பிரபஞ்சத்தின் முகம் - குமரேசன் கிருஷ்ணன்
என் அடையாளங்கள்
என்னோடு இருக்கட்டும்
எவர்மீதும் அதைத் திணிக்கவோ
எவருக்கும் தாரைவார்க்கவோ
எனக்கு விருப்பமில்லை ...
உன் அடையாளங்களை
நீ பத்திரப்படுத்து...
வேட்டியணிந்தவன்
கோமணவாதிகளின் ஊரில்
கேவலமாயின்று
தெரியலாம் ...?
நல்லவனாய் நீ
நடக்கையில்
நமட்டுச் சிரிப்புடன்
நகரும் மனிதர்களால்
உன் முகங்கள்
சிலநேரம் சிதையலாம்
முகமூடி மனிதர்களின்
முகம் உணரும் முன்னரே
குரூர மனிதர்களின்
குழந்தை சிரிப்பினில்
உன்னை ..நீ
தொலைக்கலாம்
'தான் வாழ '
பிறர் இதயத்தை
குத்திக் கிழிக்கும்
குள்ளநரி கூட்டத்தின்
அடையாளங்கள்
உனக்கெதற்கு ...
உன் இதயம் குத்திக்கிழிக்கப்பட்டு
உன் நாசிவழி இரத்தவாடை
உன் செல்களையெல்லாம்
உயிரோடு எரித்தாலும் ...
அடிபட்டு ...அடிபட்டு
அசுரபலம் பெற்று
உண்மையின் உடைபூண்டு
நெஞ்சு நிமிர்த்தி நீ நடந்தால்
வஞ்சமும் லஞ்சமும்
முகத்திரைகள் கிழிந்து
மூச்சுவிடத் திணறத்துவங்கும்
அவர்களின் அடையாளமன்று
அவரறியாமலே
அழிவைநோக்கி
அவசரமாய் நகரும்
கனவுகள் இன்னமுமிங்கு
விதைக்கப்பட விதைக்கப்பட
முளைக்கும் செடிகளைக்கூட
வேரோடு பிய்த்தெறிய
முயலும் அதிகாரவர்க்கத்தின்
முடிவுகளை நீயன்று காண்பாய் ...
ஒரு துளி தீ
ஒரு துளி நீர்
ஒரு துளி காற்று போல்
ஒரு துளியாய் ...நீயும்
உன்னதத்திலிருப்பாய்...
அழிந்து கொண்டிருக்கும்
அவர்களின் அடையாளங்கள்
அழிக்க முடியாதபடி
உயிர்த்துக் கொண்டிருப்பாய்
நீ ...
காலங்கள் தன்சுவடுகளில்
அடையாளங்களை சேகரிக்கையில்
உன் அடையாளங்களன்று
உலகினுக்கு முகவரியாகும் ...
பொய்மைகளன்று
பொசுங்கிமடியும் வேளையில்
உண்மைகளின்
விசுவரூபங்கள்
விண்ணை ஆளும் ...!
அகிம்சைதான்
அடக்கமுடியாத
ஆயுதமென்பதை
அறிந்துகொள்ளும்
உலகம் மறுமுறையும் ...
எந்த பீரங்கிகளாலும்
எந்த தோட்டாக்களாலும்
துளைக்க முடியாதபடி
நெஞ்சு நிமிர்த்தி
"பிரபஞ்சத்தின் முகமாய் "
நின்றுகொண்டிருப்பாய்
நீயன்று மரணங்களை வென்று ...!
----------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்