இலக்கியவாதிகள் தான் விஞ்ஞானிகளுக்கு யோசனை சொல்லவேண்டும்- நம்மாழ்வார்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்த ஊர். அண்ணாமலை, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., அக்ரி பட்டப்படிப்பு படித்தவர்.

கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் பணி செய்த இவர், இயற்கை வழி விவசாயத்திற்காக பணியைத் துறந்தார். பிறகு நோபல் பரிசு பெற்ற dominique pyre என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர். இதுவரை Leisa, kudumbam உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உறுவாக்கியவர்.

எழுபது வயதை எட்டியிருக்கும் நம்மாழ்வாரை திருச்சி திருவானைக்கோயிலில் உள்ள அவரது வீட்டில் தீராநதிக்காக சந்தித்தோம்.

தீராநதி : பூமி சூடாகி விட்டது. பருவ காலங்களில் பெருத்த மாறுதல்கள் உண்டாகிவிட்டன. இதனால், தன் இயல்பான தன்மையிலிருந்து பல்வேறு மாறுதல்களை உயிரினங்கள் சந்திக்கப் போகின்றன. உணவுகளில் ஊட்டச்சத்து இல்லை. சுகாதாரக் கேடு அளவுக்கு அதிகமாக அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தினம் தினமும் பல்வேறு அதிரடிச் செய்திகள் தினசரிகளில் சூழலியல் பற்றி வெளி வந்து கொண்டே இருக்கின்றன. மக்களும் வழக்கமாக படித்து விட்டு வழக்கம் போல் உண்டு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம் எந்த அளவுக்கான அபாயச் சூழலில் இருக்கின்றோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இப்போது கிட்டத்தில் சந்தித்த செய்தி படிக்கிறேன் கேளுங்கள் : ‘‘அழுகிய நெற்பயிற்களை அகற்ற டபுள் செலவு _ மத்தியக் குழுவிடம் நெல்லை விவசாயிகள் வேதனை.’’ ஒன்று : நெல்லிலிருந்து விவசாயிக்கு வர வேண்டிய வருவாய் போய்விட்டது. இன்னொன்று: அழுகினதை அள்ளிப் போட்ட பிறகு நிலத்தைச் சுத்தம் செய்ய வேண்டிய கூடுதலான வேலையன்று வந்து சேர்ந்திருக்கிறது. இது வரைக்கும் நம் மாநிலத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் எல்லாம் மழையே பெய்தது கிடையாது. இது கோடைகாலம். நல்ல வெயில் அடிக்க வேண்டிய காலம். வெயில் அடிக்க வேண்டிய காலத்தில் மழை கொட்டுகிறது. அப்போது இது எதைக் காட்டுகிறதென்றால், பருவகாலங்கள் மாறிப் போய்விட்டதைக் காட்டுகிறது. இன்னொன்றை இங்கு நான் குறிப்பிட ஆசைப்படுகிறேன். 1987_ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ‘‘இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று’’ சொன்னார். இதை அவர் 1987_ல் சொன்னார்.

ஏன் என்று நான் கேட்டதற்கு, ‘‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள ‘டீ’ தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை’’ என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.

இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்க கூடிய அளவிற்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை. அதையெல்லாவற்றையும்தான் இவை கூட்டிக் காட்டுகின்றன.

தீராநதி : காடுகள் அழிக்கப்பட்டு வருவதைப் பற்றியும், மரங்கள் வெட்டப்படுவதினால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் பேசினீர்கள். எனக்குத் தெரிந்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை விட, தமிழகத்தின் ஆனைமலை, முதுமலையில் புலியின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டு கணக்கீட்டின் விவரப்படி புலி உள்ள ஒரு காடு ஆரோக்கியமான காடாக கணக்கிடப்படுகிறது. ஒரு காட்டில் ஒரு புலி உள்ளதென்றால், பல நூறு மான்களும், காட்டு எறுமைகளும் அந்தக் காட்டில் வசிக்கின்றன என்பது பொருள். ஏழெட்டுப் புலிகள் உள்ள காட்டில் மான்கள், காட்டு எறுமைகள், யானைகள், ஓநாய்கள், பன்றிகள், நரிகள் என்று ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதாக பொருள் கொள்ளப்படும். ஏனென்றால், பல்வேறு விலங்கினங்கள் இருந்தால்தான் அவற்றை வேட்டையாடி ஒரு புலி ஆரோக்கியமாக வாழமுடியும். அதே போல சோலைக் காடுகளில் மணல்களின் உற்பத்தி ஒரு இன்ஞ்ச் வளர்ந்திருப்பதாக ஆர்வலர்கள் சொல்கிறார்கள் (தகவல் : ஓசை என்ஜிஓ). இவையெல்லாம் நீங்கள் அறிந்த ஒன்று தான். என்னுடைய கேள்வி என்னவென்றால்... மற்ற மாநிலத்தைக் காட்டிலும் வனப்பகுதிகளின் வளர்ச்சி விகிதம் தழைத்து வரும் மாநிலத்தின் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமங்கல காட்டைக் கிழித்து இரயில் பாதை அமைக்க வேண்டும் என்கிறார். வன உயிரினங்கள் ஜீவிக்கக்கூடிய வனப்பகுதிக்குள் மனித குல சௌகர்யத்திற்காக நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் பற்றிய போதிய படிப்பறிவே இல்லாத மந்திரிகள் இருக்கும் நாட்டைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இதில் உங்களுடைய வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும். இங்கு அறிவே வெளிப்படவில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில், நாம் எதைப் பேசினால் மக்களுடைய ஆதரவு எனக்கு கொஞ்சம் கூட வரும். என்னுடைய பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓட்டு விழும். அதை மட்டும்தான் யோசித்துப் பேசுகிறார்களே ஒழிய வேறு எதையும் யோசித்துப் பேசவே இல்லை. மக்களுக்கு நலமென்றால் அது எதில் இருக்க முடியுமென்றால் குறிஞ்சி, குறிஞ்சியாக இருக்க வேண்டும். முல்லை, முல்லையாக இருக்க வேண்டும். மருதம், மருதமாக இருக்க வேண்டும். நெய்தல், நெய்தலாக இருக்க வேண்டும். இதை இளங்கோவடிகள் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார். தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கிறது. திருவள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்திருக்கிறோம். திருவள்ளுவர் என்ன சொன்னார் என்பது பற்றி யோசிக்கவே இல்லை. ‘‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’’ என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய பாதுகாப்பு என்றால், அது காடும் சேர்ந்ததுதான். காடு இருந்தால்தான் தண்ணீர் வரும். தண்ணீர் இருந்தால்தான் மக்களுக்கு வாழ்க்கை இருக்கும். ஆக, மக்களுக்கு அறிவில்லை. ரோடு போட்டு முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று ஒருவர் பேசினால் இதைவிட முட்டாள் தனம் ஒன்று இருக்கவே முடியாது. நம்முடைய மடமைக்கு அளவே இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரும்பாலான மக்களுக்கு இந்த அறிவைக் கொண்டு போய் சேர்த்து இதனால் நமக்கு அழிவு வரும் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, பிறகு நாம் எல்லோரும் சேர்ந்து வரப்போகும் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வைத்தான். அந்த வேலையை மட்டும் தான் இப்போதைக்கு நம்மால் செய்ய முடியும்.

நாம் இவ்வளவு பேசுகிறோம் இல்லையா? இவையெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரியாதென்று நாம் சொல்ல முடியாது. எல்லோரும் மனு கொடுத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது. இவையெல்லாம் அறிந்து கொண்ட பிறகும், இவர்கள் செய்யும் தவறுகளைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ஒவ்வொரு தடவையும் கூட்டவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு: எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையெல்லாம் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையில் இருக்கின்ற தொழிற்சாலைகள் என்ன செய்கின்றன? ஆற்றிலிருக்கின்ற நீரை தொழிற்சாலையின் உள்ளே இழுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன்னுடைய கழிவு நீரையெல்லாம் ஆற்றினுள் விடுகிறது. இந்தக் கொடுமை எந்த மந்திரிக்குத் தெரியாது சொல்லுங்கள்? எதிர்க் கட்சியாக இருக்கும் போது மந்திரிக்குத் தெரிகிறது. ஆளுங்கட்சியான பின்பு தெரியமாட்டேன் என்கிறது. ஆக, அவர்களின் நடத்தையில், பண்பிலுள்ள குறைபாட்டை நாம் பார்க்கிறோம். அதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. குற்றவாளிகளை நீங்கள் குற்றவாளி என்று சொன்னால், அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் ஒரு குடியாட்சி நாட்டில் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. மக்கள் இதைப் புரிந்து கொண்டார்கள் என்றால், மக்களே இதைத் தடுத்து நிறுத்துவார்கள். நம்முடைய வேலை அங்குதான் இருக்கிறது.

தீராநதி : தொழிற்சாலைகள் மூலமாக நடக்கின்ற சீர்கேடுகளைப் பற்றி விரிவாகப் பேசினீர்கள். இந்தத் தருணத்தில் சமீபத்தில் நடந்த நந்திகிராம் பிரச்னை என் ஞாபகத்திற்கு வருகிறது. 1946_47 காலங்களில் நிலப்பிரபுத்தத்துவத்திற்கு எதிரான ‘தெபாகா’ போராட்டத்தின் வீரமிக்க வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள் அம்மக்கள். நந்திகிராமில் 1942_டிசம்பர் 17ஆம் நாள் இருப்புக்கு வந்த ஜட்டியா சர்க்கார் (மக்கள் அரசு) 1944 டிசம்பர் வரை நீடித்தது. மகாத்மா காந்தியின் வேண்டுகோளின்படி 1944_ம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று இந்தப் போட்டி அரசு கலைக்கப்பட்டது. இப்படி நெடிய பாரம்பரியமுள்ள ஒரு மக்கட் கூட்டத்தினை, பெரும் முதலாளிகளுக்காக பொருளாதார வளர்ச்சி, என்ற பெயரில் சூறையாடியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆளும் மேற்கு வங்க அரசு. ஏறக்குறைய 150,000 பேர் வாழ்வாதாரத்திற்காக சார்ந்திருக்கும் நிலத்தை அபகரித்து சுமார் ஆயிரத்திற்கும் மேலான நபர்களுக்கு வேலை தருவதாக கூறியது. இதே கருத்தியலுக்குள் தமிழக அரசு வரத் தொடங்கி இருக்கிறது. இதில் நடக்கும் மோசடிகள் குறித்துப் பேசுங்களேன்?

நம்மாழ்வார் : நீங்கள் நிறைய உட்கட்சி அரசியலுக்குள் சென்றுவிட்டீர்கள். இந்த நேரத்தில் உட்கட்சி அரசியலை விமர்சிப்பது சரியாக இருக்காது. ஆனால் நான் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்: காந்தி என்ன நந்திகிராமுக்கு மட்டுமா இருந்தார். இந்தியா முழுவதற்கும்தான் சுதந்திரம் கேட்டார். இந்தியா முழுவதும் காந்தியவழியில்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியா காந்திய வழியில் போய் கொண்டிருக்கிறதா? காந்தியைக் குழி தோண்டிப் புதைக்கின்ற வேலைகளை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்துக் கொள்ளுங்கள் இதை.

தீராநதி : நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், நந்திகிராம் என்பது பெரிய பாரம்பரியம் உள்ள பகுதி அது...

நம்மாழ்வார் : இடத்தையும், ஆளையும் குறிப்பிடாதீர்கள். இன்றைக்கு காந்தி பெயரைச் சொல்பவர்கள்தான் ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அக்டோபர் இரண்டாம் தேதியும், ஒவ்வொரு ஜனவரி 30_ம் தேதியும் காந்தி சமாதியில் போய் மலர்வளையம் வைப்பதுதான் இவர்களுடைய வேலையாகவே இருக்கிறது. அன்றைய தினம் ஒவ்வொரு ஆட்களும் போய் மலர்வளையம் வைத்துவிட்டு வந்ததுதான் செய்தித்தாள்கள் முழுவதும் செய்தியாக வெளி வருகிறது. எல்லா நான்கு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் சிலையாக உட்கார்ந்திருக்கிறார் காந்தி. இவருக்கு மாலை போடுவதுதான் இவர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. அப்போது இந்தியா முழுமைக்குமாக யோசியுங்கள்? யார் காந்தியின் தோள் மீது ஏறி நிற்கிறார்களோ அவர்களே காந்தியைப் புதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆக, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றியும் நாம் இங்குப் பேச வேண்டாம்.

தீராநதி : சரி, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றியும் பேச வேண்டாம். ஒட்டுமொத்த இந்திய அரசியல் பற்றியே பேசுங்கள்?

நம்மாழ்வார் : ஒட்டுமொத்த இந்திய அரசியல் மக்கள் விரோத போக்காக போய்க் கொண்டிருக்கிறது. இந்த மண்ணிற்கு விரோதமான போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய வரலாற்றை குழிதோண்டி புதைக்கிறது. அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.

தீராநதி : தொழிற்சாலைகளுக்காக தாரை வார்க்கப்படும் விளைநிலங்கள் பிற்காலத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?

நம்மாழ்வார் : இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு அரசு, செய்தித் தாள்களில் எத்தனையோ லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறது. என்ன கொடுத்திருக்கிறது? ஒன்றிற்கும் உதவாத நிலத்தைக் கொடுத்திருக்கிறது. அதாவது, விவசாயத்திற்கு உதவாத நிலத்தைக் கொடுத்திருக்கிறது. சுடுகாட்டு பூமியைக் கொடுத்திருக்கிறது. அவர்களே சொல்கிறார்கள். ‘நிலத்தை நாங்கள் திருத்திக் கொடுத்திருக்கிறோம்’ என்று. ஆனால் மத்தியில் இருக்கின்ற உணவு அமைச்சரும், நிதியமைச்சரும் பிரதமரும் சேர்ந்து என்ன சொல்லி இருக்கிறார்கள். ‘‘சின்ன விவசாயி நிலத்தை விட்டு வெளியில் போய்விட வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்கள். யாரை நிலத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்று மத்தியில் உள்ளவர்கள் சொல்லி இருக்கிறார்களோ அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றால், நிலத்தை பிடுங்கிக் கொள்ளப் போகிறார்கள். நிறைய வசதியாக இருப்பவன் நிறைய நிலம் வைத்திருக்கிறான். காலங்காலமாக விவசாயம் நடந்து வரும் நிலம். ஆற்றோரத்து நிலம். விளைச்சல் நிலம். இப்போது அதை விற்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். அதை வாங்கியல்லவா சின்ன விவசாயிக்குக் கொடுக்க வேண்டும்? விவசாயத்திற்கு லாயக்கு இல்லாத நிலத்தைக் கொடுத்தால் அவன் ‘இது’ விவசாயத்திற்கு லாயக்கற்றது என்று போட்டுவிட்டுப் போய் விடுவான். அதைப் புடுங்கி தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துவிடலாம். மறுபடியும் தொழிற்சாலைகளுக்குக் கொடுப்பதற்காகவேதான் இந்த ‘தரம்’ குறைந்த நிலங்களை சிறு விவசாயிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதையுமே மக்கள் நலத்திற்காகவே செய்யவில்லை. நீங்களே யோசித்துப் பாருங்கள்?

அப்புறம் இன்னொன்றைப் பார்ப்போமா? இந்த நாட்டில் இன்னமும் 28 கோடி பேர் பசியோடு தூங்கப் போகிறார்கள். 28 கோடி பேர்! இவர்கள் சதவீதம் சதவீதம் என்று சொல்வார்கள். சதவீதத்தில் சொன்னால் உங்களுக்குப் பெரியதாகத் தெரியாது. 75 சதவீதம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சோகை’ நோய் இருக்கிறது. இரத்தத்தில் இரும்புச் சத்து இல்லை. 57 சதவீதம் குழந்தைகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை. வைட்டமின் ‘கி’ பற்றாக் குறையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமென்றால், தாய் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. நம்மால் சத்தான உணவைக் கொடுக்க முடியவில்லை. அப்புறம் எதை வைத்து ‘வளர்ந்து விட்டோம். வளர்ந்து விட்டோம்’ என்று சொல்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு என்ன இல்லையென்று பார்த்தோமேயானால், அவர்களுக்கு என்று தனி சொத்து கிடையாது. அப்போது அவர்கள் பொது ஆதாரத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் ஆடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. அவர்களின் மாடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. இவர்கள் விறகை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. தண்ணீரை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாவற்றையும் தனியாரிடத்தில், ஒரு முதலாளி இடத்தில் ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது வறுமைக் கோட்டிற்கு உள்ளே இருக்கின்ற கோடானுக்கோடி மக்களை அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை விளிம்புக்கு வெளியே இருக்கின்ற மக்கள் என்று சொல்வார்கள். அவர்களை மேலும் சாவை நோக்கித் தள்ளுவதற்குத்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும். ஆக, கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும். மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றிற்கும் தவிர, வேறு எதற்கும் கிராமத்தின் நிலத்தை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால், வேறு ஏதோ ஆதாயம் கருதி செய்கிறார்கள் என்று அர்த்தமே தவிர நாட்டு நலனுக்காக செய்வதற்காக அல்ல; அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

தீராநதி : இலவச நில மனைப்பட்டாக்கள் பற்றி நீங்கள் பேசியதால் எனக்கு அமார்த்யா சென் சொன்ன தகவல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அமார்த்யா சென், இந்தியா மற்றும் பிற நாடுகளில் பஞ்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். உணவு கிடைக்காமையினால் பஞ்சம் உருவாகவில்லை என்று அவரது நூலில் நிரூபித்திருக்கிறார். நிலப்பட்டா வழங்குவதில் உள்ள கோளாறுகளே பஞ்சங்களின் காரணம் என அதில் வாதிடவும் செய்கிறார். இந்தியாவில் பட்டினிச் சாவுக்குப் பலியாவது உணவு இல்லாததால் அல்ல; இருக்கும் உணவுக்கான உரிமை அவர்களுக்கு இல்லாததே. இன்று ஆப்பிரிக்கா, சஹாரா பகுதி முழுவதும் உள்ளதை விடக் கூடுதலான இந்தியர்கள் போதிய ஊட்டமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு மேல் போதிய எடையின்றி உள்ளனர் என்கிறார் அவர். சர்வதேசக் குழந்தை உணவுச் செயல்பாட்டுக் கூட்டிணைவு (மிஙிதிகிழி இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஸன் நெட்வொர்க்) என்ற அமைப்பு மூன்றாம் உலக நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடியும் ஒரு குழந்தை பாதுகாப்பற்ற புட்டிப்பால் அருந்தி இறக்கிறது என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்தால் தகும் என்று நீங்கள் அறிவுரை சொல்ல முடியுமா?

நம்மாழ்வார்: அமார்த்யா சென் சொல்லும் சில தகவல்கள் நமக்கு உபயோகமாக இருக்கிறது. இது ஆட்சியாளர்களின் கண்களைத் திறப்பதற்கு உபயோகப்படும். அதற்கு மேல் உபயோகப்படாது. ஏனென்றால், வெளிநாட்டில் படித்து விட்டு வெளிநாட்டில் உள்ளதைப் போல இங்கேயும் பொருளாதார கணக்குகளையெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதில் மிக முக்கியமான விஜயம். ‘‘நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். ரொம்ப வளமான நாடு கலிபோர்னியா. வளமே இல்லாத இடம் சஹாரா பாலைவனம். இந்த இரண்டும் இந்தியாவில் இருக்கிறது. அப்போது இதை எப்படி ஒரு தேசம் என்று சொல்லுவீர்கள். ஒன்றுமே இல்லாத மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். வசதியைக் குவித்துக் கொண்ட சில மக்கள் மேலே இருக்கிறார்கள். ஆக, கலிபோர்னியாவும் இங்கு இருக்கிறது. சஹாராவும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் அமார்த்யா சென். அதை அப்படியே நாம் எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் அது ரொம்ப நல்ல விஷயம். ஒரு பொருளாதார மேதை பார்வையில் பட்டிருக்கிறது.

இன்னொன்றையும் அவர் சொல்கிறார். ‘‘பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. வீடுகளில் பூட்டு தொங்குகிறது. ஏனென்றால் வாழ வழியின்றி குடும்பம் இடம் பெயருகிறது. கூடவே குழந்தைகளும் போக வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தைக்கு ஐந்தாம் வகுப்பு வரையாவது படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லை’’ என்று அவர் வருத்தப்படுகிறார். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், ஐந்தாம் வகுப்பு வரை படித்து என்ன செய்யப் போகிறது அந்தப் பிள்ளை. இங்கு பி.ஏ., வரை படித்தவன் என்ன செய்துவிட்டான். இதை ஒரு அளவாகப் பார்ப்பதில் ஒரு பிரயோஷனமும் கிடையாது. இந்தியா ஒன்றும் இங்கிலாந்து அல்ல; இங்கிலாந்தில் நான்கு மாதங்கள்தான் வெயில் அடிக்கும். இங்கு 12 மாதமும் வெயில் அடிக்கிறது. ஒருவனிடம் தண்ணீரையும் நிலத்தையும் கொடுத்துவிட்டால் அந்தக் குடும்பம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் வயதானவன் வரை அந்நிலத்தில் வேலை செய்வார்கள். அவ்வளவு ஏன் அவன் கழிக்கும் மலம் ஜலமே செடி கொடிகளை வளர்த்து விடும். அதானே எரு. அவன் வைத்திருக்கும் ஆடு சாணி போடும். மாடு சாணி போடும். ஆட்டு பாலை குழந்தை குடிக்கும். மாடு கொடுக்கும் பால் தயிராகி அவர்களின் சாப்பாட்டிற்கு சேரும். சக்தி தரும் ஒரு முருங்கை மரம் போதும் அவர்களுக்கு. ஒரு பப்பாளி மரம் போதும் அவர்களுக்கு. இவர்களுக்கு நிலமே இல்லாத வேலைகளைத்தான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் செய்கிறது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இன்றைக்கு வளர்ச்சித் திட்டம் என்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோமே, அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். போட்டதை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி நிற்க வேண்டும். எங்கிருந்து நாம் தப்பு செய்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிப் போனதற்கு பிற்பாடுதான் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்கு நம்முடைய தப்பு ஆரம்பித்ததென்றால், ‘பசுமைப் புரட்சி’யில்தான் ஆரம்பித்தது. பசுமைப் புரட்சிக்கு முன்னால் என்ன நடந்ததென்றால், நான் என்னுடைய அப்பா நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வயலில் வேலை செய்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும். பதினொன்றாம் வகுப்பு வரையிலும் அப்படித்தான் போனோம். அன்றைக்கு என்னுடைய அப்பா என்ன செய்யவில்லை என்றால் விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை. அவர் டவுனிலிருந்து விவசாயத்திற்காக ஏதாவது வாங்கி இருந்தால் அது: கொழுவடிப்பதற்காக இரும்பு வாங்கி இருக்கிறார். கடப்பாறை வாங்கி இருக்கிறார். அறிவாள் வாங்கி இருக்கிறார். மண்வெட்டி வாங்கி இருக்கிறார். ஆக, இரும்புச் சாமான்கள் மட்டும்தான் வெளியில் வாங்கியது. மற்றபடி எங்கள் வயல்வெயில் இருக்கின்ற இலை தழைகளையே எருவாகப் பயன்படுத்திக் கொண்டோம். வரப்புகளில் இருந்த மரத்தை வைத்தே வீட்டிற்கு கட்டில், ஜன்னல், கதவு, பீரோ, வண்டி என்று சகலத்தையும் செய்து கொண்டோம். உள்ளூர் ஆசாரியார் இவற்றை அழகாக செய்து கொடுத்து விட்டார். நாங்கள் அதற்கு ஈடாக களத்தில் நெல் அடிக்கும் போது அரிசி, சாப்பாடு என்று கொடுத்துவிட்டோம். முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுப் பெண்தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தார். அவருக்கு நெல் கொடுத்தோம். இராத்திரி சாப்பாடு எங்கள் வீட்டிலிருந்து தான் அவர் வீட்டிற்குப் போகும். இப்படித்தான் எல்லோரும் பகிர்ந்துண்டோம்.

எங்கள் அப்பா எங்கள் தாத்தா கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பத்து ஏக்கராக மாற்றி, அவரது நான்கு மகன்களுக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் ஒரு ஏக்கரை விற்று பையனை இஞ்ஜினீயரிங் காலேஜுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஏக்கரை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு விவசாயி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வேண்டியதுதான். இதற்குக் காரணம் பசுமைப்புரட்சி. அந்தப் பசுமைப்புரட்சி என்பது எல்லாவற்றையும் வெளியில் வாங்கிச் செய்யும் விவசாயமாக மாற்றி விட்டது. கிராமத்தை உறிஞ்சுவது, சுரண்டுவது என்பது பசுமைப்புரட்சியிலிருந்துதான் ஆரம்பமானது.

தீராநதி : அன்றைக்கு ஏற்பட்ட உணவு பற்றாக் குறையினால் பலர் செத்து மடிந்து கொண்டிருந்தார்கள். உணவு உற்பத்தி போதுமான தேவைக்கு ஏற்ற அளவில் இல்லை. ஆகவே பசுமைப்புரட்சி என்ற திட்டத்தால் தான் வறுமையை ஒழித்திருக்கிறோம். இந்த நிலைமையைச் சரி செய்திருக்கிறோம். அதிலிருந்து பிழைத்து மீண்ட தெம்பில்தான் இவர்கள் இன்றைக்கு விமர்சிக்கிறார்கள் என்று அந்தத் தரப்பிலிருந்து எதிர்வாதம் வருகிறதே?

நம்மாழ்வார்: நீங்கள் விவசாயம் படித்திருக்கிறீர்களா?

தீராநதி : இல்லை.

நம்மாழ்வார் : விவசாயம் செய்திருக்கிறீர்களா?

தீராநதி : இல்லை. (ஆனாலும் ஒரு விவசாயியாக வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.)

நம்மாழ்வார் : உங்களைப் போல உள்ளவர்களுக்குப் புரியவே புரியாது. ஏனென்றால், அவன் வந்து பொய் சொல்கிறான். இங்கே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மந்திரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயம் தெரியாது. விஞ்ஞானமும் தெரியாது. அப்போது அவர் என்ன செய்கிறார். விஞ்ஞானியிடம்தான் யோசனை கேட்கிறார். அப்போது அந்த விஞ்ஞானி என்ன செய்ய வேண்டும்? விஞ்ஞான பூர்வமாக பதில் சொல்லவேண்டும். அன்றைக்கு ஏன் விளைச்சல் அதிகமாக இல்லை என்பதை விஞ்ஞானபூர்வமாக அவர் சொல்ல வேண்டும். அவன் விஞ்ஞானபூர்வமாக ஒரு பதிலைச் சொல்லாமல் இப்படி மேலோட்டமான ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறான். நான் வரலாறு முழுவதும் படித்திருக்கிறேன். நம்ம விவசாயப் பெண்ணிடம் உட்கார்ந்து பேசி இருக்கிறேன். விவசாயப் பெண் பள்ளிக்கூடம் போய் இருக்க மாட்டாள். அவள் ஒரு விடுகதை போட்டாள். என்ன விடுகதை போட்டாள். ‘அடி காட்டுல. நடு மாட்டுல. நுனி வீட்டுல.’ அறுக்கும்போது அடியில் இருக்கின்ற கட்டையை காட்டில் விட்டோம். நடுவில் உள்ளது மாட்டிற்குச் சென்று விட்டது. நுனியில் உள்ளது வீட்டிற்கு வந்துவிட்டது. அடிக்கட்டைக்கு விவசாயி காசு செலவழிக்கவில்லை. நடுவில் இருந்த மாட்டிற்கு காசு செலவழிக்கவில்லை. வேண்டாததை மண்ணிற்குக் கொடுத்தார். வேண்டாததை மாட்டிற்குக் கொடுத்தார். பால் வீட்டிற்கு வந்தது. சாணி மண்ணிற்குப் போய்விட்டது. பயிர் விளைந்து கொண்டே இருந்தது. அப்போது விளைந்தது வீட்டில் இருந்தது. நீங்கள் கடனை வாங்கி, கடனுக்கு யூரியாவையும், டிஏபியையும் போட்டதால் நிறைய விளைந்திருக்கிறது. ஆனால், விவசாயி கையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் விளைந்ததை விற்று கடன் அடைத்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 112 கோடி பேர்களில் 65 சதவீதம்பேர், அதாவது 73 கோடி பேர் கிராமத்தில்தான் உள்ளோம். இந்த 73 கோடி பேர்களை கிராமத்தில் பட்டினி போட்டுவிட்டு அப்புறம் என்ன நீங்கள் விளைய வைக்கவில்லை.. விளைய வைக்கவில்லை என்று வாயாடுகிறீர்கள். இங்கே எல்லோருக்கும் எங்கே சாப்பாடு போட்டீர்கள்.

இப்போது தானே சொன்னேன் 28 கோடி பேர் இன்னமும் பசியோடு தூங்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று. இதை நான் சொல்லவில்லையே? தேசிய உழவர் கமிஷன் தலைவர் சாமிநாதன் அவர்கள்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை மந்திரி சபையிலேயே இருக்கிறது. ஆக, பொய் சொல்வது நழுவுவது இதையெல்லாம் விஞ்ஞானிகள் செய்யக் கூடாது.

இந்த ரசாயனப் பொருட்களை நிலத்தில் போட்டதால் நிலம் உப்பாகப் போய் இனிமே ஒரு தானியம் கூட இருக்க முடியாது. இதை ஆரம்பித்ததே மிகவும் வளமான பகுதிகளில்தான் ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஆறுகள் நிறைய பாய்கின்றதோ அங்கே ஆரம்பித்தார்கள். வடக்கே ஒரு பஞ்சாப் இருக்கிறது. அங்கே ஐந்து ஆறு பாய்கிறது. அங்கே ஆரம்பித்தார்கள். இங்கே தென்னிந்தியாவில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. (பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் என்று பொருள்) இங்கும் ஐந்து ஆறுகள் பாய்கிறது. அதுதான் திருவையாறு. நம்முடைய காவிரி வட்டம் முழுவதும் இதைப் புகுத்தினார்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்து செழிப்பாக இருந்ததோ அங்குதானே பசுமைப் புரட்சியை புகுத்தினீர்கள்? அங்கெல்லாம் இன்று ஒன்றும் விளையாத கட்டத்திற்குப் போய் விட்டது பூமி. அன்றைக்கு இதுதான் ஒரே வழி என்று சொன்னீர்களே? இது எப்படி சரியான வழியாகும்? அப்போது ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தையா போடுவீர்கள்? இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். நிலைத்த, நீடித்த, வேளாண்மை என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்னவென்றால், இன்றைய தேவைக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் அது நாளைய தேவையைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு பெயர் தான் sustணீவீஸீணீதீறீமீ டெவலப்மெண்ட். அந்த சஸ்டைனபுலிட்டியை இப்போது இழந்து விட்டு நிற்கிறோம். ஆக, அன்றைக்கு அதைச் சரி என்று சொன்னது நியாயம்தானே என்றால், அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது.

அன்றைக்கு அமெரிக்காக்காரன் சொன்னதைப்போல சொன்னீர்கள். அதில் அமெரிக்காக்காரனுக்கு லாபம் இருக்கிறது. வட்டிக்குக் கொடுத்திருக்கிறான். அதற்காக உங்களிடமிருந்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ரசாயணப் பொருட்களையெல்லாம் நம்மிடம் விற்றிருக்கிறான். நம்முடைய பூமியை நாசமாக்கி இருக்கிறான். நம்முடைய நுகர்வோரை விஷமாக்கி இருக்கிறான். நுகர்வோர் என்றால் 112 கோடியும் நுகர்வோர்தான். மண்ணைக் கெடுத்திருக்கிறான். விவசாயியை பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் கடந்த ஒரு பத்து வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இவ்வளவு பெரிய விவசாயிகள் தற்கொலை உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்திருக்க முடியாது. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விவசாயிகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தோற்றுவாய் பசுமைப்புரட்சியிலிருந்து தொடங்குகிறது.

வெள்ளையன் ஒரு இருநூறு ஆண்டுகள் நம்முடைய நாட்டை ஆண்டான். அவன் என்ன செய்தான் ஷமீன்தாரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நிலத்தையெல்லாம் புடுங்கிவிட்டான். தூக்கி ஷமீன்தார் கையில் கொடுத்துவிட்டான். அப்போது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தும் காந்தி காலத்திலிருந்தும் சுதந்திரம் வந்தால் நிலத்தை விவசாயிகளின் கையில் ஒப்படைப்போம் என்றார்கள். அதைச் செய்யவில்லை. ஆகையினாலே தான் பற்றாக்குறை. இன்றைக்கு வரை அந்த உண்மையை மூடி வைத்துக் கொண்டு பற்றாக்குறையால்தான் ‘பசுமைப் புரட்சி’யைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். வரலாற்றையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. வரலாற்றையும், விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றால் நம் முன்னேற்றத்திற்கான எந்த வெளிச்சமும் நமக்குக் கிடைக்காது.

தீராநதி : இந்திய மக்கள் மேலை நாட்டு விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், உணவு தானியங்கள்தான் சுத்தமானது, உடலுக்கு ஆரோக்கியமானது என்று நம்பும்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். காந்தியின் சுதேசி மனப்பான்மையை இந்தியர்களே தூக்கி எறிந்து விட்டார்கள். அல்ஜீரிய போராளி ஃபிரான்ஸ் ஃபனான் சுதேசி கொள்கையை அகப் பொருள் புறப் பொருள் என்று தனித்தனியே ஆராய்ந்து காந்தியின் பார்வையை மறு ஆய்வுக்குட்படுத்தி மேலும் ஆழமான சுதேசி கருத்தியலைக் கட்டமைக்கிறார். ஒரு நாட்டின் உண்மையான புரட்சியை விவசாயிகளிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அதுவே உண்மையான புரட்சியாக அமையும் என்றும் ஃபனான் குறிப்பிடுகிறார். கோபால் ஆசிரமம் என்ற புது ஆசிரமத்தை மீரா பென் நிறுவி சுற்றுச் சூழல் குறித்து போராடி வந்திருக்கிறார். அம்மக்களின் கதைப் பாடல்களில் பஞ்ஜ் எனப்படும் ஓக் மரங்கள் முற்றிலும் இன்று அழிக்கப்பட்டு விட்டதைக் கண்டறிந்தார். அதே போல அம்ரிதா தேவி தலைமையில் பிஷ்னோய் சமூகத்தினர் புனித ‘கேஜ்ரி’ மரங்களை வெட்டுவதை எதிர்த்து அப்பழங்குடி மக்கள் மரங்களைக் கட்டியணைத்து வெட்ட விடாமல் உயிர்தியாகம் செய்தார்கள் என்பது நம் வரலாறு.

இன்றைக்கு மேதா பட்கர் இவ்விஷயத்தில் முன்னுதாரணமாக நிற்கிறார். தமிழகத்தில் நீங்கள் தீவிரமாக இயங்குகிறீர்கள். கென்ய நாட்டில் ‘கிரீன்பெல்ட்’ இயக்கம் போல வலுவான அரசியல் இயக்கமாக மாறவேண்டிய தேவை நம் நாட்டில் உருவாகி இருக்கிறது? இதை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இன்றைக்கு நிறைய இயக்கங்கள் நம்நாட்டில் செயல்படுகின்றன. நீங்களே சொல்லி விட்டீர்களே. மேதா பட்கர் ஒரு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று. வடக்கே வந்தனாசிவா ஊர் ஊராகப் போய் களப்பணி செய்து வருகிறார். இங்கு நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஆந்திராவில் டெக்கான் டெவலப்மெண்ட் சொஸைட்டி என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நிலத்தை விட்டு வெளியே நகரங்களுக்குக் கூலிகளாகச் சென்ற விவசாயிகளை அழைத்து மறுபடியும் நிலத்தில் விவசாயம் செய்யச் சொல்லி, நிலத்தை மேம்படுத்தி இழந்து போன தானியத்தையெல்லாம் உற்பத்தி செய்து, அங்கு தேவைக்கு மீறிய மகசூலை எட்டி அவர்களின் தேவைக்குப் போக அவர்களே மற்றவர்களுக்கு ரேஷன் அளிக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் ஆரம்பித்தவர்ககள் இன்றைக்கு நூறு கிராமத்தில் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே போல, கேரளத்தில் ஒரு கிராமத்தில் ‘தனல்’ என்ற ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த எல்லா இயக்கங்களும் ஒன்றுசேருகின்ற காலகட்டத்தில்தான் நாம் இன்றைக்கு இருக்கிறோம். இன்னும் கொஞ்ச காலங்களில் இவை ஒன்று சேரப்போகின்றன.

மக்களிடம் அறிவிருந்ததென்றால், எடுத்துச் சொன்னவுடன் அவன் மாறிவிடுவான். அறிவில்லை என்றால் அவன் கஷ்டங்களை அனுபவிக்கும் போதுதான் மாறுவான். இப்போது அவன் கஷ்டங்களை அனுபவிக்கின்ற காலகட்டம் வந்துவிட்டது. ஆக, மக்கள் மாறக்கூடிய நேரம் இது. விவசாயத்தைப் பொருத்த மட்டும் மற்றதிலிருந்து கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. மற்றவை எல்லாவற்றையும் பேசிதான் தீர்க்க வேண்டி இருக்கும். விவசாயம் என்பது செய்து காட்டி தீர்க்க வேண்டிய விஷயம். இன்றைக்கு தமிழ்நாட்டில் எனக்கு 100 பண்ணைகள் இருக்கின்றன. இந்த நூறு பண்ணைகளையும் பயிற்சி மையமாகப் பயன்படுத்துகிறோம் நாம். அதில் மக்கள் நேரடியாக வந்து பார்க்கிறார்கள். பார்த்ததை அவர்கள் தன்னுடைய நிலத்தில் நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆக, நம்முடைய உற்பத்தி முறையை மாற்றுவதென்பது கடினமான காரியமில்லை. ஆக, வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் ‘‘ஆங்கதை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு’’ என்று சொல்லி இருக்கிறார். எல்லா வளமும் இருந்தாலும் அரசாங்கம் உருப்படியாக அமையவில்லை என்றால், எது ஒன்றும் உருப்படாமல் போய் விடும் என்பது இதன் பொருள். ஆக அரசாங்கத்தை நேர்படுத்துவதற்குத்தான் நாம் அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது.

தீராநதி : ஆற்றுநீரைப் பயன்படுத்தி தஞ்சை மாதிரியான வட்டாரங்களில் மூன்று போகம் விளைவித்திருப்பதை நாம் அறிந்துள்ளோம். ஆனால், ஆற்று நீர் ஆதாரமே இல்லாத செங்கல்பட்டு மாதிரியான பகுதிகள் ஏரி குளங்களை உண்டாக்கி அதன் வழியாக நீர்த்தேக்கி மூன்று போகம் விளைவித்து, அப்பகுதி செல்வச் செழிப்பாக இருந்திருக்கிறது. இன்றைக்கு ஆற்று நீர் ஆதாரங்கள் முழுக்க அரசியல் காரணங்களால் நாம் இழந்திருக்கிறோம். அண்மையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கூட பிரச்னையாகி தவிக்கிறது. இச் சமயத்தில் ஏரி, குளங்கள் மூலமாக _ செங்கல்பட்டு மாதிரி _ ஒரு விவசாயத்தை நம்மால் வளர்த்தெடுக்க முடியுமா? ஏரிகளை நம்பி மட்டுமே பயிர் செய்வதென்பது பிற மாவட்டங்களிலும் சாத்தியப்படுமா?

நம்மாழ்வார்: உங்களிடம் இருப்பது பொது அறிவு. இந்தப் பொது அறிவு விவசாயத்திற்கு உபயோகப்படாது. இன்னும் கொஞ்சம் அறிவு ஆழமானால்தான் விவசாயத்திற்கு அது பயன்படும். ஏரிகளை வைத்து சாகுபடி செய்வதென்பது செங்கல்பட்டில் மட்டும்தான் நடக்கும். அது தஞ்சாவூரில் நடக்காது. ஏன் என்று கேட்டீர்களென்றால், செங்கல்பட்டில் மலைகள் நிறைய இருக்கின்றன. மலையில் பெய்யும் மழை நீர் கடலுக்குப் போவதற்கு முன் மறித்து ஏரிகளில் நிரப்பி சாகுபடிக்குப் பயன்படுத்துகிறார்கள். இங்கு மேட்டூர் தண்ணீர் கடலுக்குப் போவதற்கு முன் மறிக்கப்பட வேண்டும். அப்படி மறித்து 33 ஆறுகளாகத் திருப்பி இருக்கிறார்கள். கல்லணையிலிருந்து 33 ஆறுகளாக பிரித்து கடலில் போய்ச் சேருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கின்ற ஆறுகளிலேயே 95 சதவீதம் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆறு காவிரி ஆற்றுத் தண்ணீர் மட்டும்தான்.

இன்று காடுகளை அழித்ததினால் புயல் மழையாக வரும் நீரை மேட்டூர் அணையில் நாம் தேக்கி வைத்தது போக, அதே போல ஐந்து மடங்கு தண்ணீர் வங்காள விரிகுடாவிற்குப் போய் விடுகிறது. நம்முடைய கரிகாலச்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்லணையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். இங்கிலாந்துகாரன் இங்கு வந்து கல்லணையைப் பார்த்தபோது அவனுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினானாம். ஏனென்றால், எப்படிடா தண்ணீர் பாயும் மணல் ஆற்றில் அணையைக் கட்டி இருப்பான் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆகவே அப்படி மரியாதை செய்திருக்கிறான். காட்டாற்றில் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படுகின்ற வேலையுமல்ல இது என்று மலைத்திருக்கிறான். ‘‘இந்த அணையைக் கட்டுவதற்காக இங்கு முதல் கல்லைப் போட்டானே அந்த மனிதனுக்கு என்னுடைய வணக்கம்’’ என்று அவன் சொன்னதாக வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சாதனை மிக்க அணையை கரிகாலச் சோழன் கட்டி இருக்கிறான். அணையென்றால் நீரைத் தேக்கி வைத்து பிறகு தண்ணீரைத் திறந்து விடும் அணையல்ல; கொள்ளிடத்திற்கு அதிகமாகச் சொல்லும் தண்ணீரை அணையிட்டு தடுத்துவிட்டோம் என்றால், அதில் குறிப்பிட்ட அளவிற்கான தண்ணீர் காவிரி ஆற்றில் போய்க் கொண்டே இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் காவிரி அக்கரை தாங்காது. ஆகவே இதைக் கட்டி இருக்கிறான். அதற்கப்புறம் ஒரு விஷயம், பெரிய மன்னர்களை ஒளவையார் பாடவே இல்லை. கரிகாலனை மட்டும்தான் பாடி இருக்கிறாள். பாடும் போது என்ன சொல்கிறாள் என்றால், ‘‘காடு கொன்று நாடாக்கினான். குளம் தொட்டு வளம் பெருக்கினான்’’ என்று எழுதுகிறாள். சரி தானே?

ஆக, காவிரி மண்டலத்திலும் நிறைய குளங்களாகவே வெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால், காவிரியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் தண்ணீர் வரும். அதற்காக எங்குப் பார்த்தாலும் குளங்கள் வெட்டினார்கள். தேக்கிய நீரை வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு ஆற்று ஓரத்தில் தொழிற்சாலைகளை உண்டாக்கி வைத்துக் கொண்டு ஆற்று நீர் முழுவதையும் சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். உடனடியாக நாம் செய்தாக வேண்டிய வேலை. ஆற்று ஓரங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் பூட்டுப் போட்டு பூட்ட வேண்டியதுதான்.

நேற்று நாங்கள் திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சாமிகள் கோயிலுக்குப் போனோம். அங்கு கோயிலுக்குப் பக்கத்தில் பெரியதாக ஒரு ஏரியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் குடியிருப்புக்கள் எல்லாம் இருக்கிறது. கோயிலின் மீது கூரை போட்டு விட்டார்கள். அதில் விழும் மழைத் தண்ணீர் ஏரிக்குள் வந்து விழுந்து நிரம்புகிறது. மக்கள் தன்னை கடவுள் காப்பாற்றுவதாக நம்பவைத்தார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் தான் கடவுளைக் காப்பாற்றினார்கள். ஏனென்றால், இவர்களே வகுத்துக் கொண்ட திட்டங்களால்தான் இவர்களை இவர்களே காப்பாற்றிக் கொண்டார்கள். ஆனால் கடவுள் காப்பாற்றுவதாக போதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் ஏரிகளை நம்முடைய முன்னோர்கள் கட்டி வைத்திருந்தார்கள். ஏரி என்றால் என்ன அர்த்தம். ஏர் பூட்டி பயிர் செய்யப்படுகின்ற இடங்களை ஏரி என்றோம். அதோடு சின்னதானால் குளம். ஆடு மாடு குளிக்கலாம். அதைவிடச் சின்னதானால் குட்டை. கை கால் மட்டும் கழுவிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றிற்கும் பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த 40 ஆயிரம் ஏரிகளில் இன்றைக்கு 20 ஆயிரம் ஏரிகள்தான் இருக்கிறது என்கிறார்கள்.

ஒரு காலத்தில் காரல் மார்க்ஸ் இங்கிலாந்திலிருந்து எழுதுகிறார். ‘‘இந்தியாவினுடைய சூழல் ரொம்ப இயற்கை வளம் மிகுந்ததல்ல; அவர்கள் ஏரி குளங்களையெல்லாம் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை அடிக்கடி மராமத்து செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயம் ஒழுங்காக நடக்கும். ஆனால் இங்கிலாந்திலிருந்து போன ஆங்கில அரசு அவற்றின் மேம்பாட்டிற்குச் செலவழிப்பதே இல்லை. இவர்கள் போருக்குச் செலவு செய்வதும், வரி வசூலிப்பதும், வரிப் பணத்தை தலைநகரத்திற்கு அனுப்புவதும் மட்டும்தான் அங்கிருக்கும் ஆட்சியாளர்களின் வேலையாக இருக்கிறது. ஆகையினால் அங்கு பஞ்சம் மிஞ்சி இருக்கிறது. பஞ்சம் நிலவுகிறது’’ என்று எழுதுகிறார். அப்போது அந்த வெள்ளைக்காரன் போன பிற்பாடு நாம் நம்முடைய மக்களுக்காக ஆள வேண்டுமில்லையா? இப்பவும் பணக்கார நாட்டிற்கு சம்பாதித்துக் கொடுப்பதற்காகவே நம்முடைய ஆட்சியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்தப் பஞ்சம் இன்னும் தொடருகிறது. காந்தியே சொல்லி இருக்கிறார். ‘இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஆறு லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால் இந்தியா வாழ்கின்றதென்று அர்த்தம். இல்லையென்றால் இல்லை’ என்றார். அப்போது இந்த ஆறு லட்ச கிராமத்தினையும் வளர விடாமல் செய்து பட்டணத்தை மட்டும் ஊதி ஊதிப் பெருக்கி இருக்கின்றோம். பட்டணமும் இன்றைக்கு நன்றாக இல்லை. எவ்வளவு நகரமாக இருந்தாலும் ஒரு சிலர் வரைதான் தாங்கும். அப்போது பட்டிக்காட்டை வறட்சியில் தொடரவிட்டு விட்டோம் என்றால், எல்லா மக்களும் சாப்பாட்டிற்காக நகரத்தில் வந்து மோதுகிறார்கள். வேலை வாய்ப்பில்லை. வீட்டு வசதியில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி வசதி இல்லை. மறுபடியும் என்ன செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருந்த சேரிகளுக்குப் பதிலாக பட்டணத்துச் சேரிகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் இந்த ஆறுலட்சம் கிராமத்தினையும் வாழக் கூடிய பூமியாக மாற்றினோம் என்றால், பட்டணத்தில் ஏகப்பட்ட மக்கள் நெரிசலை கிராமத்திற்குத் தள்ளிவிடலாம். அப்போது பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இவர்கள் உற்பத்தி செய்வார்கள்.

தீராநதி : ‘‘பயிர்கள் தானாக வளர வேண்டுமே தவிர, நாமாக வளர்க்கக் கூடாது. இயற்கையான வழிக்கே எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். ஆனால் திடீரென்று இந்த எண்ணத்தை ஒட்டுமொத்தமாக நடைமுறைப்படுத்தினால் விளைவு நன்றாக இருக்காது. அதற்குப் பெயர் இயற்கை வேளாண்மை அல்ல; கை கழுவி விடுவது’’ என்று தன்னுடைய இயற்கை வேளாண்மை குறித்து மசானோபு ஃபுகோகா சொல்கிறார். அவர் இந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தன் நிலத்தை உழுவதை நிறுத்தியதைத் தொடர்ந்தும் அவர் நிலத்தின் வளம், அமைப்பு மற்றும் நீரைத் தக்க வைத்து கொள்ளும் மண்ணின் தன்மை வெகுவாக உயர்வதாக குறிப்பிடுகிறார். அவரது இயற்கை வேளாண்மையை அப்படியே இங்கு நடைமுறைப்படுத்த இயலாதென்ற போதிலும் ஃபுகோகாவின் இயற்கை வேளாண்மையிலிருந்து உங்களின் இயற்கை வேளாண்மை வேறுபட்டதா? கொஞ்சம் விளக்குங்களேன்?

நம்மாழ்வார் : முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா விஷயத்தையும் எல்லா இடத்திலும் உற்பத்தி பண்ணலாம். ஆப்பிள் மரம் கூட நம்முடைய மண்ணில் வளர்ந்து விடுகிறது. ஆனால் காய்க்க மாட்டேன் என்கிறது. அதுபோல ஒன்று இரண்டு மரங்கள் தான் நம் சூழலுக்கு ஒத்துவராதே ஒழிய, மற்ற எல்லாவற்றையும் நம்முடைய மக்கள் வளர்த்து சாதித்து விட்டார்கள். திருச்சியை விட வெயில் அதிகமாக இருக்கக் கூடிய பட்டுக்கோட்டை பகுதியில் காப்பி விளைகிறது. லவங்கம் விளைகிறது. ஆல் ஸ்பைஸஸ் பிளாண்ட் விளைகிறது. கோகோ விளைகிறது. ஜாதிக்காய் விளைகிறது. பாக்கு விளைகிறது. இப்படி எல்லாவற்றையும் வளர்த்துக் காண்பித்து விட்டார்கள். இது எப்படிச் சாத்தியமென்று கேட்டீர்கள் என்றால், அது ஒரு இயற்கைச் சூழலில் வளர்கிறது. அதை ‘மைக்ரோ கிளைமேட்’ என்பார்கள். இப்போது நீங்கள் நல்ல வெயிலில் ரோட்டில் சைக்கிளில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். களைத்து விடுகிறீர்கள். உடனே சாலை பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் உள்ள நிழலில் போய் நிற்கிறீர்கள். உடனே உங்களுக்கு குளுகுளு என்று இருக்கிறதில்லையா? உடனே உங்களின் களைப்பு போய் விடுகிறதல்லவா? அதற்குப் பெயர்தான் ‘மைக்ரோ கிளைமேட்’ என்கிறோம். ஒரு சின்ன இடத்தினால் கூட ஒரு வித்தியாசமான சூழலை நம்மால் உருவாக்க முடியும். பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது செல்பவன் பக்கத்திலுள்ள நீர்ச்சுனை பக்கமாக நிற்பான். அதை பாலைவனச் சோலை என்பார்கள். ஒயாஸிஸ் என்றும் சொல்வார்கள். அங்கு இளைப்பாற அவனுக்கு நிழல் கிடைக்கிறது. அருந்த நீர் கிடைக்கிறது. சாப்பிட பேரீச்சம் பழம் கிடைக்கிறது. அவனுக்குத் தேவையான சகலமும் கிடைக்கிறது. மனிதன் அறிவை மட்டும் சரியாகப் பயன்படுத்தினான் என்றால் எங்கும் வாழ்வதற்கான சரியான சூழலை, அழகாக உருவாக்கிவிட முடியும். இதுதான் உங்களின் ஒரு பகுதி கேள்விக்கான பதில். அடுத்தது நாம் ஃபுகோகாவிற்குள் போவோம். ஃபுகோகாவினுடைய ‘ஒற்றை வைக்கோல் ‘புரட்சி’யை எல்லோரும் படித்திருக்கிறார்கள். அடுத்தாற்போல் வந்த இரு புத்தகங்களை யாரும் படிக்கவில்லை. ‘நேச்சுரல் வே ஆஃப் ஃபாமிங்’ என்ற புத்தகம் வந்திருக்கிறது. ‘ரோடு பேக் டு நேச்சர்’ என்ற புத்தகம் வெளி வந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகத்திற்கு அடுத்து இப்போது ஒரு புது புத்தகம் கூட வெளி வந்து விட்டதென்று நினைக்கிறேன்.

‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகம் முழுக்க நெற் சாகுபடி பற்றி தான் பேசுகிறது. ‘நேச்சுரல் வே ஆஃப் ஃபாமிங்’ புத்தகத்தில் இயற்கை வழி பண்ணையம் பற்றிய ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்படுகிறது. முக்கியமாக ஜப்பானிலிருந்து எந்த இடத்தில் நாம் வித்தியாசப்பட்டு நிற்கிறோம் என்று கேட்டால், ஜப்பானில் 52 வாரம் மழை பெய்கிறது. இங்கே மூன்று மாதம் மட்டும்தான் மழை பெய்கிறது. இந்த மூன்று மாத மழையும் 45 நாட்களுக்குள் பெய்ந்து விடுகிறது. இங்கு தான் பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது. ஃபுகோகா பதினைந்து வருடங்கள் நிலத்தில் இயற்கை வழி விவசாயத்திற்கான வேலையைச் செய்து விட்டு அதற்குப் பிற்பாடு உழுவதை நிறுத்தி விட்டார். நாமும் உடனே நம்முடைய நிலத்தில் உழுவதை நிறுத்திவிட்டு விவசாயம் பண்ண முடியாது. ஃபுகோகா உழவேண்டாம் என்று சொல்லவே இல்லை. மண்புழுவும் புல் பூண்டுச் செடியின் வேர்களும் நிலத்தை இயற்கையாகவே உழுகிறதே பிறகு எதற்கு நீ தனியாக உழவேண்டும் என்று கேட்கிறார். இந்த ‘உழவு’ என்பது திருவள்ளுவரின் அதிகாரங்களில் வரக்கூடிய ஒரு தலைப்பு. உழவு என்றால் என்ன அர்த்தம்? ‘உழவு’ என்றால் துன்பம் என்று அர்த்தம். மழை பெய்து கொண்டிருக்கும்போது விவசாயி தலையில் ஒரு சாக்குப் பையைப் போட்டுக் கொண்டு நிலத்தை உழுது கொண்டிருப்பான். ஒரு மாதம் தொடர்ந்து மாடு உழுததென்றால், அதனுடைய கால் செக்கச் செவேல் என்று வெளுத்து விடும். அதன் கால் உரோமங்கள் எல்லாம் உதிர்ந்து விடும். குளம்பெல்லாம் தேய்ந்து போய்விடும். உழவு மாட்டிற்கே இவ்வளவு சங்கடங்கள். அப்போது விவசாயி மாடாக உழைக்கிறான். அதனால்தான் சிறப்பு என்று வள்ளுவர் சொன்னார். இதுதான் இனியது என்று சொன்னார். ‘‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’’ என்கிறார். துன்பப்பட்டீர்கள் என்றாலும், அந்த உணவு சிறந்தது. ஏருக்குப் பின்னால்தான் உலகமே இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ‘ஏர்’ என்றால் தமிழில் ‘அழகு’ என்ற இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. தன் நூலில் ஃபுகோகா டிராக்டரை ரொம்பவும் அழகாக தாக்குகிறார். ஒருவன் விடாமல் கண்விழித்து ஆராய்ச்சி செய்கிறான். கடைசியாக என்ன கண்டுபிடித்திருக்கிறான் என்றால் கிட்டப்பார்வைக்கு மூக்கு கண்ணாடி. ‘ஏன் அய்யா இவ்வளவு கண்விழித்து கண்களை கெடுத்துக் கொண்டு உடலையும் வருத்தி துன்பப்படுகிறீர்’ என்று கேட்டால் ‘கண்ணாடி கண்டுபிடிப்பதற்கு’ என்று பதிலளிக்கிறான். அதே போல பூமியை உப்பைப் போட்டு எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ அவ்வளவையும் கெடுத்து வைத்து விட்டு மாட்டு கலப்பையினால் இனி உழவே முடியாது என்கின்ற நிலை வரும் போது டிராக்டரைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள் என்று விமர்சிக்கிறார் ஃபுகோகா. மண்ணின் இயற்கை தன்மையைக் கெடுத்து விட்டு டிராக்டரைக் கண்டுபிடித்தீர்கள். டிராக்டர் ஓடுவதற்கு எண்ணெய் வேண்டுமே அதற்காக பூமியில் சுரங்கம் தோண்டி வேறு ஒரு பகுதியைக் கெடுத்தீர்கள். இதற்கு தேவையான இரும்புச் சாமான்களைச் செய்வதற்காக காட்டினை அழித்தீர்கள். ஆக, சுற்றுச் சூழலைக் கெடுத்துவிட்டுதான் இந்த டிராக்டரே வருகிறது. ஆனால் நம்ம மாடு உழும் போது சாணி போடுகிறது. அது மண்ணிற்குள் இறங்கி எருவாகிறது. அதனால்தான் ‘ஏர்’ என்பதை அழகு என்றார்கள் தமிழர்கள்.

கிராமத்தில் சொல்வார்கள் ‘‘கோணக்கா மாணக்க மூணு பேரு கூட்டிப் பார்த்தா பத்து காலு’’ என்று. இரண்டு மாட்டையும் சேர்த்து எண்ணினால் எட்டுக் கால். அதை ஒட்டுபவனின் கால் இரண்டு. மொத்தம் சேர்த்தால் பத்து கால். ஆக, மாட்டை தனியாக நம்முடைய விவசாயி பிரித்துப் பார்க்கவில்லை. தன்னுடைய சொந்தமாகச் சேர்த்துப் பார்க்கிறான். அடுத்தது உங்களுடைய கேள்வியின் முக்கியமான பகுதிக்கு வருகிறேன். ஷப்பானில் மொத்தம் 12 மாதமும் மழை பெய்வதினால் அவர்கள் ஆறு மாதம் நெல் அல்லது பார்லியை விதைப்பது, ஆறு மாதம் கோதுமை விதைப்பது என்று பிரித்துக் கொண்டார்கள். நெல் அறுப்பதற்கு ஏழு எட்டு நாட்களுக்கு முன்னாலேயே கோதுமையை விதைத்து விடுவார்கள். அதேபோல் கோதுமையை விதைப்பதற்கு முன்னாலேயே நெல்லை விதைத்து விடுகிறார்கள். அப்போது உழுவதற்கே வேலை கிடையாது. நாற்று விடுவது தேவையில்லை. புடுங்கி நடவேண்டியதில்லை. பூமி எப்போதும் மூடியே இருக்கிறது. களை மண்டாது. அப்படியே நிலம் முன்னேறிவிட்டது. ஆனால் நமக்கு அப்படி இல்லை. மூன்று மாதம்தான் மழை. மீதியெல்லாம் வெயில், காற்று என்றிருக்கிறது. என்னுடைய கூட்டாளி ஆரோவில்லில் (பாண்டிச்சேரி பக்கமாக) இருக்கிறான். பெல்ஜியத்துக்காரன். அவனது பெயர் பெர்னார்டு டி கிளார்க். இந்த பெர்னார்டு டி கிளார்க்குதான் எனக்கு வழிகாட்டி. கிளார்க் என்ன செய்தார் என்றால், இங்கு நம்முடைய பருவநிலைக்குத் தகுந்த மாதிரி மூன்று பயிர் சுழற்சியைக் கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தார். அவரது முறைப்படி மழைக்காலத்தில் நெல்லை பயிர் செய்தார். அதற்கடுத்தது சோளமும் தட்டைப் பயிறும் பயிர் செய்தார். சோளம் நேராக விளைந்து நிற்கிறது. தட்டை அதைச் சுற்றிக் கொண்டு வளர்கிறது. சோளம் மண் சத்தை எடுக்கிறது. தட்டை பயிர் சத்தை சேர்க்கிறது. மூன்றாவது நல்ல வெயில் பருவம் வரும் போது வெறும் உரச் செடிகளை மட்டுமே விதைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டார். ஆக, பூமி எப்போதும் மூடியே இருக்கும். இதனால் மண் வளம் பெருகச் செய்கிறது. நாம் முன்னோர்கள் இப்படித்தானே பயிர் செய்தார்கள்.

ஆக, நம்முடைய வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று பயிர்த் திட்டமாக கொண்டு வந்தார் கிளார்க். ஃபுகோகா சொல்கிறார். ‘‘இயற்கைக்கு ஒரு விதி இருக்கிறது. இயற்கை கொடுத்ததைத் திருப்பி அளிப்போம். நெல்லை விளைத்தால் நெல்லை எடுத்துக்கொண்டு வைக்கோலைத் திரும்ப நிலத்திற்கே கொடுத்துவிடு. ஆக, வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை இயற்கையிடம் திருப்பிக் கொடுக்கப் பழக வேண்டும். இன்றைக்கு மக்களுக்கு அரசாங்கம் கோடி கோடியாக செலவழிப்பதாகச் சொல்கிறது. ரோடு போடுகிறது. மின்சாரத்தைத் தயார் செய்து கொடுக்கிறான். தண்ணீர் சப்ளையெல்லாம் செய்து கொடுக்கிறான். ஆனால் விவசாயிகளுக்கு கிராமத்தில் தானியங்களை அடித்து உலர்த்துவதற்கு ஒரு களம் செய்து கொடுக்கவில்லை. விவசாயி தார் ரோட்டிற்குக் கொண்டு வந்து விரவி பஸ் லாரியை தானியத்தின் மீது ஓட விட்டு தானியத்தைப் பிரிக்க வேண்டிய நிலைமைதான் இன்னும் இருக்கிறது. இதனால் என்ன ஆகிறது? ரோட்டிலேயே வைக்கோலை போட்டுவிட்டு வந்து விடுகிறான். அடுத்த நாள் மாடு மேய்க்கப் போகும் சிறுவன் அவற்றிற்கு ‘தீ’ வைத்து எரித்துக் கொண்டிருக்கிறான். வைக்கோல் சத்து நிலத்திற்குப் போய்ச் சேரவில்லை. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொள்கை (அ) தத்துவம் என்றும் நடைமுறை என்றும் இரண்டு இருக்கிறது. நடைமுறை ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். ஆனால் கொள்கை ஊருக்கு ஊர் வித்தியாசப்படாது. உலகம் முழுவதும் ஒன்றுதான்.

தீராநதி : நம் மரபிலிருந்து அழிந்துபோன, அதாவது ரசாயன வேளாண்மையில் காணாமல் போன பல்வேறு வகைப்பட்ட தானியங்களை நம்மால் மறுபடியும் மீட்டெடுக்க முடியுமா?

நம்மாழ்வார் : எங்கள் ஊரில் இருந்த கோயில் மாடு திருடு போய்விட்டது. மூன்று வருடம் போராடி மாட்டை திரும்பக் கொண்டு வந்து விட்டார்கள். அதே போல நம்முடைய தானிய வகைகள் எல்லாம் பிலிஃப்பைன் நாட்டுக்குத் திருட்டு போய் இருக்கிறது. நம்முடைய விஞ்ஞானிகளை அனுப்பி வைத்தால் திரும்ப கொண்டுவந்து விடப்போகிறார்கள். நம்முடைய ஆட்களை வைத்துத் தானே அவர்கள் திருடி இருக்கிறார்கள். இந்தத் துணைபோன திருடனை அனுப்பி உண்மையான திருடனைப் பிடித்துக் கொண்டுவா என்றால் பிடித்துக் கொண்டு வருகிறான். நம்முடைய தானியங்கள் எல்லாம் இயற்கையாக அழிந்து போகவில்லை. திருடுதானே போய் இருக்கிறது.

தீராநதி : இதற்கு முன்னால் கூட ‘மான்சாண்டோ விதைகளை’ கொண்டு வந்து நம்முடைய நாட்டில் அறிமுகம் செய்தார்கள். தொடர்ந்து அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக வல்லரசு நாடுகள் அதற்கான வேலைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனித சமூகத்திற்கே பெரும் கேடு என்று தெரிந்த ஒரு விஷயத்தை, ஒரு சாதாரண சாமான்யன் கூட புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஜயத்தை, நம்முடைய அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் போவது ஏன்? 123 அணு ஆயுத ஒப்பந்தத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அளவுக்குக் கூட இந்த பிரச்னைகளுக்குக் கொடுக்கப்படுவது இல்லையே அது ஏன்?

நம்மாழ்வார் : இதற்கு பதிலை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள்தான் ரொம்ப படிக்கக் கூடிய ஆளாக இருக்கிறீர்கள். அதாவது நம்மூரில் நிறைய வட்டிக் கடைகள் எல்லாம் இருக்கிறது. இதற்கு ‘பேங்க்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்த பேங்க் என்பது எங்கிருந்து வந்தது என்பதை நான் அறிந்து கொண்ட போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. 1985_ல் நான் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போய் ஒரு ஏரிக்கரையை காண்பித்தார். அந்த ஏரிக் கரைக்குக் கீழாக நிறைய தரிசு நிலங்கள் இருந்தன. ‘இதுதான் எங்கள் காலத்தில் சந்தையாக இருந்தது. இந்த ஏரியினுடைய கரை இருக்கிறது பாருங்கள், அதற்கு பெயர் பேங்க். இந்தக் கரைக்கு பக்கத்தில் ஒரு காய்ந்து போன மரம் கிடக்கும். அந்த மரத்தின் மீதமர்ந்து இரண்டு நபர்கள் காலையில் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பார்கள். சாயுங்காலம் விவசாயி வட்டியுடன் கொண்டு வந்து தொகையைத் திரும்பக் கொடுப்பான். அதான் ‘பேங்க்’கிலிருந்து பணம் போனது. ‘பேங்க்’கிலிருந்து பணம் வந்தது. ஆக, ‘பேங்க்’ என்றால் ஏரிக்கரை. ஏரிக்கரையில் உட்கார்ந்து வட்டிக்குக் கொடுத்து வியாபாரம் பண்ணவன் இன்றைக்கு கோடி கோடியாக மாளிகைகள் எல்லாம் கட்டிக் கொண்டு எங்கெங்கோ இருக்கிறான். அத்தனை பேர்களும் வட்டிக் கடைக்காரர்கள். வட்டிக்கடை வைத்திருப்பவன் எந்த உழைப்பும் செய்வதில்லை. சட்டை காலரில் அழுக்குப்படாமல் உழைக்கிறான் அவன். அதே போல நாம் உலக வங்கியில் கடன் வாங்கினோம். அவனுக்குக் கடன் பட்டிருக்கிறோம். இங்கு விளைந்ததை விற்று அவனுக்கு இன்னும் வட்டியையே கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆக, அவன் உழைக்கவே வேண்டாம். நாம் சுகமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் யாராவது உழைக்க வேண்டும். நம்ம வயிறு நிரம்ப வேண்டும். அது அவர்களின் கொள்கையாக இருக்கிறது. இதை வேறு மாதிரி சொன்னோம் என்றால், பேங்கில் இருக்கும் அதிகாரி என்ன சொல்கிறான் ‘ஒரு திட்டத்தைக் கொண்டு வாருங்கள். நான் பணம் தருகிறேன்’ என்கிறான். அதே மாதிரி ஒரு திட்டத்தை நாம் கொண்டு போனால், ‘உங்களின் திட்டம் 30 சதவீதம் லாபம் வரும் என்று வாக்குறுதி தந்தால்தான் அதற்கு நான் பணம் கொடுப்பேன்’ என்கிறான். அப்போது லாபம் சம்பாதிப்பவனுக்கு மட்டும் தான் பணம் தருவான் ‘பேங்க்’காரன். ஆக, முப்பது சதவீதம் லாபம் கிடைக்கும் என்றால் எவனாக இருந்தாலும் கடன் வாங்கி தொழிலைத் தொடங்குவான். 50 சதவீதம் லாபம் வரும் என்றால் சட்டத்தை மீறுவான். 100 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றால் கொலை செய்வான். 200 சதவீதம் லாபம் வருமென்றால் தானே செத்தாலும் பரவாயில்லை என்று அக்குற்றத்தைத் துணிந்து செய்வான். இதுதான் அரசியல் பொருளாதார கொள்ளை. அது இன்றைக்கும் சரியாக இருக்கிறது. ஆக, வரப்போகும் லாபம் தான் ஒருவன் எப்படி நடந்து கொள்வான் என்பதைத் தீர்மானிக்கிறது.

தீராநதி : இதுபோல வர போகும் கேடுகளை ஏன் நம்முடைய விஞ்ஞானிகள் முன் கூட்டியே அரசிடம் எடுத்துச் சொல்லக் கூடாது?

நம்மாழ்வார் : நாம் தான் இங்கு தப்பு செய்கிறோம். விஞ்ஞானம் என்ன செய்யுமென்றால், ஒன்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தான் சொல்லும். ஆனால் ஒரு இலக்கியவாதிதான் ஏன் செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும். அதனால் இலக்கியவாதிகள் தான் விஞ்ஞானிகளுக்கு யோசனை சொல்ல வேண்டுமே தவிர, விஞ்ஞானிகள் இலக்கியவாதிகளுக்கு யோசனையைச் சொல்லக் கூடாது. கனடாவில் உள்ள ஒரு விஞ்ஞானி என்ன சொல்லி இருக்கிறான் தெரியுமா? ‘‘இந்த விஞ்ஞானிகள் செய்வதற்காக நான் வெட்கப்படுகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறான். விஞ்ஞானிகள் வரலாற்றைப் படிக்காமல் விஞ்ஞானத்தைக் கையில் எடுக்கக்கூடாது. வரலாற்றில் இரண்டு பெரிய தவறுகள் நடந்திருப்பதாக கனடா நாட்டு விஞ்ஞானி சுட்டிக் காட்டுகிறார். ஒன்று : 1938_39 DDT என்று ஒரு விஜத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த DDT விஷத்தை கிணற்றில், ஆற்றில் கலந்து விட்டால் எதிரிகள் நம்மீது படையெடுத்து வரும்போது அந்த தண்ணீரைப் பருகிவிட்டு இறந்து விடுவார்கள். அல்லது குடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள். அந்த விஜத்தைக் கண்டுபிடித்து உயிரியைக் கொலை செய்யுமா என்று தெரிந்து கொள்வதற்காக பூச்சியின் மீது தெளித்தான். பூச்சி செத்து விட்டது. ஆனால் 1945_ல் போர் முழுக்க நின்று போய் விட்டது. உடனே இதை பூச்சி மருந்து என்று சொல்லி உலகம் முழுவதும் பரப்பினார்கள். ஆனால் தயாரித்தது எதற்கு? ஆட்களைக் கொல்வதற்கு. இந்த விஜத்தைக் கண்டுபிடித்தவன் பெயர் Paul Muller. இந்த Paul Muller1948_ல் நோபல் பரிசையே கொடுத்தார்கள். மனித மேம்பாட்டிற்காக பாடுபட்ட விஞ்ஞானி என்று சொல்லி விருதைக் கொடுத்தார்கள். 1960_61_ல் என்ன தெரிய வந்ததென்றால், அந்த மருந்து மனிதனையெல்லாம் கொல்கிறது என்று தெரிய வருகிறது.

அமெரிக்காவில் உள்ள மரத்தின் மீது வண்டுகள் இருக்கிறது என்பதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று மரத்தின் மீது இந்த மருந்தை தெளித்தார்கள். அந்த மரத்தின் இலை பட்டு கீழே விழுந்ததை தின்று மண்ணில் இருந்த மண்புழு செத்து விட்டது. செத்த மண்புழுவைத் தின்ற பறவை செத்துப் போனது. ‘ராபின்’ என்ற ஒரு பறவை அங்கிருந்தது. அது என்ன செய்யுமென்றால் பனிகாலம் வரும் போது நாட்டை விட்டு வெளியில்போய் விடும். வசந்த காலம் வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு நாட்டிற்குள் திரும்பும். ஆக, வசந்தம் வரப்போகிறது என்று ‘கட்டியம்’ கூறக் கூடிய பறவை அது. இப்போது அந்தப் பறவையையே அங்கு காணோம். இதையெல்லாம் பார்த்து விட்டு கடல் விஞ்ஞானி ராச்சேல் கார்சன் என்பவள் ஒரு புத்தகத்தை எழுதினாள். எழுதிய அடுத்த வருடமே அவள் கேன்சர் நோயினால் இறந்து போனாள். DDT என்ன செய்யுமென்றால், நம்முடைய உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விந்து சுரப்பதையே நிறுத்தி விடும். உள்ளுக்குள்ளே புற்று நோயை வளர்க்கும். அந்தப் புத்தகத்தைப் படித்த அந்நாட்டு மக்கள் அபாயத்தை உணர்ந்து பின் போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் தேசிய பறவை வழுக்கை தலை கழுகு காணாமல் போய்விட்டது. ஹெலிகாப்டரில் தெளிக்கும் மருந்து மரத்தின் மீது மட்டுமே விழாது. அது பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரிகளின் மீதும் விழும். அப்படி விழுந்து நீரில் கலந்த அந்நீரைப் பருகிய மீன்கள் நோய்வாய் பட்டு மெதுவாக நீந்தின. அதை சுலபமாக வேட்டையாடி உண்ட கழுகுகள் இறந்து போயின. இவ்வளவு பெரிய தீங்கை கண்டுபிடித்த விஞ்ஞானிக்குத்தான் நாம் நோபல் பரிசை கொடுத்திருக்கிறோம். அதே போல குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவைக் கண்டுபிடித்தவனுக்கு பரிசு கொடுத்தார்கள். இதைத் தான் ஏர் கண்டிஷனில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாயுதான் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போடுகிறது. இந்த வாயு காற்றை விட லேசானது. அதனால் அது ஓசோன் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகிறது. ஓசோன் என்றால் என்ன அர்த்தம்? ஆக்ஸிஷன் அடர்த்தியாக இருக்கிறதென்று அர்த்தம். ‘ஓ’ என்றால் ஆக்ஸிஜன். பொதுவாக ‘ஓ’ என்பது இரண்டாக (O2) இருக்கும் இதில் ‘ஓ’ மூன்று அனுவாக இருக்கிறது. இந்த வாயு ஓசோனின் காற்றுத் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகும் போது குளோரின் தனியாகப் பிரிந்து விடுகிறது. பிரிந்ததும் கனமாகி கீழே இறங்குகிறது. அப்போது ஓசோனை ஓட்டை போடுகிறது. இதனால் என்ன நடக்கிறது. சூரியக் கதிர்கள் வடிக்கப்படாமல் கீழே இறங்குகின்றன. அதனால் நமது தோலில் புற்றுநோய் உண்டாகிறது. ஆக, விஞ்ஞானம் என்றாலே முன்னேற்றமானது என்று நினைப்பவனை விட முட்டாள் வேறு ஒருவன் இருக்க மாட்டான். முன்னேற்றமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதான் சரி.

தீராநதி : பறவைகளின் இறப்பு குறித்து சொன்னீர்கள். மாலத்தீவில் ‘கல்வேரிய மேஷர்’ என்ற மரங்கள் சமீப காலமாக புதியதாக எதுவும் முளையவே இல்லை. எல்லாம் முன்னூறு ஆண்டுகள் பழமையான மரங்கள்தான் இருக்கிறது. ஏன் என்று ஆராய்ந்த போது அம்மரத்தின் விதைகள் தானே மண்ணில் விழுந்தால் முளைப்பது கடினம். அதுவே டோடோ (DODO) என்ற ஒரு பறவை உண்ட பிற்பாடு அதன் கழிவிலிருந்து வெளியேறும் விதைக்குத்தான் முளைக்கக்கூடிய வீரியம் இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். இன்றைக்கு DODO முற்றிலுமாக அழிந்து விட்டது. ஆகவே அம்மரங்கள் புதியதாக முளைக்கவே இல்லை என்பதும் தெரிய வந்தது. இங்கிருக்கும் ஆலமரத்திற்கும் வேம்பிற்கும் கூட இந்த ‘விதிகள்’ பொருந்தும். இந்த மாதிரி இயற்கை சுழற்சியின் வளையத்தை மனிதர்கள் எந்த அளவிற்கு நாசப்படுத்தி இருக்கிறோம் என்று சொல்லுங்களேன்?

நம்மாழ்வார் : DODO பறவை எப்படி செத்ததென்று நீங்கள் சொல்லவில்லையே?

தீராநதி : தெரியவில்லை. சொல்லுங்கள்?

நம்மாழ்வார் : மாலத்தீவில் அந்த DODO பறவைகள் ரொம்ப சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தன. இந்துமகா கடலில் மாலத்தீவு என்பது ரொம்ப அழகாக இருக்கிறதென்று நிறையப் பேர் சுற்றுலாவிற்குச் சென்றார்கள். அப்படிப் போனவர்கள் நல்ல சுகத்தை அனுபவித்தார்கள். போனவர்கள் சும்மா போகவில்லை. துப்பாக்கியுடன் போனார்கள். இந்தப் பறவைகளுக்கு இவர்கள் தன்னைச் சுடுவார்கள் என்று தெரியாததால் அது சாதுவாக உட்கார்ந்திருந்ததால் அதை சுட்டுச் சுட்டே தின்றார்கள். அப்படியே ஒரு பறவை கூட மிச்சமில்லாத அளவிற்கு சுட்டுச் சுட்டு தின்றிருக்கிறார்கள். இப்போது தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது DODO இல்லை என்றால், கல்வேரியமரங்கள் முளைக்காதென்று.

தீராநதி : நம்முடைய நாட்டுப் பிரச்னைக்குள்ளாக வருவோம். ஒரு காலத்தில் தான் உண்டதுபோக இருக்கும் தானியங்களை வியாபாரம் செய்தார்கள் நம் முன்னோர்கள். அதில் ஒரு நியாய தர்மம் இருந்ததாக நாம் இன்று படிக்கிறோம். ஆனால் இன்றைய சந்தையில் கிடைக்கும் சகல பொருட்களிலும் கலப்படம் கலப்படம். எதிலும் ஒரு நம்பகத் தன்மையற்ற வியாபாரமே நடக்கிறது. ரசாயன முறையில் தவறுகளைச் செய்வதற்கென்றே இன்றைக்கு இயந்திரங்கள் எல்லாம் கூட விலைக்கு வந்துவிட்டன. இதன் மூலம் வியாபாரி அதிக லாபம் அடையலாம்? இப்படி நாணயமற்ற ஒரு போக்கு நம் சமூகத்திற்குள் எப்படிப் புகுந்தது?

நம்மாழ்வார் : நம்முடைய சமுதாயம் என்றைக்கு நீதியாக வாழ்ந்த தென்று நீங்கள் சொல்கிறீர்கள்? அசோகனின் அப்பன் பிந்துசாரன் இருந்தான் பாருங்கள் அவனும் புத்தனும் நண்பர்கள். அப்படி இருந்தும் அசோகன் தொடர்ந்து கொலை செய்து கொண்டே வருகிறானே? எங்கே நீதியாக இருந்தது நம் சமூகம்? நாடு முழுவதும் எப்போது பார்த்தாலும் போராட்டம்?. ‘இவன்’ அவனை வெட்டுவது. ‘அவன்’ இவனை வெட்டுவது. அந்தக் காலத்திலிருந்து இன்று வரைக்கும் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, நீதி என்ற ஒன்று வரவேண்டுமென்றால், அது இனிமேல்தான் வர வேண்டும். இராஷராஷசோழன் காலத்தில் தண்டனை இது : மழை பெய்யவில்லை. பூமி விளையவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். என்ன செய்வார்களென்றால் குடிசையில் இருக்கின்ற வெண்கல பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு குடிசைக்குத் தீயை வைத்து விட்டு அவனுக்கு சிவ துரோகி என்று பட்டம் கட்டி நாடு கடத்திவிடுவார்கள். இது தஞ்சை பெரிய கோயிலின் கல்வெட்டில் எழுதி இருக்கிறது. நிலத்தையெல்லாம் சிவனின் சொத்தாக எழுதி வைத்துவிட்டார்கள். குத்தகை கொடுக்கவில்லை என்றால் சிவனுக்குத் துரோகம் செய்துவிட்டதாக அர்த்தம். சிவனுக்குத் துரோகம் செய்தவனுக்கு தண்டனை என்னவென்றால், ‘‘மண் கலம் உடைத்து பொன் கலம் எடுத்து குடிசைக்கு தீ வைத்து சிவதுரோகி பட்டம் சூட்டி நாடு கடத்துதல்’’ இதுதான் தண்டனை. அப்போ என்றைக்கு நீதி இருந்திருக்கிறது?

தீராநதி : பொத்தம் பொதுவாக எல்லாம் அநீதியானவர்கள் என்று தீர்ப்பெழுதுவது சரியானதா?

நம்மாழ்வார் : பாரதியார் சொன்னதை எடுத்துக் கொள்ளுங்களேன். ‘‘உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு’’ என்று நான் சொல்லவில்லை பாரதியார்தான் சொல்லி இருக்கிறார். எங்கே இருந்திருக்கிறது நல்ல சமூகம்?

தீராநதி : சரி, இன்றைக்கு இருக்கும் வியாபார சமூகத்தை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?

நம்மாழ்வார் : உலகத்திலேயே முதன்முதலாக உழைக்காமலே சாப்பிட்ட கூட்டம் வியாபாரிகளின் கூட்டம்தான். பாண்டிச்சேரியில் டூப்ளேவுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். பண மூட்டைகளாக அடுக்கி அதன் மீது உட்கார்ந்து இருப்பான் டூப்ளே. பணம் குவிப்பதற்காக இங்கு வந்தான் அவன். பணம் குவித்துக்கொண்டு போகிறான் அவன். ஆனால் இந்த நாட்டில் குடிமகன் என்று சொல்லிக் கொள்பவன் டூப்ளே வைப்போல நடந்து கொண்டான் என்றால் இவனும் கொள்ளைக்காரன் போலவே நடந்து கொள்கிறான் என்றே அர்த்தம்.
_____________________________________________________________________
Posted by கடற்கரய்
Wednesday, May 14, 2008

எழுதியவர் : Posted by கடற்கரய் on: Wednesday, May 14, 2008 (7-Oct-15, 10:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1236

மேலே