உடன் பிறப்பு

முப்பிறவியில் நான் செய்த தவமோ...
இப்பிறவியில் நான் பெற்ற வரமோ...
உன் தம்பியாக நான் பிறந்தது......

பின்னாளில் நான் பிறக்க இருப்பதை
முன்பே அறிந்து எனக்கு முன்
அன்னையின் கருவறையை
ஆட்கொண்டாய்......

கருவறையில் பத்து மாதம் தங்கி ஆராய்ந்து, என் தம்பி பக்குவமாய் வளர ஏற்ற இடமென்று ஆண்டவனிடம் ஆய்வறிக்கை சமர்பித்தாய்.....

நீ அளித்த ஆய்வறிக்கையை அகழ்ந்தெடுத்த ஆண்டவனும் உன் தம்பியாக பத்துத் திங்கள் என்னைச் சுமக்க அன்னையிடம் பணித்தான்......

ஆண்டவனின் ஆணையை அப்டியே ஏற்ற அன்னை, பத்துத் திங்கள் பக்குவமாய் என்னைச் சுமந்து உனக்கு தம்பியாக பெற்றெடுத்தாள்.......

உன் தம்பியாக பிறந்த என்னை அன்னையோடு, அன்னையாக
அண்ணா நீ "யாரு தம்பி என் செல்லத் தம்பி" என அகம் குளிர அனுதினமும் கொஞ்சி மகிழ்ந்தாய்......

பள்ளிக்குச் செல்லும்போதும் பள்ளி நேரம் முடியம் போதும் பக்குவமாய் என் விரல் பிடித்து அழைத்துச் சென்று உன் பாசத்தில் மூழ்கடித்தாய்......

பத்து வயதில் பள்ளியில் மேடைப் பேச்சை முடித்து விட்டு வரும்போது, சிறந்த பேச்சாளன் என நான் பெற்ற முதல் பரிசு அண்ணா நீ தந்த முத்தம் தான்........

காலத்தின் கட்டளையால் நம் தாய் தந்தை பொருள் தேட புலம் பெயர்ந்த போதும் என் தாய் தந்தையாய் இருந்து என்னைக் காத்தவன்.......

பதினொன்றாம் வகுப்பில் முதல் மாணவனாக பரிசு பெற்று வரும்போது உன் முத்தத்தால் முழுமுதற் பரிசை தந்நவன்........

கல்லூரியில் சானியா மிர்சாவாக மேடையேற நான் தயங்கிய போதும் தயக்கமின்றி சாதிக்கத் தூண்டியவன்......

மாதுளையின் பற்களை பாசத்தோடு பக்குவமாய் பிரித்தெடுத்து மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக கொடுத்தவன்....

நான் பெற்ற சின்ன சின்ன வெற்றிகளையும் சிகரத்தைப் போல உயர்த்திப் பேசுபவன்.....

ஓவ்வொரு நொடியும் என்னோடு இருந்து என் உயர்வினையே தன் வாழ்கையின் லட்சியமாய் கொண்டவன்......

கண்ணன் வாய்மொழி கீதை என்றால் எனக்கு என் அண்ணன் வாய்மொழியே கீதை.....

"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பது இதிகாசப் பழமொழி, என்னோடு நீ இருந்தால் அந்த இமயமும் என் காலடியில்.......

அண்ணா உனக்காக நான் எழுதிய உண்மை க(வி)தை சில பொய்களோடு, இஃதை படித்ததும் இன்னொருமுறை என் கண்ணத்தில் நீ முத்தமிட்டால் இப்பிறவிப் பயனை அடைந்துவிடுவேன் இக்கணமே......!!!

எழுதியவர் : வாணிதாசன் (11-Oct-15, 9:32 am)
சேர்த்தது : வாணிதாசன்
Tanglish : udan pirappu
பார்வை : 7889

சிறந்த கவிதைகள்

மேலே