அவள் அப்படித்தான்
அவள் அப்படியே இருக்கட்டும்...
"ஒரு சாதாரணமானவளுக்கு அசாதாரணமான எதையும் பரிசளிக்க முயலாதீர்கள்...
அசாதாரணமான எதையும் போதிக்க முயலாதீர்கள்...
அசாதாரணமான எதையுமே...
பொருளாதார சுதந்திரத்தைச் சொல்லிவிடாதீர்கள்...
தன்மானத்தின் அவசியத்தை உணர்த்திவிடாதீர்கள்...
அடக்குமுறையை எதிர்ப்பதற்கு தூண்டாதீர்கள்...
அவள் மீதான துரோகத்தைச் சுட்டிக்காட்டாதீர்கள்...
அவளைப் புத்திசாலியாக மாற்ற முயலாதீர்கள்...
வீட்டுக்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்க்கும்படி அவளை அழைக்காதீர்கள்...
நல்லதொரு புத்தகம் எதையும் அறிமுகப்படுத்தாதீர்கள்...
பாரதியின் கவிதைகளை ஒருபோதும் அவளுக்குப் படித்துக் காட்டாதீர்கள்...
பெரியாரைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள்...
அவள் அப்படியே இருக்கட்டும்...
அவள் விரும்புவதும் அதைத்தான்...
உங்களால் முடிந்தால்,
அவளது முதுமையைத் தடுக்கும் மூலிகை எண்ணையோ
அல்லது
சிகப்பழகு கிரீமோ வாங்கிக் கொடுங்கள்...
பாரதியை விட அது அவளுக்குப்
பயனுள்ளதாக இருக்கக்கூடும்..."