பரவச நிலையும் பரமசிவனும்

வீட்டுக்குக் நேர் கீழே ஒரு சிறிய பெட்டிக்கடை இருக்கிறது. அந்தக் கடையில் எந்நேரமும் வருங்காலத் தூண்களின் கூட்டம் ஒன்று புகையூதியபடி களித்திருக்கும். படிப்பு, வேலை இவை குறித்து எந்தக் கவலையும் இல்லாத ஆனந்தமயம். இரவு நெருங்க நெருங்க ஆனந்தம் உச்சத்தை அடையும். கடை பூட்டியபிறகு இன்னும் களை கட்டும். சில நேரங்களில் புட்டிகள் திறக்கப்பட்டு சோமபானம் வீதியில் வழிந்தோடும்.

என் படுக்கையறைக்கு நேர் கீழே அவர்களின் பார் (இதற்கு தூய தமிழில் சொல் இருக்கிறதா?) என்பதால் கைலாய, வைகுண்டம் போல மேகவீதியில் மிதந்தபடி கழியும் எனது நனவுகள். இரண்டு உப்பரிகைகளும் சில சாளரங்களும் இதனால் எனது அரண்மனையில் திறக்கப்படுவதே இல்லை.

நேற்றிரவு ஒரே அமளி. ஓடுவதும் அடிப்பதும் பிடிப்பதுமாக தூண்கள் பரவச நிலையை அடைந்திருந்தன. ஒருவன் கையை நீட்டிக் கொள்ள இன்னொருவன் டியூப் லைட்டால் அவன் கையில் அடித்துக் கொண்டிருந்தான். குப்பைத்தொட்டி அருகில் இருப்பதால் இது போன்ற சாகச சாதனங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். கீழே இறங்கிச் சென்று தட்டிக் கேட்கலாம்தான்.

ஆனால் சோமபான ஆதிக்கத்தில் இருக்கும் பதினைந்து பேரிடம் சென்று ஏதாவது கேட்டால்தான் தட்டி விடுவார்கள். நான் குடி வந்த புதிதில் காவல் துறையிடம் சொல்லி அவர்கள் இரவு உலா வந்து கொஞ்ச காலம் அமைதியாக இருந்தது. பிறகு பழைய கதையாகி விட்டது. நேற்று ஆனால் ஏதாவது நடக்கும் என்று மட்டும் தோன்றியது. ஆனால் தூங்கியாக வேண்டுமே.. நமக்கு வேலை, படிப்பு என்று சாதாரண மனிதப் பூச்சிகளின் கவலை மறுநாள் மலையாகக் காத்திருக்கிறதே.

நள்ளிரவில் பரவச நிலையின் ஓசை குறைந்து உடுக்கை அடிக்கும் ஓசை கேட்டு விழிப்பு வந்தது. உப்பரிகையைத் திறந்து எட்டிப்பார்த்தால் காக்கி உடை சிவபெருமான் ஒருவர் கையில் லத்தியுடன் தாண்டவமாடிக் கொண்டிருந்தார். வருங்காலத்தூண்கள் அந்த ஓசைக்கு வளைந்து வளைந்து நாட்டியமாடிக் கொண்டிருந்தார்கள். மனித உரிமையாவது மண்ணாவது. என் அற்ப மனித மனத்துக்கு அப்படி ஒரு குதூகலம். ஒவ்வொரு அடியிலும் நான் முக்தி நிலையை நெருங்கிக் கொண்டிருந்தேன். அடிக்கெல்லாம் அசராத தூண்கள் அட்ரஸ் சொல்லுடா என்றவுடன் உடையத் தொடங்கிவிட்டார்கள்.

நடந்தது இதுதான். சற்றுத் தொலைவில் வேறொரு கடை இருக்கிறது. நெல்லையைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள். தேனீயைப் போன்று உழைப்பவர்கள். ஆனால் அங்கு சிகரெட் கிடைக்காது. கூட்டம் போட முடியாது. பரவச நிலைகளில் நம்பிக்கையற்ற நாத்திகர்கள். சகோதரர்களில் ஒருவர் அந்தப் பக்கமாகக் கடக்கும்போது தூண்களில் ஒன்று இடறி இருக்கிறது.

பரவச நிலையில் இருந்தவர்கள் அவரை அடிக்கப் போகவே விவகாரம் முற்றிவிட்டது. அவர் நேராக கைலாயத்துக்கு சென்றுவிட்டார். ஒரு டிவிஎஸ் 50 வாகனத்தில் சிவபெருமானையும் நந்தி தேவனையும் அழைத்து வந்து விட்டார். இங்கே பூசை நடந்து கொண்டிருந்த சற்று நேரத்தில் புஷ்பக விமானம் வந்தது. உள்ளே மேலும் இரு சிவனடியார்கள். பரவச நிலையிலிருந்தவர்களை அள்ளிக் கொண்டு கிளம்பினார்கள். ஆனால் ஏனோ அடுத்த திருப்பத்தில் இறக்கி விட்டுவிடுவார்கள் என்று மட்டும் அசரீரி சொல்லிக் கொண்டே இருந்தது.


______________________________________________________________________
முகநூலில் - ஷான் கருப்புசாமி

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (14-Sep-15, 1:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே