வாழு வாழ விடு - 1
ஒரு புள்ளியில் தொடங்கி மழலையாய்
ஒரு கோட்டில் தொடர்ந்து இளம்பிறையாய்
ஒரு கோலமாய் உருவாகி கன்னியாய் அல்லது காளையாய், பின்
ஒரு குடும்பமாய் உருமாறும் போது வாழ்க்கையிலே
எத்தனை எத்தனை மாற்றங்கள்...
அனுபவங்கள் செதுக்கப்படுகையில்
ஆசைகள் மட்டுப்படுகின்றன;
மனிதனின் வளர்ச்சி, மன வளர்ச்சி எனும்
அளவுகோலால் பார்க்கப்படும்போது
எத்தனை எத்தனை வித்தியாசங்கள்
வெளியிலிருந்து காண்கையில்!
உள்ளுக்குள் உணரப்படுவை யாவும்
ஓரளவு சரியாகத்தெரிவது சில காலம் தான்;
மற்றவர்களுடன் பழகிப்பார்க்கையில்தான்
சுயரூபத்தின் விஸ்வரூபம் தெரிய வரும்,
நானா இப்படி இருந்தேன் என்றொரு ஞானம்
நான் ஏன் அப்படி இருந்தேன் என்றொரு தன்னாய்வு.
நிலைக்கண்ணாடி காட்டாததை
மனக்கண்ணாடி காட்டும்போது தான்
கண்படாதது எல்லாம் தென்படும்,
மனம் புண்படும், பின் பண்படும்.
தெளிந்து வாழ்தலே வாழ்வு.
தவறு செய்பவனே மனிதன்
உணர்ந்ததெல்லாம் திருத்தி கொண்ட பின்னரே
முழுமையினை நோக்கி நகர்கிறான், எனினும்
முழுமையினை எல்லோருமே அடைவதுமில்லை.
அது தான் இந்த வாழ்வின் வியத்தகு படைப்பாகும்.
வாழு வாழ விடு என்பதன் பொருளே எல்லாம் இங்கு வேண்டும்
நல்லதை தேடும் வாழ்வு கெட்டதில் சுழலும் வாழ்வு
தேடலும் தவித்தலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்
நிலை தான் வாழ்வு, இறுதி வரைக்கும்.
கல்லாய் கிடந்த கடவுளில் உருவம் காண உளி கொண்டு
செதுக்க செதுக்க சிற்பமாகிறான் இறைவன்...
ஏழ்பிறப்பும் மண்ணில் இருந்து மனிதன்
உருமாறி தடுமாறி உணர்வில் சீராகி சிறப்பாகி
உயர்வை நோக்கிய பயணமே வாழ்வு.
(தொடரும்)