பலியும் எழும்புமொரு பாடலும்

சாத்தானின் குதிரைகள் கால்களைத் தூக்கி கனைக்க
அங்கவீனமான மக்கள் சவப்பெட்டியை சூழ்ந்தழுகிறார்கள்
எத்தனையோ தடவைகள் கொல்லப்பட்ட
தனது புதல்வியை சாம்பலாக்கும் தாயகம்
ஒரு கொலையாளி

கிளிநொச்சிப் பட்டினத்தின் தெருக்களில்
தாயாகி நின்ற அவளின் குரல் நிறைகிறது
இருப்பவற்றையும் இழக்கும் தொலைதூரங்களில்
அவளின் சிரிப்பை, பேச்சை
நான் பாதுகாக்கிறேன்

கனவுகளுக்குள் ஊர்ந்து திரிகின்றன சன்னங்கள்
எனது தலைக்குள் வெடிக்கிறது
அவளின் கைத்துப்பாக்கி

அக்கா
உன்னைப் போர்த்த எமக்கொரு கொடிவேண்டும்
உன்னைத் தாக்க எமக்கொரு நிலம்வேண்டும்
வேறெதுவும் வேண்டாம்
அதுவரை யாம் எரிவோம்

இறந்து கிடக்கும் நீ என்பது நீயல்லவே
நிமிர்வின் பெருவலி
சித்திரவதையின் பகல்
எனது அக்கா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி அவர்கள் பல்வேறு உடல் உளச் சித்திரவதைகளுக்கு பிறகு கொல்லப்பட்டப் போது.

எழுதியவர் : அகரமுதல்வன் (21-Oct-15, 10:22 am)
பார்வை : 83

மேலே