அமானுஷ்ய இரவு - சந்தோஷ்

அறையெங்கும்
அமானுஷ்யம் நிறைந்துக்கிடக்கிறது.
அந்தரத்தில் ஆடும்
ஒற்றை விளக்கிலிருந்து
ஒளிக்கத்தியில்
கிழிக்கப்பட்ட என் மேனியிலிருந்து
கொப்பளித்த நிழலின் நீளம்
உக்கிரமாய் ருத்திரத்தாண்டவமாடுகிறது.

சாளரத்தின் கதவுகளும்
திரைச்சீலைகளும்
எனது கடந்தக்காலத்து
முயலாமை இயலாமைகளை
கொக்கரித்து
நையாண்டித் தாளம் போடுகிறது.

நிகழ்காலத்தை பயமுறுத்தும்
இவ்விதமான நடுநிசி மனப்பிசாசின்
கொட்டத்தை அடக்கிடவே
ரெட் ஒயின் துணைக்கழைத்தும்,
இருதலைக்காதலாயிருந்து
பரிணாமப்பிழையான
அவள் மீதான
இன்றைய ஒருதலைக்காதலால்
கவிதையில் கதறியழுதவாறும்
என் சுயத்தை தொலைத்திடும்
இன்பப்போதையோடு
முடிகிறது ஒவ்வொரு
தனிமையிரவுகளும்..!

***
--இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (21-Sep-15, 12:25 am)
பார்வை : 155

மேலே