நானுமொரு பிரபஞ்ச விளக்கு-சந்தோஷ்

நேசிக்கிறவனாய்
நானிருப்பதைவிட
நேசிக்கப்படுபவனாய்
நானிருந்திருந்தால்
சில ஏக்க கவிதைகளை
எழுதியிருக்கத் தேவையில்லை.

பந்தயத் தடங்களில்
முந்தும் குதிரைகளை
மட்டுமே நேசித்திடும்
உலகப்பார்வையில்
ரணமுடைய காலால்
கம்பீரப் புரவியாய்
வெறியேறிய வேகத்தில்
நொண்டியோடுமெனை
நோக்குவார் யாருமில்லை
எனும்போது
எழுதித்தானே எரிக்கிறேன்
நேசத் தேவைகளை
கவிதையாகவும்
கவலையாகவும்...!

இந்தப் பிரபஞ்சத்தில்
பிரபல ஒளிகளில்
குளித்திடுவோரை மட்டுமே
கொஞ்சியும் கெஞ்சியும்
நேசிப்போர் மத்தியில்
அஞ்சாமல் அசராமல்
ஒளிரத்துடிக்கிறேன்
நானுமொரு
பிரபஞ்ச விளக்காய்..!

***
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (16-Sep-15, 4:16 pm)
பார்வை : 86

மேலே