கண்ணீர்க் கூடு
ஜன்னலுக்கு பக்கத்திலே
ஜன்னலில்லாத வீடு...
அதுதான்
பறவையின் கூடு...
காற்றடித்தாலும்
மழைபெய்தாலும்
கூட்டை சிறிது கூட
அசைக்கமுடியாது...
மூன்று நாள் விடுப்பில்
ஊருக்குச் சென்றிருந்த குடும்பம்
அன்று தான்
வீடு வந்து சேர்ந்தது...
வந்ததும்..
முதல் வேலையாய்
கூட்டை கலைத்துப் போட்டான்...
முட்டையை உடைத்துப் போட்டான்...
இயற்கையை புரிந்து வைத்திருந்த பறவையால்
மனிதனை
துளிகூட புரிந்து கொள்ள முடியவில்லை...
அது
பக்கத்தில் பூட்டியிருந்த
இன்னொரு வீட்டு ஜன்னலில்
தனக்கான புதுக்கூட்டை
கட்ட ஆரம்பித்தது
கண்ணீருடன்....