகுனிய வைத்த முதுகை
சுரணையூட்டி நிமிர்த்திநிற்க வைத்த வன்நீ
(1)
தேவடியாள் பிள்ளையென்று பட்டம் சூட்டித்
தெருவோரம் செல்வதற்கும் தடைகள் போட்டு
காவடிகள் தூக்கியெங்கள் கால்க ளுக்குக்
கைகூப்பி வணக்கங்கள் செய்க என்றே
பூவடியாய்த் தனையுயர்த்திச் சூழ்ச்சி செய்யும்
பூணூல்கள் அடிமையராய்ப் பணிந்து நின்ற
பாவடியாம் மக்கள்தமை இயக்க மாக்கிப்
பகுத்தறிவில் நடப்பதற்கே மாற்றி யவன்நீ

நீவந்த பின்னால்தான் எங்கள் வீட்டில்
நின்றிருந்த பழமைகளும் எரியக் கண்டோம்
நீவந்த பின்னால்தான் எங்கள் நெஞ்சில்
நீயாயத்தின் நினைவுகளும் எழும்பக் கண்டோம்
நீவந்த பின்னால்தான் இந்த நாட்டில்
நின்றமூடம் முடமான காட்சி கண்டோம்
நீவந்த பின்னால்தான் தாழ்ந்தி ருந்தோர்
நிமிர்ந்துதலை நடக்கின்ற துணிவு கண்டோம் !

சிந்தனையைத் தூண்டிவிட்டே அறிவால் எந்தச்
சிறுவினையும் செய்கவென்றே முழக்க மிட்டு
இந்நிலத்தில் பகுத்தறிவுப் பாதை வெட்டி
இருக்கின்ற சூத்திரர்க்கே உணர்வை ஊட்டி
மந்தையென வாழ்ந்தோர்க்கு மதியை ஈந்து
மறுமலர்ச்சி வரலாற்றை புதிதாய் ஆக்கித்
தந்திட்ட பெரியாரை நாம்ம றந்தால்
தலைநிமிர்ந்த நாம்மீண்டும் தாழ்ந்து போவோம் !
(2)

எழுதியவர் : (13-Sep-15, 5:20 am)
பார்வை : 656

மேலே