சிந்திப்போமா
எதுஇல்லை இவ்வுலகில் ஏக்கம் கொள்ள
........ஏழ்மைக்கும் வாழ்வுண்டு ! இச்சை பூக்கும்
மதுவில்லா இல்லத்தில் மக்கட் செல்வம்
.......மகிழ்ந்திருக்கும் மனைமாட்சி மேன்மை கொள்ளும்
புதுமைகளை பூக்கின்ற விஞ்ஞா னங்கள்
......புத்துலகில் சாதிவகை அறுக்கும் !ஆன்றோர்
முதுமொழிகள் கற்றுமனப் பாரம் போக்கின்
......முக்கனிபோல் வாழ்வினிக்கும் ஏற்றம் கொள்ளும் !
விதியென்னும் வார்த்தைகளும் வீணே மண்ணில்
........வெற்றிகளும் பெற்றிடலாம் விவேகம் கொள்ளின்
சதிகாரன் என்றெவரும் பிறப்பில் இல்லை
........சந்தர்ப்பம் மாற்றிவிடும் தன்னைக் காக்க !
மதியுள்ளோர் உலகத்தின் மாயம் போக்கும்
........மருந்தாவர் மடமைகளும் அழித்தே செல்வர்
எதிர்நீச்சல் போடுபவன் ஏற்றம் கொள்வான்
.......ஏக்கங்கள் தனையழித்தே வாழ்வை வெல்வான் !
மணமாகிக் கொண்டோரும் மனதை கொல்லும்
......மயக்கத்தில் விழைகின்றார் மாற்றான் வீட்டில்
பிணந்தின்னிக் கழுகுகளாய்ப் பிஞ்சைக் கூடப்
.....பிழிகின்ற செயலாற்றல் ! தகுமோ மண்ணில் ?
உணர்வில்லா மாந்தர்களாய்ப் பிறக்கும் போதும்
.....உயிரூட்டி வளர்க்கின்ற தாயைப் போற்றி
வணங்கிட்டால் வாழ்வுயரும் வன்மம் போகும்
.....வருங்காலம் சிறப்பாகும் மாற்றம் கொள்ளும் !
முத்தொளிரும் பூமியிலே மூர்க்கம் இன்றி
......முப்பொழுதும் வாழ்ந்திடலாம் ! உலகம் போற்றும்
உத்தமராய் வாழ்ந்தோரின் உள்ளம் போன்று
......உணர்வுகளைக் கொண்டிருந்தால் உயரும் வாழ்வு
இத்தரையில் எல்லாமே இறப்பைக் காணும்
......என்றுணர்ந்தால் அகம்பாவம் தானே போகும்
செத்தழியும் மானிடத்தின் செல்வம் எல்லாம்
......சுடுகாடு வரைதானே சிந்திப் போமா ?