சொன்னதை செஞ்சீங்களா - 1

நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் குவிவதால், தமிழகத்தில், சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஆர்டர்'கள் குறைந்துள்ளன. இதனால், பட்டாசு வகையிலான, வணிக வரி மற்றும் கலால் வரிகளில் மட்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு, 530 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டில், 95 சதவீத பட்டாசு உற்பத்தி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடக்கிறது; இங்கு, 780 பட்டாசு ஆலைகள் உள்ளன. மொத்தம், ஐந்து லட்சம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலைச் சார்ந்துள்ளனர். ஆண்டுதோறும், தீபாவளிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே, கை நிறைய, ஆர்டர்களுடன் சுறுசுறுப்பாகி விடும் இந்த பட்டாசு ஆலைகள், இந்த ஆண்டு வேலை குறைந்து காணப்படுகின்றன; தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வாரத்திற்கு, மூன்று நாட்கள் மட்டுமே வேலை நடக்கிறது.

சீன பட்டாசு இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் இரும்பு, 'ஸ்கிராப்' மற்றும் பொம்மைகள் என்ற ஆவணப் பெயருடன், சீனாவில் இருந்து பட்டாசுகள், கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் வழியாக இறக்குமதியாகின்றன.

'நம் நாட்டிற்குள் இப்படி கள்ளத்தனமாக வரும், சீன பட்டாசுகளின் ஊடுருவலைத் தடுக்க வேண்டும்' என, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். 'மாநில அரசுகளும், சீன பட்டாசு விற்பனையைத் தடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும், சீன பட்டாசுகள் வரத்து தொடர்வதால், சிவகாசி ஆலைகள் தள்ளாடுகின்றன.

எழுதியவர் : செல்வமணி (13-Oct-15, 9:28 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 218

சிறந்த கட்டுரைகள்

மேலே