சூளுரைகள்

எங்கிருந்தோ கெஞ்சி வாங்கிய
ஒரு மதுபான குழுமத்தின் நாட்காட்டியும்
பன்னாட்டு நிறுவனத்தின் தடிமனான டைரியும்
எனது நெருங்கிய நண்பனின் பொக்கிஷங்கள்...

கடந்த ஜனவரி முதல்நாள் தொடங்கி
டைரி எழுதவும் சிகரெட்டை விடவும்
சூளுரைத்த அவனது வேள்வி துவங்கிய
காட்சிக்கு சாட்சி நான்தான்...

ஜனவரி ஒன்று பகல் பன்னிரண்டு மணிக் குறிப்பு-
-பாதிநாள் கடந்து விட்டது சிகரெட் இல்லாமல் –
முந்திய நாள் இரவுக் கொண்டாட்டம் முடிந்து
அவன் எழுந்ததே காலை பதினொன்று மணிக்கு-

காலம் உருண்டோட
செப்டம்பரின் ஒரு மாலை
அவன் வீட்டு கூடத்தில் ஏஷ்ட்ரே அருகே
விசிறியடிக்கப் பட்டிருந்த டைரியை
புரட்டினேன் அவன் அனுமதியோடு-

ஜனவரி முதல் பத்துநாட்கள் -
அனுதினம் கவித்துவமான பதினைந்து வரிகள்..
அதன்பின் சிறுத்துக் கொண்ட பத்திகள்
பிப்ரவரியில் டிட்டோ..டிட்டோ..ஏறிட்டுப் பார்க்க
அதே நிகழ்வுகள் பின் என்ன எழுதுவது ?
நியாமான கேள்விதான்..

தொடர்ந்த பக்கங்களில் –
சில அலைபேசி எண்களும் முகவரிகளும்..
பாதி எழுதப் பட்ட மளிகைச் சாமான் பட்டியல்..
மனைவியின் புள்ளிக் கோலப் பயிற்சிகள்..
செல்லக் குழந்தையின் கோட்டோவியங்கள்..
மீண்டும் புரட்டியபடி ஏறிட்டேன் -
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் –
மழை நேர கப்பலுக்காக கிழிக்கப் பட்டிருந்தன.
பாவம் குழந்தைதானே –

புறப்பட எழுந்த என்னிடம்
மூன்று மாதங்களில் புது டைரி வந்துவிடும்..
தவறாமல் எழுத வேண்டும்..
பின்னர் ஆத்ம கதை எழுதப் பயன்படும்
சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே..
சொன்ன அவனது முகத்தில் இந்த முறை
ஒரு தீவிரம் குடியிருந்தது...

எழுதியவர் : ஜி ராஜன் (16-Sep-15, 4:13 pm)
பார்வை : 64

மேலே