மறுஜென்மம்
அம்மாவின் காலடியில் படுத்திருந்தாள் கயல். பொழுது விடிந்ததும், நித்திரையால் எழுந்த தாய் கயலைப் பார்த்து சிரித்தபடி மெதுவாகத் தட்டியெழுப்பி,
“என்ன கயல், இண்டைக்குமா?, நித்திரையில நடக்கிற உன்ர வியாதி எப்பதான் உன்ன விட்டுப் போகப் போதோ தெரியல. சரி எழும்பு, ஸ்கூலுக்கு ரைம் ஆச்சு, போய் குளிச்சிட்டு வா”
கண்ணைக் கசக்கியவாறு எழுந்த கயல், சுற்றிப் பார்த்து விட்டு,“எப்பிடிமா நான் இங்க வந்தன்?”ஒன்றுமே தெரியாதது போல தாயிடம் கேட்டாள், தாயும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு சென்று விட்டா. சிறிது நேரத்திற்க்குப் பின் அம்மா வந்து பார்த்தபோது, அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். சிறிது நாட்களாகவே இவளைக் கவனித்துக் கொண்டு வருகிறாள்.
“கயல் உனக்கு ஏதாவது பிரச்சினயா?, உன்ர றிப்போட்டும் நேற்றுப் பாத்தன், எல்லாத்துக்கும் சரியான குறைவு, இதுவரைக்கும் நீ இப்பிடி மார்க்ஸ் எடுத்ததில்லயே."
"உன்ர ரீச்சர நேற்றுக் கண்டன், அவ என்னட்ட கேக்கிறா, வீட்ட ஏதாவது பிரச்சினயா எண்டு, நான் அப்பிடியெல்லாம் இல்ல, ஏன் அப்பிடி கேக்கிறீங்க என்டதுக்கு, கயல் இப்ப முந்தின மாறி இல்ல, படிப்பில சரியான வீக்கா போனா, கிளாஸ்ல படிப்பிக்கிறதக் கூட சரியாக் கவனிக்கிறேல, எதையோ யோசிச்சிக் கொண்டே இருப்பா அதுதான் நான் அப்பிடிக் கேட்டன் என்டா, நான் ஒருமாரிச் சமாளிச்சிட்டு வந்திட்டன்”
“இப்ப எல்லாத்தயும் யோசிச்சுப்பாத்தா உனக்கு ஏதோ பிரச்சின இருக்கு, சொல்லு கயல், என்ன என்டாலும் பறவாயில்ல, உன்ட அப்பா பாத்துக்குவார், உனக்குத்தான் அவரப்பற்றித் தெரியுமே, உனக்கு ஒன்டென்டா அவர் தாங்கமாட்டார். அவருக்கு என்டு இந்த ஊரில நல்ல மரியாத இருக்கு, அவற்ற மரியாதய கெடுக்கிற மாதிரி ஏதும் நீ செய்திடாத”
“என்ன பிரச்சின என்டாலும் மனசு விட்டுச் சொல்லு.”அம்மா நீளமாய் அறிவுரை சொல்ல, சிரித்தபடி எழுந்த கயல் அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி,
“ஐயோ அம்மா, நீங்க நினைக்கிறமாதிரி எனக்கு ஒரு பிரச்சினயும் இல்ல, சும்மா மனசப் போட்டு குழப்பிக்காதேங்கோ. எனக்கு ஏதும் பிரச்சின என்டா உங்ககிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப் போறன், நீங்கதான் என்ர செல்ல அம்மா ஆச்சே. என்ன எனக்கு இப்ப படிக்கிறதில கொஞ்சம் பஞ்சி பிடிச்சிட்டு, எனி நல்லாப் படிக்கிறன் அம்மா”
“ நீங்க கவலப்படாதேங்கோ. எப்பவும் உங்கட மரியாதய கெடுக்கிறமாதிரி இந்தக் கயல் நடந்துக்கவே மாட்டா, போதுமா?”“சரி அத விடுங்கோ. நீங்க போய் கயல் குட்டிக்கு சாப்பாடு செய்வீங்களாம், நான் போய் குளிச்சிட்டு வருவனாம்.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
கயல் அந்தப் பரம்பரையிலேயே முதல் பெண் வாரிசு என்பதால் எல்லோருக்கும் சரியான செல்லம். கயலின் தந்தை அவள் மீது வைத்துள்ள பாசத்தைப் பார்த்து அவளுடைய நண்பர்கள் பொறாமைப்படுவார்கள். ஆனால் கயலின் முகமோ எப்போதும் சோகம் கலந்ததாகவே இருக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, பாடசாலை விடுமுறையென்பதால் அவளின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். ஆனால் அவளோ வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். நண்பர்கள் வந்ததைக்கூட அவள் கவனிக்கவில்லை.
“கயல்……..!”அவர்கள் ஒன்றாகக் கத்த அவள் திடுக்கிட்டு நினைவுக்கு வந்தாள்.“கயல், நீ ஏன்டீ எப்ப பாத்தாலும் மூஞ்சய தொங்கப்போட்டுக் கொண்டே இருக்கா, உனக்கு என்ன குறை சொல்லு பாப்பம், இப்பிடி ஒரு வசதியான வாழ்க்கையும், பாசமான நல்ல அப்பா, அம்மாவும் கிடைக்க நீ குடுத்துவச்சிருக்கனும். லைவ்வ சும்மா என்ஜோய் பண்ணுவியா, அத விட்டிட்டு எப்ப பாத்தாலும்” வித்யா சொல்லி முடிக்க முன்னதாகவே அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை.
“கயலுக்கு என்ன நடந்திச்சு, நானும் இப்ப கொஞ்ச நாளாப் பாக்கிறன், அவளின்ட போக்கில நிறைய வித்தியாசமிருக்கு” தனு கூறினாள் அதற்கிடையில் அவளை இடைமறித்த அகிலா,
“என்ன வித்தியாசத்த நீ அவளிட்ட கண்டுபிடிச்சனீ? சும்மா போ, அவள் முந்தி தொடக்கமே இப்பிடித்தானே, அவளுக்கு உந்த பணக்கார வாழ்க்க பிடிக்கல, சாதாரண வாழ்க்கயதான் விரும்பிறாள், அத எத்தினயோ தடவ நம்மகிட்டயும் சொல்லி இருக்காள், எனக்கென்டா அவள் அதால தான் எப்பவும் கவலையாவே இருக்காள் என்டு தோணுது, நீ சும்மா எல்லாம் கற்பன பண்ணாத” என்றாள்.
அதற்கு தனுவும் தலை அசைத்துவிட்டு,
“சரி நீ சொல்லிறதாவே வச்சுக்குவோம், உங்கள் எல்லாருக்கும் தெரியும் கயல் தான் நம்மட கிளாஸ்லயே ஒவ்வொரு ரேமும் முதலாம் பிள்ளயா வாறவள், ஆனா கடசி ரேம் அவள்தான் கடசி பிள்ள, இதுக்கு சான்சே இல்ல, அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சினையிருக்கு என்டது இதிலயே புரியல”. அவள் சொல்லி முடிக்க, எல்லோரும் “ம்..ம்.. நீ சொல்லிறதும் சரிதான்” என்று ஆமோதித்தனர்.
இவர்கள் இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அங்கு வந்த கயல், “சரி சொல்லுங்கடீ, எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்க? ஒரே தலயிடியா இருந்திச்சு, அதுதான் போய் முகம் கழுவீற்று வந்தனான். ஏய் நாம விளயாடி நிறய நாளாச்சு, ஏதாவது விளயாடுவமா?” “ஏய் கயல் விளயாடுறத விடு, உனக்கு என்ன பிரச்சின அத முதல்ல சொல்லு. ஒரு பிரச்சினயும் இல்ல என்டு மட்டும் பொய் சொல்லாத, உன்ர முகம்தான் றொம்ப நல்லாக் காட்டிக் கொடுக்குதே. ஒன்டு மட்டும் புரிஞ்சுக்கோ, சந்தோசத்தயும் கவலையையும் பகிர்றதுதான் உண்மையான ப்ரண்ட்சிப். இதுக்கு மேலயும் நாம உன்னக் கட்டாயப் படுத்த விரும்பல, விரும்பினா சொல்லு. ஆனா யாரிட்டயாச்சும் மனசுவிட்டு கதடீ, அப்பதான் உனக்கும் ஒரு ஆறதலா இருக்கும்,” என்றால் தனு. கயல் அழுதபடி, "என்ன மன்னிச்சிருங்கடீ, நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எதையும் மறச்சதில்ல, ஆனா இத எப்பிடி உங்ககிட்ட சொல்லிறதினு எனக்குத் தெரியல, வாயெல்லாம் கூசுது, அம்மாக்குக் கூட இத நான் சொல்லல, என்ர மனசிலயே வச்சிக்கிட்டு, ஒவ்வொரு நாளும் செத்திக்கிட்டு இருக்கன். நீங்க இவ்வளவு தூரம் கேக்கிறதால சொல்லிறன், யாருக்கிட்டயும் சொல்ல மாட்டன் என்டு எனக்கு சத்தியம் பண்ணித்தரனும், ஓகேயா!" எல்லோரும் “இல்லக் கயல், சத்தியமா நாம யாருக்கிட்டயும் சொல்லமாட்டம், நீ தைரியமாச் சொல்லு கயல்” என்றனர்.
கயல் எல்லாவற்றையும் சொல்ல, எல்லோரினது கைகளும் வாயில். “கயல், நீ இவ்வளவு சோதனைக்குள்ள வாழிறாயா? நாம நினச்சுக்கூடப் பாக்கல.கடவுளே இப்பிடியும் இருக்கினமா மனுசர்? சிக், இப்பிடிப் பட்ட மனுசர நிக்கவச்சு சுடனும்.” என்றாள் அகிலா.
“ஏய் கயல்! இதில இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு, நீ பேசாம இந்த ஊர விட்டு எங்கயாவது போயிடு கயல். இதச் சொல்ல கஸ்ரமாத்தானிருக்கு, ஆனா உனக்கு வேற வழியில்ல கயல். யோச்சு முடிவெடு, ஏதும் உதவி வேணுமென்டா சொல்லு. நாங்க உன்கூட எப்பவும் இருப்பம், கடவுள்கிட்ட உனக்காக ப்றே பண்ணிறம், நிச்சயம் நல்ல வழிகாட்டுவார். சரி கயல் நேரமாச்சு, நாங்க போட்டுவாறம்!" என வித்யா சொல்லிமுடிக்க, எல்லோரும் புறப்பட்டுவிட்டார்கள்.
அன்று அவள் பல்கனியிலிருந்து அழுது கொண்டே இருந்தாள், இருட்டியது கூட அவளுக்குத் தெரியவில்லை, அப்போது யாரோ வரும் நிழல் கண்டு, பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். அது வேறு யாருமில்லை, அவளுடைய தந்தை.
“என்ன கயல் இந்த நேரத்தில இங்க இருக்கா, அதுவும் பனி வேற கொட்டுது, போ, போய் படு செல்லம், காலம ஸ்கூல் போகனும் எல்லா” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
காலை விடிந்ததும் வீட்டுக்காரர் கயலை எங்கு தேடியும் அவளைக் காணமுடியவில்லை. முடியாத கட்டத்தில் பொலிஸிடம் சென்று முறையிட்டனர், அவர்களும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தார்கள். இது மெதுவாக ஊர் மக்களிடம் கசியத்தொடங்க அவர்கள் கயலைப் பற்றித் தவறாகப் பேச ஆரம்பித்தார்கள்.
கயல் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தில்….!
அவள் இதுவரைக்கும் தனியாக எங்கும் சென்றது கிடையாது. அதனால் இடம் வலம் தெரியாமல் தடுமாறிப் போய் நின்றாள்,திடீரென்று ஏதோ யோசனை வந்தது போல் மன்னார் பேரூந்தில் ஏறி உட்கார்ந்து விட்டாள். ஆனால் அவளின் முகத்தில் பயமோ தெளியவில்லை, சுற்றி யாரும் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு, யாருமில்லை என்று பெருமூச்சு விட்டாள்.
கடவுளின் நாமத்தை உச்சரித்தபடியே இருந்தாள்.
திடீரென்று பஸ்ஸுக்குள் தனது தகப்பனும், அவருடன் கொஞ்சப்பேரும் வருவதை கண்ட கயல், ‘கடவுளே, இது என்ன சோதன, எப்பிடி தப்பிக்கப் போறனோ, என்ன காப்பாத்துங்க கடவுளே’, என்றபடி தலையை மடியில் வைத்த படி இருந்தாள். ஆனால் தகப்பனின் கண்களில் கயல் அகப்பட்டுவிட்டாள். “ஏய் கயல் நீ இங்க தானா இருக்கிறா, உன்ன அவ்வளவு லேசில விட்டிடுவனா என்ன!” சரி வா வீட்ட போவம்."
கயலின் கையைப் பற்றி இழுத்தபடி தந்தை!
ஆனால் கயலோ “ஐயோ அப்பா என்ன விட்டிடுங்கோ, நான் வரமாட்டன், என்ன வாழவும் விடிறீங்க இல்ல, சாகவாச்சும் விடிங்களன், யாராவது என்ன காப்பாத்துங்களன், ப்ளீஸ் இந்த ஆளிட்ட இருந்து என்ன காப்பாத்துங்கோ” என கத்தினாள். தட்டிக்கேட்க வந்தவர்களிடம் “இது தேப்பனுக்கும் மேளுக்கும் இடயில நடக்கிற பிரச்சின, இதில நீங்க யாரும் தலயிட வேண்டாம்” என்றார் தகப்பனுடன் வந்த ஒருவர்.
கயல் “யாரு இவரா என்ர அப்பா, அப்பா என்ற வார்த்தய கேவலப்படுத்தாத. என்ர அப்பா எப்பயோ செத்திட்டார்.”
“மேள், மேள்.. நான் இதில உட்காரலாமா? மன்னிச்சிரு புள்ள, உன்ர நித்திரயக் குழப்பீற்றனாக்கும். நான் இதில உட்காரலாமா மேள்?” என்று கேட்டார். அவளும் சற்றுத் தயக்கத்துடன் தள்ளியிருந்தாள். ‘கடவுளே என்கூட இருங்கோ, என்ன காப்பாத்துங்கோ’என்றபடி மனதிற்குள் கடவுளை வேண்டியபடி இருந்தாள்.
அருகில் இருந்தவரை ஒருக்கா திரும்பிப் பாத்தவள், ‘ஐயோ இவர எங்கயோ பாத்தமாறியிருக்கே. யாரா இருக்கும், முகத்தப் பாத்தா ஏதோ கன நாள் பழகினமாறி இருக்கு, ஹ்ம், ஆனா யாரென்டுதான் தெரியல, சரி யாராவும் இருந்திட்டு போகட்டும், என்ன யாருனு கண்டுபிடிக்காட்டிச் சரி’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அவர் “நீ கயல் தானே? உனக்கு என்ன யாருன்னு தெரியுதா?” விழிபிதுங்கிய நிலையில் கயல்! 'ஐயோ கடவுளே! இந்த ஆள் என்ன என்ர பெயரையே சொல்லுறார், அப்ப நான் நினச்சது சரிதான் போல, இவர் தெரிஞ்ச ஆள்தான், சந்தேகமே இல்ல, அப்பிடினா அப்பாகிட்ட போய் சொல்லிடுவாரே, இப்ப என்ன செய்வம், ஏதாவது யோசி கயல், யோசி….
ஆ, ஒரு ஐடியா, பேசாம ‘யாரு கயல்?, நீங்க வேற யாரோ என்டு நினச்சு என்கிட்ட பேசிக்கொண்டிருக்கிறியள் போல என்டு சொல்லிப் பாப்பம்' இப்படி கயலின் மைன்ட்வொய்ஸ் அலாரம் அடித்தது.
ஆனால் கயலை முந்திக்கொண்டு, “என்ன கயல் கனக்க யோசிக்கிறாய், என்ன மறந்திட்டியா? உனக்கு நெட்டிலிப் பிள்ளையார் கோயில் ஞாபகமிருக்குதா? இப்ப ஒரு ஏழு வருசத்திற்கு முன்னம் நான் அந்தக் கோயில்ல குருக்களா இருந்தன், அப்ப உனக்கு வயசு ஒரு பத்து இருக்கும்னு நெனக்கிறன். நீ அங்க ஒவ்வொரு நாளும் வந்து என்ன கூப்பிட்டு, எனக்கு சொன்னா கடவுளிட்ட போய் சேரும்னு நெனச்சு, எல்லாப் பிரச்சினயும் சொல்லி அழுவியே, அது விசியமா நான் உன்ர அப்பாகிட்ட கதச்சன், அது பெரிய பிரச்சினயாப் போய், நான் ஊர விட்டிட்டே வந்துட்டன்."
"இப்ப நானும் என்ர மனுசியுமா மன்னாரிலதான் இருக்கம். என்ன மன்னிச்சிருமா, உனக்கு என்னால உதவி செய்யேலாமப் போச்சு. ஆ, இப்ப ஞாபகம் வந்திச்சோ இல்லயோ."
கயல்,“ஐயா நீங்களா? இந்த உலகில நேசிக்கிற, மதிக்கிற ஒரு ஆள் நீங்க, உங்களயே மறந்திட்டனே” இரு கைகளையும் கூப்பியபடி தனது கதையையும் சொல்லி முடித்தாள் கயல்.
ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் அந்த ஐயர். அவரின் கண்களில் கோபமும், ஆவேசமும் தெரிந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “நீ கவலப்படாத புள்ள, நீ நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறா, உனக்கு எந்தப் பயமும் வேணாம், நீ எந்த நம்பிக்கையில வெளிக்கிட்டியோனு எனக்கு தெரியல, ஆனா எனி உனக்கு நானிருக்கன். “
“என்ன உன்ர அப்பாவா நெனச்சுக்கோ. எனக்குக்கு புள்ள இல்லனு நான் எத்தனயோ தடவ கடவுள்கிட்ட அழுதிருக்கன், அவர்தான் உன்ன என்கிட்ட அனுப்பியிருக்காரு”
“என்ர மனுசி உன்ன கண்டா றொம்ப சந்தோசப்படுவாள், நீ அவள அம்மானு கூப்பிடு, அந்த வார்த்தயக் கேக்கிறதுக்காகவே அவள் நிறய நாளா காத்திருக்காள்.”
“ஆனா ஐயா நீங்க ஆச்சாரமான பிராமண குடும்பத்த சேந்தனீங்க, நான் உங்க கூட வந்திருந்தா உங்களப் பற்றி எல்லோரும் தப்பாக் கதைக்க மாட்டாங்களா?”
“கயல் நீ முதல்ல நம்ம ஆத்துக்கு வா, யாரு என்ன கதச்சாலும் எனக்கு கவலையில்லை. நான், நீ, என்ர மனுசினு நாம சந்தோசமா இருக்கலாம். சரி எழும்பு புள்ள, வீடு வருது, இறங்குவம்.” வீட்டிற்கு வந்ததும் கயலைக் கண்ட ஐயாவின் மனைவி மணிமேகலை "யாருங்க இந்தப் பொண்ணு?" என கேட்க "இவள்தான் கயல், உன்கிட்ட இவளப் பற்றித்தான் அடிக்கடி சொல்லுவனே ஞாபகமிருக்கா, எனி இவள்தான் நம்மட மகள். உன்ன அம்மா என்டு கூப்பிட ஒரு ஆள் வந்திட்டுது, உனக்கு சந்தோசம்தானே?" சந்தோசத்தில் மிதந்த அவளுக்கு, இவள் ஏன் இங்கு வந்தாள் என்று கூடக் கேட்கத் தோணவில்லை. கட்டிப்பிடித்து முத்தமிட்டாள். கயல் "உங்கள மாறி நல்லவங்களயும் படச்சிட்டு, என்ர அப்பாவ மாறி ஒரு கொடூர மிருகத்தையும் கடவுள் படச்சிருக்கிறார். ஏன் அம்மா?" "நீ ஒன்னுக்கும் கவலப்படாத, எனி நீ நம்மட மேள். என்ன நடந்தது என்டு எனக்கு தெரியா, ஆனா நான் அதக் கேக்கவும் விரும்பல, நீ எல்லாத்தயும் மறந்திட்டு புது வாழ்க்க வாழு" என சொல்லி முடித்தாள் மணிமேகலை.
சிரித்தபடி கயல் "எப்பிடிமா நான் எனி புது வாழ்க்க வாழ முடியும், மறக்க நினச்சாலும் அது என்னால முடியாதுமா. மறக்கிற விசியமா என்ர வாழ்க்கைல நடந்திருக்கு" "சரி சரி, கயல் கனதூரம் பயணிச்சது களைப்பா இருக்கும், போய் கை, கால் அலம்பிற்று வா" என்றார் ஐயா. மறுநாள் அதிகாலையில் ஐயாவின் காதில் இடி விழுந்தது போல் ஒரு செய்தி.கயல் கிணற்றுக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டாள். அங்கு ஒரு கடிதம் "எனது சாவுக்கு யாரும் காரணமில்ல, இது என்ர சொந்த முடிவுதான். மற்றும் ஐயாவும் அம்மாவும் என்னை மன்னிச்சிடுங்கோ, எனக்கு இத விட வேற வழி தெரியல. அடுத்த ஜென்மத்திலயாவது நான் உங்கட மகளாப் பிறக்க வேணும்." என அதில் எழுதப்பட்டிருந்தது.
மேலும் பிரேத பரிசோதனையில் அவள் கற்பமாக இருந்தது தெரியவந்தது!
– பிறைனா நாதன்