ஏழாவது மனிதன்-1

அவன் கனவு மனிதன்

தூரங்களை விரும்புவான்
நிலவுகள் செய்வான்
வெகு அருகில் நின்று
நித்திரையை
அவதானிப்பான்

சொல்லாமல் சொல்லுதல்
அவன் மொழி
கடந்த பின்னும் நிற்கும்
அவன் நிழல்

அவன் பச்சை மனிதன்

கோபம் தாபம்
சிற்பம் என்பான்
உடைத்தல் ரசித்தல்
நுட்பம் என்பான்

மானுடம் விதைப்பதில்
பெரும் விவசாயி
கானகம் ரசிப்பதில்
ஆதி மனிதன்

அவன் நீதி மனிதன்

சாதி சமயம்
இல்லை என்பான்
சாத்திரம் எதற்கு
தொல்லை என்பான்

நீதி நேர்மை
உண்மை என்பான்
நெஞ்சை நிமிர்
திண்மை என்பான்

அவன் ரசிக மனிதன்

உள்ளூர மழை சொட்டும்
ரசிகன்
கள்ளூர கதை கொட்டும்
வசீகரன்

தேடுதல் தொலைதல்
ஜன்னலாகும்
தேடியே தொலைதல்
பின்னலாகும்

அவன் வேறு (ரு) மனிதன்

பெருங்கனவு வேராகும்
வேறான விருட்சமாகும்
தவறு எதிர்க்கும் மானுடன் அவன்
தவங்கள் செய்த பேர் உடன்

அவன் வழியெங்கும் நீராகும்
அது அவன் காடு தந்த சீராகும்
அவன் தேடும் நிஜத்தில்தான்
அவன் வேர் கூட வேறாகும்

அவன் உலக மனிதன்

சித்தம் முழுக்க
சிவந்தவன்
பத்தும் தீக்குள்
நடந்தவன்

யுத்தச் சுவருகள்
உடைத்தவன்
ரத்த சரித்திரம்
படைத்தவன்

அவன் ஆதிமனிதன்

அவன் இவன்
எவனாகவும்
அவன் இருக்கலாம்

கனவு பச்சை நீதி
ரசிப்பு வேறு ஆதி
எல்லையில்லா மனித
பாதையில் அவனே
நீங்களாகும்
ஏழாவது மனிதன்.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (14-Sep-15, 1:15 pm)
பார்வை : 90

மேலே