அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான்
பள்ளமெனும் உள்ளத்தில் சிகரமானாள் தோழி
பிள்ளையில் கற்ற நட்பு மரணம் வரை பந்தம்
காலங்கள் புயலைப் போல் கோரமாய் வீசினாலும்
நட்பெனும் விருட்சத்தை வேர் சாய்க்க இயலாது.
***
ஆணும் பெண்ணும் உயிராய் நட்புகொள்வது பாவமா?
மகன் தாயின் மடியில் உறங்குவது தப்பாகுமா?
காமம் என்ற ஈனச் சொல்லால் மகிமையான
இதய ஆலயங்களில் வாழும் நட்பை கறையாக்க இயலாது.
***
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
வலியெனும் காயங்கள் நெஞ்சை உடைத்தால்
நிம்மதிக்கு மருந்தாய் தோள் கொடுப்பாள்.
என் மடியில் தோழி உறங்கும் போது
இவள் என் மகள் என்றும் நினைக்கக்கூடும்.
***
ஆயிரம் நாட்கள் கடந்தோடினாலும்
அலை வடிவம் மாறாத கடலைப் போல்
உயிர்த்தோழி அன்பை தந்தாள்;துன்பத்தில்
தோளானால்;செல்லச் சண்டையிட்டாள்.
***
இறைவன் என்னிடம் கொடுத்த வரம் அவள்
பேசிடும் தருணம் இதழ் அறியாமல் 'அம்மா'
என்று அழைத்ததுண்டு விழிநீர் ததும்ப.........,
பேசமுடியாத ஏக்கத்தை இதழ் மொழியால் பேசியது.
***
இரும்பு பாலத்தை துருப்பிடித்த ஆணியால்
இடம் நகர்த்த முடிவதில்லை.அசிங்கமான பார்வை
கேடயமான மன அழுக்குகள் ஆண் பெண் நட்பை விபச்சாரமாக்கியது.
***
நீர் நிறைந்த பாத்திரத்தில் காற்றில்லா பந்து மிதப்பதில்லை.
அறியாத மடையனின் பேச்சால் நட்பு குழைந்த சரித்திரம் வரப்போவதில்லை.
***
மண்ணுக்குள் வேரூன்றிய வீரியமான ஆழம் விழுதினை
பல்குச்சியால் சாய்த்து விட முடியாது என்பதை போல்
பாலினம் மறந்த புண்ணியம் சேர்த்த தீர்த்தத்தை எவனும் தீட்டாக்கமுடியாது.
***
தாலி எனும் வேலி உன் நட்பை சிறைபடுத்தியது.
மனைவி எனும் புதுப்பந்தம் என் தோழியை சந்தேகப்பட்டது.
***
இன்று புரிந்த நிஜங்கள் முன்னரே அறிந்திருந்தால்
எம் நட்பை வயோதிபம் வரை மணவாழ்வு தகர்த்து
துருவங்கள் கடந்து புதுமண்ணில் அன்பாய் நடந்திருக்கலாம்.
***
என்னுயிர் உள்ளவரை இல்லை எம் உயிரூள்ள வரை
நம் நட்பு சாகாது தோழியே! இறந்தாலும் உன் வருகைக்காய்
விழி மூடிய இமை வழியே மண்ணறையில் காத்துக் கொண்டிருப்பேன்.
***