பழிக்குப் பழி

’வாங்க சார். உட்காருங்க. சௌக்யமா?’

‘சௌக்யம்தான். ஆனா என்னை எதுக்காக இங்கே கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியலையே!’

‘கவலைப்படாதீங்க சார். ரிலாக்ஸ். உங்களை வெச்சு ஒரு சின்னப் பரிசோதனை செய்யப்போறோம்.’

’பரிசோதனையா?’

‘மறுபடி டென்ஷனாகறீங்களே. ஊசி போட்டு உங்களை டைனோசரா மாத்திடமாட்டோம் சார். இது ஒருவிதமான சோஷியல் டெஸ்ட்.’

‘ஃபேஷியல் தெரியும், அதென்ன சோஷியல்?’

‘அதாவது, ஒரு சமூக அமைப்புல இருக்கிற மக்கள் வெவ்வேற சூழ்நிலைகள்ல எப்படி நடந்துக்கறாங்க-ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யறோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!’

’சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?’

’இப்ப அடுத்த ரூம்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவர் உங்களோட பார்ட்னர்.’

‘அப்படியா? நான் அவரைப் பார்த்ததே கிடையாதே!’

’உண்மைதான். அவரும் உங்களைப் பார்த்தது கிடையாது. ஆனா இந்த விளையாட்டுல நீங்க ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ். சரியா?’

’ஓகே.’

‘இப்ப நான் உங்களுக்கு 100 ரூபாய் தர்றேன். இந்தத் தொகையை நீங்களே வெச்சுக்கலாம். இல்லாட்டி அடுத்த ரூம்ல இருக்கிறவருக்கு அனுப்பலாம்.’

‘முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் ஏன் பணம் அனுப்பணும்? இதை நானே வெச்சுக்கறேன்!’

‘கொஞ்சம் பொறுங்க சார். இந்தப் பணத்தை நீங்க அவருக்கு அனுப்பினா, நாங்க அவருக்கு எக்ஸ்ட்ராவா 4 மடங்கு காசு தருவோம், அதாவது 100 + 400 = 500 ரூபாய். இப்போ அவர் இந்தப் பணத்தைத் தானே வெச்சுக்கலாம், அல்லது உங்களுக்குப் பாதி, அவருக்குப் பாதின்னு பிரிச்சுக்கலாம்.’

‘அதாவது, நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தா, அவர் எனக்கு 250 ரூபாய் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இல்லையா?’

‘ஆமா. அதேசமயம், அவர் 500 ரூபாயையும் அவரே எடுத்துகிட்டு ஓடிப்போயிடவும் வாய்ப்பு இருக்கு.’

’உண்மைதான். நான் இப்ப என்ன செய்யறது?’

‘நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க சார். 100 ரூபாயை நீங்களே வெச்சுக்கறது பெட்டரா, அல்லது உங்க பார்ட்னரை நம்பி அதை விட்டுக்கொடுக்கறது பெட்டரா?’

சுவாரஸ்யமான விளையாட்டு. வந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த இன்னொரு ‘பார்ட்ன’ரை நம்புவதா வேண்டாமா என்று குழம்பிப் போனார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒருவேளை கிடைக்கலாம் என்கிற ரூ 250/-ஐ நம்பி, இப்போது கையில் இருக்கும் ரூ 100/-ஐ இழக்கலாமா? அது சரியான முடிவுதானா?

ரொம்ப யோசித்தபிறகு, சிலர் நூறு ரூபாயைத் தாங்களே வைத்துக்கொண்டார்கள். பெரும்பாலானோர் அந்த இன்னொரு மனிதர் நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அதை அவருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது, அந்த இன்னொரு மனிதரின் நிலையில் இருந்து யோசியுங்கள். திடீரென்று உங்களுக்கு ரூ 500/- (100 + 400) கிடைக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பிவைத்தவர் பக்கத்து அறையில் இருக்கிறார். நீங்கள் அந்தப் பணத்தில் பாதியை அவரோடு பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது ‘அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்’ என்று பீட்ஸா பார்ட்டிக்குக் கிளம்பிவிடுவீர்களா?

மறுபடியும், பலர் நியாயமாக நடந்துகொண்டார்கள். ரூ 250/-ஐப் பக்கத்து அறைக்கு அனுப்பினார்கள். மிகச் சிலர் ஐநூறையும் தாங்களே அமுக்கிக்கொண்டார்கள்.

இதனால், பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குக் கடுப்பு. ‘நான் இந்தாளை நம்பினேன். இவன் என்னை ஏமாற்றிவிட்டானே’ என்று கொதித்தார்கள். ‘ச்சே, அந்த நூறு ரூபாயை நானே வெச்சுகிட்டிருக்கணும்’ என்று பொறுமினார்கள்.

இப்போது, இந்த விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தவர்கள் பக்கத்தில் வந்தார்கள் ‘என்ன சார்? ரொம்பக் கோவமா இருக்கீங்கபோல!’

‘ஆமா சார், அந்தாள் செஞ்சது அநியாயமில்லையா?’

‘உண்மைதான். வேணும்ன்னா, நீங்க அவரைப் பழிவாங்கலாம்!’

‘பழிவாங்கறதா? அது எப்படி?’

‘அவர் உங்ககிட்டேயிருந்து அநியாயமா காசைப் பிடுங்கிட்டார். இல்லையா? அதுக்குப் பதிலா, நீங்க எங்களுக்கு 1 ரூபா கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்டேயிருந்து 2 ரூபாயைப் பிடுங்கிடுவோம். நீங்க 10 ரூபா கொடுத்தா அவர்ட்ட 20 ரூபாயைப் பிடுங்குவோம். 250 ரூபா கொடுத்தா, அவர் உங்களை ஏமாத்திச் சம்பாதிச்ச மொத்தக் காசையும் பிடுங்கிடுவோம். பழிக்குப் பழி! என்ன சொல்றீங்க?’

பாதிக்கப்பட்டவர்கள் யோசித்தார்கள், ’இந்த ஆளைப் பழிவாங்க நான் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்கவேண்டுமா? இதனால் எனக்கு என்ன லாபம்?’

இப்போது உங்களை அந்த இடத்தில் வைத்து பதில் சொல்லுங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்து அந்த இன்னொரு மனிதருக்குத் தண்டனை(?) கொடுப்பீர்களா?

மாட்டீர்கள். இல்லையா? இந்த விளையாட்டு மொத்தமும் சுத்த முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இல்லையா? இந்த அறைக்குள் வந்தபோது உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருந்ததோ, அதே அளவு காசு இப்போதும் இருக்கிறது. யாரும் உங்களிடமிருந்து காசைப் பிடுங்கவில்லை. சரிதானே? டெக்னிகலாக எந்தத் தப்பும் செய்யாத அந்த அடுத்த அறை மனிதரைத் தண்டிப்பதற்காக நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்தால் யார் முட்டாள்?

ஆனால், இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், பக்கத்து அறைக்காரரைத் தண்டிக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். தங்களுடைய கைக்காசு 250 ரூபாய்வரை செலவழித்து, அவரிடம் இருக்கும் 500 ரூபாயைப் பிடுங்கினால்தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது.

இப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. 250 ரூபாய் நஷ்டம்தான்.

அதனால் என்ன? நம்பிக்கை மோசடி செய்தவன் முறைப்படி தண்டிக்கப்பட்டுவிட்டான். அந்தத் திருப்தி போதுமே!

ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையின்போது, ’பழி வாங்கிய’ மனிதர்களுடைய மூளைக்குள் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ’என் காசு 250 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. தப்புச் செஞ்சவன் தண்டிக்கப்படணும்’ என்று யோசித்தபோது அவர்களுடைய மூளையில் சந்தோஷ உணர்வுகள் (feelings of pleasure) தூண்டப்பட்டதாம்!

இதை வாசித்தபோது எனக்குப் பகீரென்றது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள். சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கும்கூட தங்களுடைய சொந்தக் காசை / நேரத்தை / உழைப்பைச் செலவழித்து தப்புச் செய்த ஒருவரைப் பழிவாங்குவதில் குரூர சந்தோஷம் இருக்கிறது. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கு நாலு தர்ம அடி போடுகிற மனோநிலைதான் ’தப்புச் செஞ்சவங்களை விசாரணையெல்லாம் இல்லாம நிக்கவெச்சுச் சுடணும்’ என்பதில் வந்து நிற்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறவர்களெல்லாம் வழக்கொழிந்துவிட்டார்களோ?

நான் இந்த ஆராய்ச்சியைப்பற்றிப் படித்தது Dan Ariely எழுதிய ‘The Upside Of Irrationality’ என்ற அற்புதமான புத்தகத்தில். சுமார் 300 பக்க அளவு கொண்ட இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள், ஒவ்வொன்றின் பின்னணி, தாக்கம், சாத்தியங்களையெல்லாம் யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. மனித மனம் எப்படியெல்லாம் விநோதமாக, Irrational-ஆக இயங்குகிறது என்று வெவ்வேறு ஆராய்ச்சிகளுடைய துணையோடு மிக அழகாக, எளிமையாக விவரித்திருக்கிறார்.

Buy The Upside Of Irrationality: The Unexpected Benefits Of Defying Logic At Work And At Home Buy Predictably Irrational

இந்தப் புத்தகம், இதே ஆசிரியருடைய முந்தைய புத்தகமாகிய ‘Predictably Irrational’ இரண்டுமே நிஜமான முத்துகள். எல்லோரும் அவசியம் வாசிக்கவேண்டியவை.

இதுமாதிரி புத்தகங்கள் தமிழில் எப்போது வரும்? (மொழிபெயர்ப்பாகவேனும்!)

***

என். சொக்கன் …

21 12 2010

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன் (5-Oct-15, 12:01 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 246

மேலே