ஒற்றன்

உன்னையும் அறியாமல்,
உன்னை தொடர்கிறான்,
உன்னைத்தாண்டிய உண்மைகளை,
ஊடுருவி அறிகிறான்,
இருளுக்குள் வசிக்கிற வாழ்கையை,
அடுத்தவரின் சரிவுக்கு,
இரக்கப்படாமல் கடக்கிற தன்மையை,
நினைத்தவரின் கவனம் ஈர்க்க,
நீ திட்டமிடும் தீவிரத்தை,
அமைதியாய் நோட்டமிடுகிறான் !

உன் ரகசிய சம்பாசனைகள்,
தரவுகளுடனான உடன்படிக்கைகள்,
உள்ளே கனன்று விழியில்வழியும் தீவிரம்,
நொறுக்கிவிட எத்தனிக்கும் மனது,
அடுத்தவன் ஜெயிக்க நொறுங்கும் இதயம்,
எப்படியேனும் தோற்றுவிடு கண்ணெதிரே,
என உள்ளே நீ குவிந்து செய்யும் ஜெபம்,
எல்லாம் கடந்ததை ஏற்காத தோற்ற திடம்,
எரிந்து சாம்பலாகியும் அடங்காத புகைமூட்டம்,
எனும் அகக்கட்டங்களை நோக்கியபடியே இருக்கிறான் !

தீமைகள் குவிந்து கிடக்கும்,
நன்மைகள் புதைந்து கிடக்கும்,
உனக்கான வளர்பிறை தவறுகள் என்றால்,
அதற்கான முழுமதி கொடும்வினைதானே?
வெளித்தோற்றம் உலகின் பக்கங்களுக்கு,
பெயர் புகழ் அதன் வாக்கிய வரிகள்,
நிஜத்தில் நீ யாரென அறிந்தவன் அவனொருவனே !
உணர்ந்துகொண்டும் உணராததுபோல் பிரார்திப்பாய் !
அங்கே நிழல் நிலை நிரந்தரம் நிச்சயம் அழிந்துபோகும் !
வெறுமையும் தனிமையும் மரணமும் தருவான் அந்த மனசாட்சி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Sep-15, 8:58 pm)
பார்வை : 120

மேலே