பிரதி எடுக்க முடியா பிம்பங்கள் - 6

ஏன் தவித்துக் கொண்டிருக்கிறாய்
என்று கேட்டபடியே எனக்குள்ளிருந்து
வெளியே வந்தான் அவன்...

தாகம் எடுக்கிறது என்றேன்...

தண்ணீர் குடி...
தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தவிர
வேறெதுவும் இல்லை இங்கு...

முக்கால் பாகம் தண்ணீர்
எங்கும் நிறைந்திருக்கிறது...
இந்த உலகிலும்
உன் உடலிலும்...

உன்னால்
தண்ணீரை தவிர்க்கவோ
தடுக்கவோ முடியாது என்றான்...

ஏ பித்தனே...
அணைகட்டி அடக்கி விட முடியும்...
எங்களால் முடியாதது எதுவுமில்லை என்றேன்...

மயங்கி விழுந்தது
மருத்துவராக இருந்தாலும் - முதலில்
தண்ணீர் தெளித்துதான் தட்டிஎழுப்ப வேண்டும்...

தரம் பார்ப்பதில்லை
தாகம் தீர்ப்பதில்...
நிறம் பார்ப்பதில்லை
நிறையும் குடங்களில்...

முதன் முதலில் சமத்துவத்தை
மழையாக பொழிந்து
மனிதர்களுக்கு உணர்த்தியதே தண்ணீர்தான்...

நீ உழைக்கிறாய் என்பதை
வியர்வையின் வழியே
வெளியே சொல்வதே தண்ணீர்தான்...

உன்னை உயர்த்துவதும்
உயிரோடு வைத்திருப்பதும்
உன்னை விட உயர்ந்ததும் தண்ணீர்தான்... என்றான்

ஏ மூடனே.. நிறுத்து கொஞ்சம்...
எங்கள் மனித உயிர்களை
சுனாமி வழியே சூறையாடிச் சென்ற
இந்த தண்ணீரையா உயர்ந்தது என்கிறாய்?
என்றேன் ஆவேசமாக...

அது நீங்கள்
இயற்கையை அழித்ததற்கான
எச்சரிக்கை மணி...

அது இந்த பூமியின்
வெப்பமயமாதல் தீவிரத்தை
வெளியே சொல்ல உருகிய பனி...

உண்மையாகவே
உனக்கொரு சோகமென்றால்
தண்ணீரால் தாங்கிக் கொள்ள முடியாது...
கண்களின் வழியே காட்சி தந்து விடும்
கண்ணீராக...

வாழ்க்கையே
தண்ணீரில்தான் இருக்கிறது...
பனிக்குடத்தில் ஆரம்பித்து
நீர்க்குடத்தில் நிறைவடைகிறது

********************* ஜின்னா *********************

அவன் இன்னும் சொல்வான்... (தொடரும்...)

எழுதியவர் : ஜின்னா (20-Sep-15, 8:03 pm)
பார்வை : 346

மேலே