உரியாம்பட்டை
இரவு கலையாத அதிகாலையில் பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்தான் கதிரேசன். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இப்படி வருவது வழக்கமாகி விட்டது. இரண்டு நாட்கள் அவன் அம்மாவின் கையால் சாப்பிட்டு கதை பேசி தூங்கி எழுந்து மீண்டும் பெங்களூர் செல்லும்போது மறுபடி பிறந்தது போல் இருக்கும். அங்கே ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனத்தில் அல்காரிதம் எழுதும் வேலையில் இருக்கிறான். வங்கிக் கணக்கு நிறைய சம்பளம் சமீபமாக வரத் தொடங்கியிருந்தது. திருமணம் தொடர்பாக பேச்சை எடுத்து வந்தார் அவன் அம்மா. நேற்று காபி சாப்பிட போலாமா என்று கேட்ட சுஷ்மா பற்றி பேசினால் உபயோகம் தீர்ந்த துடைப்பக் கட்டையால் அடிவாங்க நேருமோ என்று யோசித்தபடி நடந்தான். பழக்கமான முகங்கள் அவனைப் பார்த்ததும் புன்னகைத்து ஒரு "வா கதிரு.. இப்பத்தான் வாறயா..." வை சம்பிரதாயமாக உதிர்த்துவிட்டுப் போனார்கள். தெருமுனையில் ராசண்ணன் டீக்கடையில் அந்த நேரத்திலும் தலையில் உருமாலைக் கட்டுடன் மார்க்கெட்டுக்கு காய்கறி எடுத்துச் செல்பவர்கள் நின்றிருந்தார்கள்.
வீட்டை அடைந்ததும் அம்மாவின் கையால் காபி கிடைத்தது. பயணத் தூக்கம் கலைந்து வெளியில் கொஞ்சம் வெளிச்சமாகி இருந்தது. லுங்கிக்கு மாறி சோம்பலாக பல் துலக்கிக் கொண்டிருந்தபோது சேகர் வந்திறங்கினான். பத்தாவது படிக்கும் வரை அவனது நெருங்கிய நண்பன், ஆனால் அதன் பிறகு மேலே படிக்கவில்லை. சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டான். அவன் அப்பா மளிகைக் கடை வைத்துக் கொடுத்திருந்தார். அவனும் நன்றாக நடத்திக் கொண்டிருந்தான். லுங்கியும் காலேஜ் பீடி படம் போட்ட முண்டா பனியனும் அவனது அடையாளமாகி விட்டிருந்தன. டிவிஎஸ்ஸை நிறுத்தியவன் அன்று அதிசயமாக ஒழுங்கான அரைக்கை சட்டையும் பேண்டும் அணிந்திருந்தான். "டேய் கதிரா... நீ வந்து இறங்குனதைப் பாத்தேன். அதான் வேகமா ரெடியாகி வந்துட்டேன்" என்றான்.
"அப்படி எதுக்குடா மாப்ளயாட்ட ரெடியாகி வந்தே..."
"மாப்ளயேதான்… அக்கட்டால ஒந்து.."
கதிரேசனைத் தள்ளி வீட்டுக்குள் நுழைந்தவன் கக்கத்தில் இடுக்கியிருந்த மஞ்சள் பையை எடுத்தான். "அம்மா... அம்மா... " என்று அழைத்தான்.
"என்ரா சேகரு வெடிஞ்சு வெடியாம?" முந்தானையால் கையைத் துடைத்தவாறே வந்த அம்மாவின் கையில் மஞ்சள் பையைக் கொடுத்துவிட்டு காலில் நெடுக விழுந்தான். விழும் அவசரத்தில் கதிரேசனுக்கு ஒரு உதை.
"அட எந்திரி.. நல்லாரு... என்னத்துக்கு இதெல்லாம்..."
"கலியாணம் நிச்சயமாயிருக்குதும்மா..." மஞ்சள் பையை வாங்கி பத்திரிகை ஒன்றை உருவிக் கொடுத்தான்.
"அட அருமையாப் போச்சு போ... பொண்ணு எந்தூரு..."
"நம்ப அமுதாதாம்மா... அப்பா ஒரு வழியா செரின்னு சொல்லீட்டாரு..." அமுதா அவன் சொந்த அத்தை பெண். இருவருக்கும் பிரியம்தான். கொஞ்சம் குடும்ப தகராறால் இழுபறியாக இருந்து வந்தது.
"எப்புடியோ சாதிச்சுப் போட்டே... இரு காபி வெக்கறன்... இவனுக்கும் இந்த வருசத்துல ஒண்ணு பாத்துரோணும்... மூணு சாதகம் வந்துருக்குது... இவந்தான் ஒரேயடியா பிலுக்கறான்."
"அம்மா… நீ போயி காபி வை..." என்று அம்மாவை வெட்டி விட்டான் கதிரேசன்.
"ஏண்டா... சொல்லவே இல்ல.. எப்படிடா உங்கப்பா ஒத்துக்கிட்டாரு?"
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெலிதான குரலில் சொன்னான்.
"எத்தன நாள்தான் இவங்க நூனாயம் தீருமுன்னு பாத்துப் பாத்து கோவம் வந்துருச்சு... அவளுக்கு அங்கே ஏதோ ஒடம்பு சரியில்லாம வாந்தி எடுத்துட்டு இருந்தா... எங்க சித்தி அதையப் பாத்துட்டு வந்து ஊட்டுல சொல்லீட்டு இருந்தா… சோளக்காட்டுல தப்பு பண்ணீட்டோம்… ஒருவேள அவ மாசமா இருக்கலாமுன்னு எங்கூட்டுல சொன்னேன். எங்கப்பன் என்னயப்போட்டு அடிச்சான். கொஞ்ச நேரம் உட்டுப் பாத்தேன், அப்பறம் கையைப் புடிச்சு முறுக்கீட்டேன். அப்பறமா கூடிக் கூடிப் பேசீட்டு ரெண்டு வாரத்துல கலியாணம்னு மண்டபத்துக்கு பணம் குடுத்துட்டு வந்துட்டாங்க."
"அடப்பாவி... ரெண்டு வாரத்துலயா..." பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான்.
"கொளந்த பொறக்கறதுக்குள்ள பண்ணோணும்ல.. “ என்று தொடையைத் தட்டி சிரித்தவன் “செரி சீக்கிரம் கெளம்பு" என்று அவசரப் படுத்தினான்.
"எங்கடா?"
"அட...நீயும் வந்துருக்கே... இன்னிக்கு அப்பிடியே நம்ம கிளாஸ்மேட்டுக்கெல்லாம் குடுத்துட்டு வந்துரலாம். அப்புடியே ஜாலியா பசங்களப் பாத்த மாதிரியுமாச்சு… மத்தியானம் எங்கூட்டுல வடை சுட்டு பாயாசம் வெக்க சொல்லீருக்கேன். அம்மா உன்னய வரச் சொல்லீருக்கு... என்ன சொல்ற?"
"இப்போதாண்டா வந்தேன்... டயர்டா இருக்கு" என்று இழுத்தான். ஆனாலும் பழைய நண்பர்களைப் பார்க்கும் ஆவலும் பாயாசமும் கதிரேசனைப் பாதி சம்மதிக்க வைத்திருந்தன. சேகருக்கும் இது தெரியும். அவன் திருடன். அடுத்த அஸ்திரத்தை வீசினான்.
"அப்புடியே சாந்தா டீச்சர் வீட்டுக்கும் போவோனும். போச்சாது டயர்டா இருப்பே… நீ வேணும்னா ரெஸ்டு எடு மாப்ள..." என்றான் அம்மா தந்த காபியை வாங்கி உறிஞ்சியபடியே. சாந்தா டீச்சரின் மகள் ரம்யா இப்போது கல்லூரியில் படிக்கிறாள். அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது அவளுக்கும் அவள் தோழிகளுக்கும் கணக்கு சொல்லித் தரும்படி சாந்தா டீச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு வாரம் அவள் வீட்டுக்கு சென்று வந்திருந்தான். சொல்லித் தரும்போது பாண்ட்ஸ் மேஜிக் வாசம் வீசும் அளவு நெருங்கி உட்காருவாள். ஒரு முறை கோவில் திருவிழாவில் கூட்டத்தில் கதிரேசனை அவள் கிள்ளிவிட்டுப் போனபோது சேகர் கவனித்துவிட்டான். சாந்தா டீச்சரின் மேலிருந்த மரியாதையால் கதிரேசன் அவளைப் புறக்கணித்திருந்தான்.
அவன் முதுகில் சாத்தி "வரேண்டா... வந்து தொலையறேன்" என்றான் கதிரேசன். அவனுக்கும் ரம்யாவைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
செல்வராசு, லொட்டாங்கி லோகு, பாலாஜி, சுரேஷ் என்று மதியம் வரை பள்ளி நண்பர்களைத் தேடிச் சென்று பார்த்தார்கள். உருவங்கள் மட்டும் மாறியிருந்தன. பழைய கதைகள் பேசியும் சேகர் அவன் காதலை அடைந்த விதத்தைப் பேசியும் ஒவ்வொரு முறையும் சிரித்து சிரித்து இப்போது பசி எடுத்திருந்தது.
"சாப்பிடப் போலாமாடா.. பசிக்குது" என்றான் கதிரேசன். எண்ணெய்ச் சட்டியில் குதித்துக் கொண்டிருக்கும் வடையும் ஏலக்காய் வாசனையுடன் பாயாசமும் வேறு நினைவுக்கு வந்துவிட்டன.
"சரிடா..." என்று தன் வீட்டை நோக்கி டிவிஎஸ்ஸை திருப்பிய சேகர் வழியில் ஒரு பச்சை நிற வீட்டின் முன்பு நிறுத்திவிட்டான்.
"இது ஒண்ணையும் குடுத்துட்டுப் போயிரலாம்டா, அப்பறம் இந்தப் பக்கம் வர வேலையில்ல..." என்றான். இரும்புக் கதவின் தாளை கதவின் மீது அடித்ததும் வந்து திறந்தவன் முகம் எங்கேயோ பார்த்தது போல் இருந்தது.
"யாரு" என்றான்.
"சார் இருக்காரா? பாக்கணும்"
"அப்பா, யாரோ வந்திருக்காங்க" என்றான் இயந்திரமாக. பிறகு உள்ளே சென்றுவிட்டான்.
“யாரு வீடுடா?” என்றான் கதிரேசன் கிசுகிசுப்பாக
“டேய், நம்ம கந்தசாமி சார் வீடுடா” என்றான். அவனுக்கு திக்கென்றது. திரும்பிப் போகலாமா என்று கூட தோன்றியது.
அதற்குள் அந்த இளைஞன் திரும்பி வந்தான். “உக்காருங்க, வருவாரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டான். இப்போது அந்த முகம் யாருடையதென்று புரிந்தது. பார்வையை சுழற்றியபோது கந்தசாமி சாரின் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் தென்பட்டன. அவர் குறித்த நினைவுகள் ஒரு பெருமழையைப் போல் பொழியத் தொடங்கின.
கந்தசாமி சாரின் டியூஷன் ஊருக்குள் பிரபலம். எப்படிப்பட்ட தேறாத மாணவனையும் தேற்றி விடுபவர் என்ற பெயரெடுத்தவர். கிள்ளிப் பிடிக்க முடியாத அளவு மிலிட்டரி கட்டிங். புசுபுசுவென்ற மீசை. எப்போதும் சவரம் செய்த முகம். வெயிலில் சென்றால் நிறம் மாறும் கண்ணாடி அணிந்திருப்பார். அதிகாலை ஐந்து மணிக்கு அனைவரும் வகுப்பில் இருக்க வேண்டும். அவர் வந்திருக்க மாட்டார். முந்தைய நாளின் பாடங்களில் இருந்து ஏற்கெனவே கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். அரைமணி நேரத்தில் எழுத வேண்டும். அவற்றை எழுத புதிய காகிதங்கள் வாங்கக் கூடாது. அச்சு நோட்டீஸ்களின் காலியான பின் பக்கங்கள் போதுமானது. இதற்காகவே வீட்டில் வரும் சினிமா நோட்டீஸ்களை, தேர்தல் நேர கட்சி நோட்டீஸ்களை பலர் கவனமாக எடுத்து வைப்பதுண்டு. சிலர் பெரிய சினிமா போஸ்டரை முப்பத்தி இரண்டாக மடித்துக் கிழித்து எடுத்து வருவார்கள். அது ஈகோ ஃப்ரெண்ட்லி என்று அமெரிக்கன் ஜார்ஜ் சமீபத்தில் சொன்ன பிறகுதான் கதிரேசனுக்குப் புரிந்தது. எழுதிய பிறகு மாணவர்களே மாற்றித் திருத்த வேண்டும். கதிரேசனுக்கு சேகர்தான் திருத்துவான். அவன் பதிலுக்கு சேகர் எழுதியதை திருத்தி தவறுகளை வட்டமிட வேண்டும். இதில் நண்பன் என்றெல்லாம் பார்க்காமல் நேர்மையாக இருக்க வேண்டும். சேகர் கெஞ்சினாலும் அவன் நிறையவே வட்டம் போட்டு வைப்பான். ஐந்தரை மணியளவில் கந்தசாமி சாரின் புல்லட் சத்தம் தொலைவில் கேட்கும். எத்தனையோ புல்லட்டுகள் ஊரில் இருந்தாலும் அந்த வண்டியின் சத்தம் அந்த ஊரின் உயர் நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அத்துபடி. அந்த புல்லட்டுக்கென்று தனியான ஒரு குரல் இருந்தது. அது கந்தசாமி சாரின் கட்டியம் போல ஒலிக்கும்.
கதிரேசன் நன்றாகப் படிப்பவன்தான். பத்தாம் வகுப்பில் கணக்கில் நூறு எடுக்கப் போகிறவன் என்று அவனைத் தவிர அனைவரும் நம்பினார்கள். அப்போதெல்லாம் இப்படி தெருவுக்கு ஒருவன் கணக்கில் நூறு எடுக்க முடியாது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை யாராவது எடுப்பதுண்டு. முடியுமா என்பதில் அவனுக்கே சந்தேகம் இருந்தாலும் கந்தசாமி சாரிடம் டியூஷன் படித்து வந்ததால் கொஞ்சமாக தைரியம் இருந்தது. இதற்காகவே அவன் அம்மாவிடம் அடம் பிடித்து மாதம் ஐம்பது ரூபாயில் அதிகாலை டியூஷனில் படித்துக் கொண்டிருந்தான் கதிரேசன்.
"டேய் சார் வராருடா" என்று ஒருவன் கிசுகிசுத்தவுடன் பேப்பர் மாற்றி திருத்துபவர்கள் விறுவிறுவென்று முடிப்பார்கள். டியூஷன் நடந்த இடம் கந்தசாமி சாரின் நண்பருடையது. அவரது தென்னந்தோப்பில் ஒரு சிறு பகுதியில் ஓலைக் கொட்டகை அமைத்து நடந்தது. மாலை நேரத்தில் வேறு சில ஆசிரியர்களும் அங்கே டியூஷன் நடத்தினார்கள். வாடகை பகிர்ந்து கொள்ளப்பட்டது. அவரது புல்லட் வந்து நிற்பதற்குள் எழுதிய பேப்பர்கள் அனைத்தும் வரிசையாக மேசையில் அடுக்கப்பட்டிருக்கும். ஐந்து பிழைகளுக்கு மேல் இருக்கும் காகிதங்கள் தனியாக வைக்கப்பட வேண்டும். அவர் உள்ளே நுழையும்போது அத்தனை சத்தங்களும் அடங்கி ஒரு அதீத அமைதி நிலவும். புத்தகத்தைப் புரட்டினால் கூட அவ்வளவு சத்தம் வரும். வந்தவுடன் நாற்காலியில் அமர்வார். காகிதக் கற்றைகளை எடுத்துப் புரட்டுவார். தன்னுடைய காகிதம் அவர் கையில் சிக்கக்கூடாது என்று அனைவரும் மனதுக்குள் சாமி கும்பிடுவார்கள்.
"செல்வகுமார்"
"சின்னச்சாமி"
"கோவிந்தராசு"
அவர் அழைக்க, அழைக்கப்பட்டவன்கள் பலியாடு மாதிரி வரிசை கட்டி நிற்பார்கள். அதிகம் தவறு செய்தவர்கள், திருத்தும் போது கோல்மால் செய்தவர்கள், தாமதமாக எழுதியவர்கள் என்று அனைவருக்கும் இந்த வரிசையில் இடம் உண்டு.
"வாங்க மாப்ளைங்களா... கதிரா... அந்த உரியாம்பட்டையை எடு" என்பார். அது அவருடைய கண்டுபிடிப்பு. பச்சையான தென்னை மட்டையின் கடினமான பட்டையை உரித்து உருவாக்கப்பட்டது. ஒரு பக்கம் வழுவழுப்பாகவும் மறுபக்கம் சொரசொரப்பாகவும் இருக்கும். நன்றாக வளையும். ஆனால் உறுதியாகவும் இருக்கும். வழுவழுப்பான பட்டை இருக்கும் பக்கத்தில் அடிப்பது லேசான தண்டனை. பெரிய தவறுகளுக்கு உரியாம்பட்டை திரும்பி விடும். தொடையில் ஒரு அடி வைத்தால் சுளீர் என்று எரியும். அடிபட்ட இடம் சிவந்து இரண்டு நாட்களுக்கு எரியும். உரியாம்பட்டை அடி என்பது கந்தசாமி சாரின் டியூஷனோடு பின்னிப் பிணைந்த ஒன்று. உரியாம்பட்டைக்கு பயந்தே செல்லமுத்து சாரின் டியூஷனைத் தேர்ந்தெடுத்தவர்கள் உண்டு. அவரும் எங்கள் பள்ளி கணக்கு ஆசிரியர்தான். ஆனால் அவர் மாணவர்கள் யாரும் நூறு மதிப்பெண்கள் எடுத்துப் பார்த்ததில்லை. சிலர் பெயில் ஆனதும் உண்டு. கதிரேசன் ஒரே ஒருமுறை தாமதமாக எழுதியதற்காக மட்டும் உரியாம்பட்டையில் அடி வாங்கியதுண்டு. அதுவும் வழுவழுப்பான பக்கத்தில். மற்றபடி அவன் நன்றாகப் படிப்பவன் என்பதால் கந்தசாமி சாருக்கு அவனைப் பிடிக்கும். கதிரேசனும் அவரைப் போல் ஒட்ட கிராப் வெட்டிக் கொண்டு இருப்பவன் என்பதால் கூடுதல் பிரியம். "என்னடா கதிரா, எங்கூட போட்டி போடறியா" என்று சொல்லி தலையைத் தடவுவார். அவனுக்கு அந்த நேரம் பாசமான ஒரு சிங்கத்தின் அருகில் நிற்பது போல் இருக்கும்.
அடி கொடுக்கும் படலம் முடிந்த பிறகு வழக்கமான பாடம் தொடங்கும். பாடம் எடுக்கும்போது அத்தனை பொறுமையாக விளக்குவார். நிறைய உதாரணங்கள், எளிமையான அன்றாட நிகழ்வுகள் கொண்டு நகைச்சுவையாக அவர் சொல்லிக் கொடுக்கும் அழகே தனி. பள்ளியில் இதே பாடத்தை எடுக்கும்போதும் அவர் இதே சிரத்தையுடன் சொல்லித் தருவதை கவனித்திருக்கிறான் கதிரேசன். பள்ளியில் உரியாப்பட்டைக்கு பதில் பிரம்பு என்பது தவிர அவருக்கு டியூஷன், பள்ளி என்ற வேறுபாடு இருந்ததில்லை. கந்தசாமி சார் புண்ணியத்தில்தான் பல தடியன்கள் பத்தாவதைக் கடந்து கொண்டிருந்தார்கள். சேகரும் அப்படித்தான். அவனுக்கு கணக்கு என்று சொன்னாலே காய்ச்சல் வந்துவிடும். எட்டாவதில் இரண்டு வருடம், ஒன்பதாவதில் இரண்டு வருடம் என்று தயங்கித் தயங்கி பத்தாவது வந்து சேர்ந்திருந்தான். பெரும்பாலும் உரியாம்பட்டையில் தினமும் அடிவாங்குவான்.
"என்னடா கதிரா, நூறு எடுத்துருவியா..."
கதிரேசன் தான் போட்ட ஒரு கணக்கை அவரிடம் காட்ட நின்று கொண்டிருந்த போது மெதுவாகக் கேட்டார்.
"எடுத்துருவேன் சார்"
"என்றா மொள்ளச் சொல்றே..."
"எடுத்துருவேன் சார்" என்பான் சத்தமாக. இது அடிக்கடி நடக்கும்.
தேர்வுக்கு இரண்டு மாதங்கள் முன்பு புதூர்க்காரர் தோட்டத்தில் மாங்காய் பறிக்க சுவர் ஏறிக் குதித்த போது காலை உடைத்துக் கொண்டான் கதிரேசன். பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். அவனது கவனக்குறைவுக்காக கடிந்து கொண்டவர் மருத்துவரிடம் அக்கறையாக விசாரித்தார்.
"நூறு எடுக்கற பையன் சார். பரிச்சைக்குள்ள செரியாப் போயிருமா?"
"அதெல்லாம் ஒண்ணும் பயம் இல்லை. ரெண்டு வாரத்துல சரியாகிடும்."
அந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை வந்திருந்தார். ஒரு முறை அவனருகில் அமர்ந்து பிதாகரஸ் தேற்றத்தை சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனார்.
"டியூஷன்ல எடுத்தாச்சுரா... முக்கியமா ஒரு பெரிய கேள்வி இதுலருந்து வரும்... பாத்து வெச்சுக்க" என்று சொல்லிவிட்டுப் போனார். அவர் புல்லட் சத்தம் தொலைவில் ஒலித்ததும் ஓடிவிடும் சேகர் அவர் புல்லட் சத்தம் அடங்கிய பிறகு வருவான்.
"டேய்.. உட்டா சார் உனக்கு ஆரஞ்சுப் பழம் உரிச்சு ஊட்டியுடுவாராட்டமால்ல இருக்குது... மவனே நீ மட்டும் நூறு எடுக்காம உடு.. உனக்குன்னு தனியா உரியாம்பட்டை செதுக்கி வெச்சுருப்பாரு.. உட்டதுக்கும் சேத்து உரிச்செடுப்பாரு..." என்று வயிற்றில் புளியைக் கரைப்பான். கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும் கதிரேசனுக்கு.
முழுத்தேர்வு நாளில் அவன் அமர்ந்திருந்த மரத்தடியில் தனது புல்லட்டை நிறுத்தியவர் "கதிரா...நல்லா எழுதுறா..." என்று என் தலையில் கை வைத்துச் சென்றார். அவனுக்கு ஆயிரம் யானை பலம் வந்தது போல் இருந்தது. தேர்வு நடக்கும்போது ஒருமுறை தேர்வு அறைகளுக்கு வந்து சென்றார். அவன் அருகில் கொஞ்ச நேரம் நின்று எழுதுவதைப் பார்த்தபடி இருந்தார். அவனுக்குப் படபடப்பாக இருந்தது. பிறகு சத்தமாக "கேள்வியில மட்டும் எதாவது சந்தேகம் இருந்தா புரியலைன்னா கேட்டுக்குங்கடா..." என்றார். அனைவரும் அமைதியாக இருக்கவும் பிறகு கிளம்பி விட்டார். தேர்வு முடிந்த பிறகு வெளியே கதிரேசனை நிறுத்தி கேள்வித்தாளை வாங்கிப் பார்த்தார்.
"கதிரா... ஈசியாத்தானடா இருந்தது?"
"ஆமா சார்"
"நூறு வந்துருமா?"
"வந்துரும் சார்"
அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். "சரி கெளம்பு, நாளைக்கு சைன்ஸ் படிக்கணும்ல?" என்றவர் அவன் பின்னால் ஒளிய இடம் தேடிக் கொண்டிருந்த சேகரைப் பார்த்துவிட்டார்.
"என்றா மாப்ள இங்க வா" அவரிடம் அடிக்கடி அடி வாங்குபவர்களை உறவு சொல்லி அழைப்பது அவர் வழக்கம்.
"இவன் நூறு வாங்கறானோ இல்லையோ எனக்கு நீ பாசாவியான்னுதான் பயமா இருக்கு..." என்றபடி அவன் தோள் மீதும் கை போட்டுக் கொண்டார். அவனுக்கு தான் காண்பது கனவா நனவா என்று புரியவில்லை. நம்ம சார்தானா இது? “ஆயிருவேன் சார்” என்றவன் கதிரேசன் காதில் மட்டும் விழும்படி முனகினான். “உன்னொரு வருசம் உரியாம்ப்பட்டை அடி யாரு திங்கறது?”
"டே மாப்ள... உரியாம்பட்டைல அடிச்சதை மனசுல வெச்சுக்கிட்டு புல்லட்ல காத்தைக் கீத்தைப் புடுங்கீறாத... பரிச்சை முடிஞ்சுது... இனி சமாதானமா போயிரலாம்" என்று சொல்லிவிட்டு மற்ற மாணவர்களையும் விசாரித்துவிட்டுப் போனார். அவருடைய பழக்கமான புல்லட் சத்தம் உரத்து ஒலித்துப் பின் தேய்ந்து மறைந்தது.
இரண்டு மாதங்கள் சென்றதும் தேர்வு முடிவுகள் வந்தன. சேகரின் அப்பா நியூஸ் ஏஜெண்ட் என்பதால் அவன்தான் முதலில் ரிசல்ட் பார்த்துவிட்டு பேப்பரோடு ஓடிவந்தான்.
"கதிரா.. நான் பாஸ்ரா.. நான் பாஸ்ரா..." அவனுக்கு நிலை கொள்ளவில்லை.
"நானு?"
"டேய்.. நீயெல்லாம் பாஸ்ரா.. அதெல்லாம் பாக்கோணுமா?.."
"எதுக்கும் பாத்துர்ரா"
"பாத்துட்டேன்.. பாத்துட்டேன்... நீயெல்லாம் பாசுதாம் போ... கந்தசாமி சாருக்குதான்டா கோயில் கட்டோணும்... நானெல்லாம் கணக்கு பாஸ் பண்ணுவன்னு எங்கப்பா கூட நினைக்கலை..."
இரண்டு நாட்கள் சென்று மதிப்பெண் பட்டியல் வாங்கப் போனபோது அதிர்ச்சி காத்திருந்தது. அத்தனை பேர் எதிர்பார்ப்பையும் மீறி கதிரேசன் தொண்ணூற்றெட்டுதான் எடுத்திருந்தான். பார்த்தவர்கள் அனைவரும் அதையே கேட்டார்கள்.
"கதிரா... நூறு வரலையா... சார் ஸ்டாஃப் ரூம்லதான் இருக்காரு... உனக்காவ ஸ்பெசலா உரியாம்பட்டை செதுக்கி வெச்சுருப்பாரு… போயிப் பாரு.. " நேரம் காலம் புரியாமல் சிரித்தான் முப்பத்தைந்து எடுத்து பார்டரில் பாஸ் ஆன சேகர். தொண்ணூற்றெட்டு எடுத்த கதிரேசனோ கந்தசாமி சார் பார்வையில் படாமல் மெல்ல நழுவினான். அதன் பிறகு பிளஸ் டூ பக்கத்து டவுனில் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கிவிட்டதால் கந்தசாமி சாரைப் பார்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. ஓலைக் கொட்டகை உரியாம்பட்டை டியூஷன் தொடர்ந்தது. கந்தசாமி சாரிடம் டியூஷன் படிக்க வெளியூரில் இருந்தெல்லாம் வருவதாக கேள்விப்பட்டான் கதிரேசன். அவன் மட்டும் அவர் பார்வையில் படவேயில்லை. ஒரு கல்யாணத்தில் சாப்பாட்டுப்பந்தியில் அவர் வந்து அமர்ந்ததும் சாம்பார் வாளியை வைத்து விட்டு மண்டபத்தை விட்டே ஓடி வந்துவிட்டான். அவரை ஏமாற்றி விட்டதாக அவன் நினைத்தான். அவர் முகத்தில் விழிக்கும் தகுதியை இழந்துவிட்டதாகவே நம்பினான்.
ஆனால் அவர் ஏமாற்றவில்லை. அவர் சொல்லிக் கொடுத்த கணக்கு அவனுடன் எப்போதும் வந்தது. பிளஸ் டூவில் கணக்கில் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் எடுத்தான். மாவட்டத்தில் முதலாவதாக வந்தான். ஏனோஅப்போதும் கந்தசாமி சாரைப் பார்க்கப் போகவில்லை. பிறகு கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படித்ததும் அவனது கணிதத் திறமையின் காரணமாக அல்காரிதம் எழுதும் வேலைகளில் புகுந்ததும் நடந்தது. அவன் பணி புரியும் துறையில் அவனைத் திறமைசாலியாக அங்கீகரித்திருந்தார்கள். கந்தசாமி சார்தான் அப்போதும் அவனை செலுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை அவன் இதுவரை சந்திக்கவே இல்லை. அவரைப் பற்றி யாரிடமும் விசாரிக்கவும் இல்லை. அந்த சந்திப்பு இப்படி திடீரென்று நிகழும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
இரண்டு நிமிடங்களுக்குப் பின் வந்தவரைப் பார்த்ததும் அவனுக்கு வயிற்றுக்குள் பந்து உருண்டது. கந்தசாமி சார். ஆனால் கந்தசாமி சாரா அது? மெலிந்திருந்தார். திடீரென்று தும்பையாக நரைத்திருந்தது போல் தோன்றியது. டை அடிப்பதை நிறுத்திவிட்டால் சிலர் அப்படி மாறிவிடுவதை கவனித்திருக்கிறான். வெள்ளை நிறத்தில் கை வைத்த பனியன் மற்றும் லுங்கியுடன் கையில் ஒரு புத்தகத்துடன் அவர்களை வரவேற்றார்.
"டேய் கதிரா.. வாங்கடா.. வாங்கடா… உக்காருங்க... இப்பத்தான் வாத்தியார் வீடு தெரிஞ்சதா" என்றார். பிளாஸ்டிக் சேர்களை இழுத்துப் போட்டார்.
"அட... உக்கார்ரா" என்றவர் “ரமேசு, ஒரு சொம்புல தண்ணி கொண்டா” என்று குரல் கொடுத்தார்.
"பரவால்ல சார்" என்றான் சேகர் போலி பவ்யத்துடன். ஆனால் தண்ணீர் வரவில்லை.
“ரமேசு...” என்று மீண்டும் குரல் கொடுத்தார். பிறகு உச்சுக் கொட்டிவிட்டு தானே எழுந்து உள்ளே சென்று ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
ஒரு வழியாக சேகரின் திருமண செய்தியை சொல்லிவிட்டு பத்திரிகை தந்து விட்டு கிளம்பலாம் என்று எழும்போது சேகர் அடுத்த குண்டைப் போட்டான்.
"கதிரா.. சார் கூடப் பேசீட்டு இரு, பக்கத்துலதான் எங்க பங்காளியூடு, ஒரு எட்டு குடுத்துட்டு வந்துடறேன்... பத்தே நிமிசத்துல வந்துருவேன்" என்றவன் அவன் பதிலுக்குக் காத்திராமல் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனான். டிவியில் ஏதோ பாடல் சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.
கந்தசாமி சாரும் கதிரேசனும் மட்டும் இரண்டு நிமிடங்கள் கனத்த அமைதியில் அமர்ந்திருந்தார்கள்.
"எப்படிரா போகுது வேலையெல்லாம்" என்றார் அமைதியைக் கலைத்து.
"நல்லா போகுது சார்" மறுபடி அமைதி. பத்து நிமிடம் இவ்வளவு நீளமா என்று தோன்றியது அவனுக்கு. சேகர் சீக்கிரம் வந்து விடுவித்தால் பரவாயில்லை என்று தோன்றியது.
"எப்புடியோ ப்ளஸ்டூல செண்டம் எடுத்துட்டே, பத்தாவதுல உட்டுட்டே... ரொம்ப எதிர்பாத்தேன்டா..." என்றார்.
"சாரி சார்... எப்படி போச்சுன்னு தெரியலை... அதுதான் உங்களை அதுக்கப்புறம் வந்து பாக்க கூட தோணலை... பயமா இருந்துச்சு..."
தளர்ச்சியாக சிரித்தார்.
"அடப்போடா... உனக்கு நூறு வராதுன்னு உன் எக்சாம் அன்னைக்கே எனக்குத் தெரியும். ஹால்ல நீ எழுதறப்பவே பாத்தேன். முதல் கேள்வில இயல் எண்ணுக்கு முழு எண்ணுன்னு போட்டு இருந்தே..."
கதிரேசனுக்கு குரல் வரவில்லை. இதற்காகவா இந்த மனிதனை இத்தனை நாள் பார்க்காமல் இருந்தோம் என்று தோன்றியது. தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
"ஆனா எனக்கு சந்தோசந்தான்டா...நீயெல்லாம் இப்புடி ஒரு பெரிய வேலைக்கு போறது எனக்குப் பெரிய கவுரவம்டா... என்ன ஒரு எட்டு வந்து பாத்துருக்கலாம்..."
"சார்... நீங்க ரொம்ப ஆசைப்பட்டீங்க… நூறு மார்க் வரலைன்னதும் எந்த மூஞ்சியை வெச்சுட்டு உங்களைப் பாக்கறதுன்னு தெரியலை... "
"கதிரா… அதெல்லாம் ஒரு நம்பர்தாண்டா... கணக்குல வர நம்பர்... நீ எடுத்த தொண்ணூத்தெட்டு பெருசா இல்ல எடுக்காத உட்ட ரெண்டு பெருசா... சரி உடு நடந்ததப் பேசி என்னாவுது"
கதிரேசன் ஏதேதோ சொல்ல விரும்பினான். அவர் மீது அவனுக்கிருந்த மதிப்பை. இன்னும் அவர் சொல்லிக் கொடுத்தவற்றை தினமும் வேலையில் பயன்படுத்துவதை. கதிரேசனின் கணிதத் திறமை பற்றி வியந்தவர்கள் அனைவரிடமும் அவரைப் பற்றிய கதைகளைப் பேசியதை. முக்கியமாக வெள்ளைக்காரன் ஜார்ஜ் கந்தசாமி சாரை கிரேட் என்று சொன்னதை. ஆனால் ஏனோ சொல்லவில்லை.அவருக்கு அதெல்லாம் தெரியும் என்று ஏனோ தோன்றியது.
***********
ஷேன் கருப்புசாமி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு...(கல்கியில் வந்த சிறுகதை)