கிழிந்து கிழியாத பக்கங்கள் ------முஹம்மத் ஸர்பான்
கிழிந்து கிழியாத பக்கங்கள்
----------------------------------------------
குயில்களின் கூட்டுக்குள்
காக்காய்கள் கரைகின்றது.
சிங்கத்தின் ராஜ்ஜியத்தில்
மான்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
***
ஆமையும் நத்தை ஓட்டுக்குள்
நுழைய பங்கு கேட்கிறது.
கொட்டப்படும் மழைத்துளிகள்
எங்கே விழுவதென்று சிந்திக்கின்றன.
***
நீலக்கடலிலுள் மூர்ச்சையாகி
கரை ஒதுங்குகிறது மனித மீன்கள்.
ஜடமாகியும் விலை போகிறது
சந்தையிலுள் வலை மீன்கள்.
***
தாய் நாட்டில் உரிமையிழந்தவன்
பாலைவன ஒட்டகமானான்.
மந்தைகளுக்கும் இடமுண்டு.அடைகாக்க,
ஆறறிவு மந்தைகளுக்குத்தான் மனமில்லை.
***
மதப்போரின் சடலங்கள்
மண்ணுக்கு போர்வையாகிறது,
ஓதப்படுவதோ இங்கே
பேதமற்ற ஒருமைப்பாடு.
***
கருவறை பிளந்து சேய்
பார்த்தது அறிவின்மைக் காலம்.
தாயை வெட்டி சேய்
உடமை பறிப்பது நிகழ்காலம்.
***
பிணக்காடுகள் நிரம்பிவிட்டது,
கடல் நிலமும் வற்றிவிட்டது.
மண்ணில் உதிரவலைகள்
வேகமாய் சங்கமமானதால்....,
***
துப்பாக்கி முனையின் விளிம்பில்
அகிலம் அடிமையாயிற்று..,
நரமாமிசம் உண்ணும் மிருகங்களும்
தவறுதலாக மண்ணில் பிறந்து விட்டது.
***
அன்று மிருகத்தை வதை
செய்து நிர்வாணம் போக்கினார்கள்.
இன்று மனிதனே மனிதனை
அழிப்பதால் காலமும் ரசிக்கிறது.
***
சிலுவை ஏந்தி குற்றம்
செய்தவன் விடுதலையாகிவிட்டான்.
நீதிமன்றத்தின் சட்டக் கூண்டுக்குள்
கைதியாகி நிற்பதோ நான்கு வேதநூல்கள்.
***
கூண்டுக்கிளிகளை சிலந்தி
வலைகள் விழாமல் பிடித்துக்கொள்ளலாம்.
ஐந்தறிவு மிருகமும் ஆறறிவு மனிதனாய்
மாறாத வரையில்...........,
***
உதிரம் படிந்து சலவையாகாத
நோட்டுக்கள் தான் ஒருவனின்
ஆயுளை தீர்மானிக்கும்
காலக் கணிதமாகிறது.
***
பெண் தேகம் காமநாய்களால்
கடித்து துப்பப்படுகின்றது.
அநீதிக்கு கண் கட்டப்பட்ட நீதி
தேவதையும் விளக்குப் பிடிக்கின்றாள்.
***
தலை வலியென வைத்தியசாலை
சென்றவன் பிரதமாகி வீடு வந்தான்.
பாமரனின் திசுக்கள் திருடப்பட்டன,
வைத்தியனும் அறியாதவற்றை நோய்கள் என்கின்றான்,
***
வாழ்க்கை துளித்துளியாய்
வற்றிக் கொண்டிருக்கிறது,
நிம்மதிக்காய் மண்ணறை வீடுகளும்
மரணச்சாவியால் திறக்கப்படுகிறது.
***
மனித இனத்தின் புத்தகத்தில்
எண்ணற்ற விடையில்லா கேள்விகள்
அவற்றில் இவையே...........!
கிழிந்தும் கிழியாத பக்கங்கள்.
***