எனது தனிமையின் நாட்கள் - உதயா

அமைதியான இடமொன்றில்
இளங்காற்றின் தீண்டலில்
முதிர் நரைகளை ஒவ்வொன்றாக
விருட்சங்கள் கழற்றிவிட
ஆழ்மனதின் சஞ்சலங்கள்
சலங்கையுடன் எழத்தொடங்கின

நிகழ்வுகள் புரியா
வயதொன்றில் மலர்ந்த
தேன் சிந்தும் அருவிகளும்
ஆறாம் அறிவுதனின்
துளிர்தலில் உதிர்ந்த
தீப்பிழம்பு ஆழிகளும்
புன்னகையோடும்
கண்ணீரோடும்
மீண்டுமொருமுறை
பூத்துக்கிடந்தன

வெயிலோடு பிறக்கும்
நிழலினைப் போல
மெய்மறந்த கணங்களும்
மேய்யறுத்த இரணங்களும்
மண்மேல் மழையின்
சாரலோடு சேர்ந்த கீறலைப் போல
மனதில் படர்ந்து பரவிக்கிடந்தன

என் உறவிற்காக
நான் முறித்துக்கொண்ட
என் வாழ்க்கைகிளைகளும்
என் கடமையை மிஞ்சிய பாசத்தால்
அதில் துளிர்விட்டிருந்த
உறவுகளின் வாழ்வுகளும்
என்னை நிச நினைவில் மறந்து
அவர்களின் நிசமான கனவினில் நனைந்து
எம்மை அனாதையாக்கிய தருணங்கள்
என்னுள் சீற்றத்தை கொதிக்கவிட்டிருந்தன

நான் யார் யார்கோ பயன்பட்டும்
எனக்கு மட்டும் யாரும் பயன்படாமல்
தாகம் தீர்க்க ஒருவாய் தண்ணீரைகூட
பிறர் கரத்தினால் அருந்த முடியா
நாதியற்றவனாய் கலங்கிக்கொண்டு
இந்நொடியிலும் என் கண்ணீரால்
ஈக்களின் தாகத்தை தீர்த்தவாறே
என் தனிமையின் நாட்கள்
கழிந்துக்கொண்டிருந்தன

எழுதியவர் : உதயா (25-Sep-15, 5:22 pm)
பார்வை : 749

மேலே