உழவனோடு மழைத்துளி

நேற்று நான் விளையாடிய
காடுகளை அழித்துக்
கட்டிடம் கட்டி என் கனவுகளை
சிதைத்தவர்களால்
ஆங்காங்கே அடைமழைஎன்று
ருத்ர தாண்டவமாடினாலும்
என்னைக் கொண்டு பசுமை செய்யும்
உழவுத் தோழா நான்
உன்கையில் விழும்போதுதான்
மீண்டும் குழந்தையாகி விடுகிறேன்
[…]
விண்ணுக்கும் மண்ணுக்குமான
தொப்புள் கொடியுறவல்லவா
உனக்கும் எனக்கும்.
புரட்சி புரட்சி என்று
போர்க்கொடி பிடித்து
மார்தட்டிக் கொள்ளும் இந்த பூமியில்
நீயும் நானும் கைகோர்த்த புரட்சி
இல்லாமல் போனால்
வரட்சியல்லவா அவர்கள்
வயிறும் வாழ்வும்.
என் வருகைக்கு
எதிப்புக் காட்டும் முகமாய்
குடையும் கூரையும் போட்டு
மறைந்து போகும் அவர்கள் மீதில்லா
அன்பும் ஆனந்தமும்
உன்மீது எனக்கதிகம் என்பதாலேயே
உன் ஓட்டைக்கூரை வழியே
உன் வீட்டுக்குள் வந்துவிடுகிறேன்.
[…]
ஏய் உழவுத் தோழா
எதிர்பார்ப்பு இல்லாமல்
உனக்குதவி செய்தாலும் இன்னும்
ஏழ்மை என்னும் நிலையில் நின்று நீ
என்றென்றும் என்னை மட்டுமே
எதிர்பாத்து நிற்கிறாய்
[…]
நீ என்னை நம்பி
கையை விட்டாலும்
மறையும் நான் உனக்காக
நாளையும் வருவேன்.
நன்றிக் கெட்ட உலகத்தில்
நம்பிக்கையை விட்டு விட்டால்
கைகொடுக்க யாருமில்லை புரிந்துகொள்.
மெய்யன் நடராஜ்
வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டியில் பாராட்டுக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதை .படம் வல்லமை மின்னிதழ்.