உறைவிடம்-ரகு
பல நாட்கள் ஓய்வுற
இடமளித்திருக்கிறது
மேய்ப்பனின் விருப்பத்திற்குரிய
அந்தக் கல்லறை
சதா நிழற் கோலமிடும்
அரசமும்
ஸ்பரித்திராத நாளில்லை
அவனின் ஆழ் தூக்கத்தை
திரும்பித் திரும்பி
நோட்டமிடும்
சில ஆடுகளின் கண்கள்
வேலி தாண்டிவிடும்
யுக்தி கடந்து
தூக்கம் ததும்ப பேசும்
இவன் விழி மொழியிலும்
கொஞ்சம்
லயித்து நிற்கும்
மோவாய் தூக்கிய
ஓணானும்
கிளை பற்றிக் குனியும்
அணிலும்
எச்சமிட அங்கமர்ந்த
காகமும்
உற்றுநோக்கி
உணர்வு பருகும்
கனன்ற சூரியனின்
ஓர் வீரியமிக்க பகல்
இங்கு மட்டும்
கவிதையாகிக்
கமழ்ந்த போதும்
அவ்வழியே
சாரைசாரையாய்க்
கடந்து போகும்
வாகன மனிதர்கள் எவரும்
வாசித்து
நுகர்வதற்கில்லை
அவர்கள் பாசையில்
உணர்வற்றவர்களின்
உறைவிடமது