பேராசை பெருநஷ்டம்

பேராசை பெருநஷ்டம்!!!
----------------------------------------

ராமு, சோமு. அம்மு, பொம்மு என்று 4 குரங்குகள் இருந்தன. அவை ஒருநாள் அருகிலுள்ள பழத்தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களை கூடையோடு தூக்கிக் கொண்டு தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றன.

அவைகள் திருடிய பழக்கூடையை. ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்தபடி வந்து கொணடிருந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவன் படுத்து இருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக்களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.

பழக்கூடையைத் தூக்கிவந்த குரங்களுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்ததது.

“அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு” என்றது ராமு குரங்கு.

‘ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குதான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்” என்றது சோமு.

“அந்த பஞ்சுமிட்டாய் விற்பவன் நன்றாகத் தூங்குகிறான், அவைகளை கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்” என்றது அம்மு.

“நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயை திருடலாம். அவன் அருகிலேயே படுத்து இருக்கிறான். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவான்.” என்றது பொம்மு குரங்கு.

“பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்” என்றது அம்மு.

“இல்லை...இல்லை... அவன் நன்றாக தூங்குகிறான். இப்போத பஞ்சு மிட்டாயை எடுத்துவிட வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தன, ராமுவும் சோமுவும்.

அவை இரண்டும், பஞ்சுமிட்டாய் கூடையை நெருங்கி அவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடின.

அம்முவும், பொம்முவும் பழக்கூடையை சுமந்து கொண்டு சென்றன.
சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில் பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான், தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.

‘ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையா திருடிச் செல்கிறீர்கள், உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்’ என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தான்.

கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போது மென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, ‘குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்’ என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றான்.

“நான் அப்பவே சொன்னேன். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு, இப்போ நாம் கொண்டு வந்த பழக்கூடையும் போச்சா” என்றது பொம்மு குரங்கு.

“சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெருநஷ்டம் அடைந்தோம்” என்றன மற்ற குரங்குகள்.

நன்றி'நந்தகுமார் வலைப்பதிவு'

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 8:29 pm)
பார்வை : 404

மேலே