ரசனை

ரசனை - நம் ரசனை ஒரு வரம் .............. கட்டுரை...
------------------------------------------------------------------------

ரசனை என்பது ஒரு வரப்ரசாதம்.... அதை பார்க்க முடியாது உணரமுடியும் நம்மால்...

இயற்கை, படைப்புகள் , பாடல்கள், படங்கள் இவற்றை எல்லாம் ரசிப்பது என்பது வேறு, நம்மை , நம் படைப்புக்களை, நம் வேலைபாடுகளை, நம் சமையலை மேலும் மேலும் ரசிப்பது என்பது வேறு..... நான் இங்கு பதிவு செய்ய நினைப்பது இரண்டாம் ரசனை பற்றியே...

நாம் செய்யும் வேலைகளை, சிறு, சிறு அலங்காரங்களை, உடையை, சேவைகளை... இன்னும், இன்னும் நம்மால் ரசிக்கமுடியும்... ரசிக்கவும் வேண்டும்,,,

உதாரணத்திற்கு---- நான், காலையில் வாசலில் கோலம் போடுவேன். சிறியதோ, பெரியதோ, போட்ட பிறகு கட்டாயம் நின்று சில நிமிடங்கள் அதை ரசிப்பேன்... அந்த ரசனை இருக்கிறதே அது கொடுக்கும் இன்பம், பெருமிதம், மனம் லேசாவது போல் தோன்றும்.... அந்த கோலத்தை தாண்டியும் , மிதித்தும் பல பேர் செல்லக்கூடும்..அதில் ஒருவர் அல்லது இருவர் நம்மை பாராட்டலாம் சில சமயம்... ஆனால், என்னுடைய ரசனை ஓராயிரம் பேர்கள் கொடுக்கும் பாராட்டுகளுக்கு ஈடாகுமோ??

ஒரு புது புடவை வாங்கி கட்டிக்கொள்கிறோம்... அதை முதலில் நாம் ரசிக்க வேண்டும்... ரசிக்க , ரசிக்க தன்னம்பிக்கை உதிர்க்கும் , இதில் ஐயம் இல்லை.... நான் அனுபவித்துள்ளேன்..... பல சமயங்களில்....

ஒன்றும் இல்லை, ஒரு கைவினை பொருள் வாங்கி அதை அலங்காரமாய் வீட்டில் வைக்க , எப்போவோ வரப்போகும் ஒரு விருந்தாளி கவனித்து "அஹ! அழகா இருக்கே?? எங்கே வாங்கினாய் இதை? " என்று கேட்பதற்கு பல நாள் காத்திருக்க தேவை இல்லை... !!அதை நேரம் கிடைக்கும் பொழுதோ அல்லது நம் மனம் சிறுது சஞ்சலம் பட்டிருக்கும் பொழுதோ , அந்தப பொருளை நீங்கள் ரசிதுப்பாருங்கள்!! , உங்களுக்குள் ஒரு மாற்றம் , மன தெளிவு மற்றும் மனம் லேசாவதை உணர்வீர்கள்....

பெண்களே !... சமையல் செய்வதை ரசியுங்கள்!!!!! செய்த பின் அதையும் ரசியுங்கள் !!! ... யாரும் வந்து நாம் செய்ததை பாராட்டப்போவதில்லை ... எப்படி இருப்பினும் "இதில் உப்பு இல்லை!" " என்ன இது ஒரே காரம்! " "இன்னும் நல்லா வருக்கவேண்டாமோ? " என்கின்ற வசனங்கள் தான் அதிகமாய் கேட்கமுடியுமே தவிர " அஹ !! அருமை! " இப்படி சமைக்க உன்னால் தான் முடியும்!" " அம்மாவை மிஞ்சிவிடுவாய் போலிருக்கே! " என்பது போல காதில் விழுவது கடினம்தான்...அதனால் நம்மை நாம் தாழ்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன??? எந்த உடம்பு உபாதை இருந்தாலும், மன வேதனைகள் இருந்தாலும் நம் கடமையிலிருந்து தவறுகிறோமா? இல்லை.... மற்றவர் பாராட்டுவதை விட நம் பாராட்டுக்கள் நம் மனதிற்கும் , உடலுக்கும் கட்டாயம் தேவை!!! இது நான் என் அனுபவத்தில் ஆராய்ந்த ஒன்று ... உண்மையும் கூட....

வேலை செய்யவே சரியாக இருக்கு... எங்கே இதற்கெல்லாம் நேரம் என்று இதை ஒதுக்கி விடாதீர்கள்.... வருத்தப்படுவீர்கள்....ஒரு முறை செய்து பாருங்கள்.... தொடர்வீர்கள்..... தன நம்பிக்கை பிறக்கும் ....

நான் ஒரு சிறு பாடல் புத்தகம், "எளிய நடையில் தமிழ் பாடல்கள்.." என்ற பெயரில் எழுதி, வெளியிட்டேன்.

அதில் ஒரு பாடல்...

விடிகாலை பொழுதில்
போட்ட கோலம் கண்ணை பறித்தது...

விளக்கேற்றி வைத்ததும் உள்ளத்தில்
புது வெள்ளம் பாய்ந்தது...

பால் பொங்கி வழிந்ததும் காபியின்
மனம் மூக்கை துளைத்தது..

நீராடி வந்தவுடன் கூந்தலில்
மல்லி வாசனை தந்தது...

இனிய காலை பொழுது மலர்ந்ததில்
எனக்கு புத்துணர்ச்சி பொங்கியது......

இந்தப்பாடலை, நான் படித்து , படித்து ரசித்தேன்.... மற்றவர் பாராட்டிற்காக நான் காத்திருக்க முடியாது... இதற்கு அர்த்தம் மற்றவர் பாராட்டும், ஊக்கமும் தேவை இல்லை என்பதில்லை.... நம் படைப்புக்களை நாம் ரசிப்பதில் ஒரு தனி இன்பம்....

ரசனையோடு வாழ்வோம்... புத்துணர்வு பெறுவோம்....

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி. மைதிலி ராம்ஜி (9-Oct-15, 12:48 pm)
Tanglish : rasanai
பார்வை : 122

மேலே