எத்தனை அழகு எல்லாமே அழகு

மனதை மயக்கும்
மழையின் ஓசை அழகு !
மழை நீரில் நடைபோடும்
மறிக்காத நீர்க்குமிழி அழகு !
மஞ்சள் நீராடும்
அந்தி வானம்
மாலைநேர அழகு !!!

விழிகள் பேசும்
வினோதம் அழகு !
விழிதேடும் விடை அழகு !
விரல் கோதும் விதம் அழகு !!!

பகலவனைக் கண்டு
பதுங்கும் பனித்துளி அழகு !
பழம் கொறிக்கும் அணிலின்
சுறுசுறுப்பு அழகு !
புதுப்புத்தகப் பக்கங்களில்
நுகரும் புது வாசம்
புதியதோர் அழகு !!!

தலையணையில் கிட்டாத
தாய்மடி இதம் அழகு !
தீண்டுவது தெரியாமல்
தீண்டும் தென்றல் அழகு !
தீபாவளி வெடி முழக்கம் கூட
திகட்டாத ஓர் அழகு !!!

அன்னை பாடும்
தாலாட்டு அழகு !
ஆசிரியர் இடும்
அரைக்குட்டு அழகு !
அதிகாலை ஆழியில்
குளித்தெழும் ஆதவன்
அழகோ அழகு !!!

உழைத்து களைத்த பின்
உறக்கம் அழகு !
ஊஞ்சல் ஆடுகையில் வரும்
ஓயாத ஒலி அழகு !
விரும்பி வாங்கிய
குழந்தை உதை கூட
வினோத அழகு !!!

காலை நேர
பறவை ஒலிகள் அழகு !
கானகத்தே கவிபாடும்
குயிலோசை அழகு !
காதோரம் கடக்கும் போது
கொசு தரும் இம்சை கூட
ஓர் அழகு !!!

மலை நடுவில் ஒளியும்
மாலை நேர சூரியன் அழகு !
முட்டினாலும் வலிக்காத
நத்தையின் கொம்புகள் அழகு !
முற்றிய நெற்கதிர்கள்
முகம் சாய்க்கும் பணிவும்
முற்றிலும் அழகு !!!

காதல் நெருக்கத்தில்
காற்று கண்ட ஏமாற்றம்
காமம் கொண்ட அழகு !
கன்னம் வரையும்
கனிந்த சுருக்கங்கள்
காலனை அழைக்கும்
கடைசி கால அழகு !காணுதற்கினிய கனவு
கலையும் வரை அழகு !!!

துணை தேடும் மழைக்கால
தவளை ஒலிகள் அழகு !
தூறலில் நின்று ஆடும்
துளிர்விட்ட இலைகள் அழகு !
தூவானம் வரையும்
கருவியற்ற அரைவட்டம்
அத்தனை அழகு !!!

வெண்மை குழைத்து
தண்மை பூசும்
வெண்ணிற இரவு அழகு !
வெற்றிடம் நுழையாத
ஒலியின் வெட்கம் அழகு !
வெட்டவெளி வாரி இறைத்த
விண்மீன்கள் விண்ணின் அழகு !!!

பிரிவின் பின் கூடுதலில்
பின்னிப் பிணைதல்
காதலுக்கு அழகு !
பின்னழகு போர்த்தும்
பின்னாத கூந்தல்
கன்னிக்கு அழகு !
பின்விளைவு அறியா வேகம்
இளமைக்கு என்றும் அழகு !!!

சக்கரத்தில் சரியாத
சரியான மண்பானை
குயவனின் கலையழகு !
சேம இலை உதிர்த்த
பாதரச நீர்த்துளிகள் அழகு !
செதுக்கிய சிலையில்
கல்லின் பொறுமை கூட
சிந்தனைக்கு ஓர் அழகு !!!

நீலம் குழைத்த வானில்
நீந்திச் செல்லும் மேகம் அழகு !
நீரோடை நடுவே
நின்றாடும் கொக்கின்
நீண்ட தவம் அழகு !
நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டு(ம்)
நிகழும் நினைவுகள் என்றும்
நீங்காத அழகு !!!

தோல்வியில் நனைந்த
வெற்றி அழகு !
தோல்வியை நினையாத
நெற்றி அழகு !
தோல்வியில் துவளாத மனம்
தோல்விக்கே அழகு !!!

கடையாத தயிரின்
உடையாத நிலை அழகு !
கடையாணி மை போடும்
கச்சிதமான வட்டங்கள்
கூட்டு வண்டிக்கு
கூடுதல் அழகு !

காலத்தை வென்று நிற்கும்
கன்னித் தமிழ் என்
கவிதைக்கே அழகு !!!

- பா.வெ.

எழுதியவர் : பா.வெங்கடேசன் (21-Oct-15, 11:09 am)
பார்வை : 593

மேலே