செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து --கயல்விழி

வெண்மதியை மிஞ்சும் இவள் முகம்
வெண்பஞ்சை மிஞ்சும் இவள் மனம்
தேனின் பிறப்பிடம் இவள் மொழி
தேவதை இவள் எங்கள் கனிமொழி .

சிரிக்கும் பட்டாம்பூச்சி இவள்
தெய்வம் தந்த செல்வமிவள்
எட்டி நடக்கும் புது மலர்
பூமியில் வாழும் நட்சத்திரம் .

கன்னக்குழிகள் கூட கதை பேசும்
கண்சிமிட்டி இவள் சிரிக்கையிலே
மென் விரல்கள் கூட நடனமிடும்
கைவீசி இவள் நடக்கையிலே .

தனிமை இவளுக்கு பிடிக்காது
தங்க நகையும் கூட பிடிக்காது
மஞ்சள் வெயில் தினம் ரசிப்பாள்
காரணம்
அவளை போல் அது அழகு என்பாள் .

கடவுள் கண்ணை குத்தும் என்பாள்
கண்ணடித்தே களவு செய்வாள்
கோபமும் குறும்பும்l சோதரர்கள்
கொஞ்சலும் கெஞ்சலும் -எம்
ஆயுதங்கள் .

சித்தி மிட்டாய் வேணும் என்று
செல்லமாய் தினமும் அடம்பிடிப்பாள்
உனக்கு மட்டுமென கொடுத்தாலும்
பகிர்ந்து உண்டே அகமகிழ்வாள் .

அக்கா பெற்ற மழலை இவள் -எனக்கு ஆறுதல் தருகின்ற அன்னையிவள் .
வாழ்ந்திட வேண்டும் இவள் நூறாண்டு
வாழ்த்தி மகிழ்ந்திட வாருங்களேன் .!!

எழுதியவர் : கயல்விழி (21-Oct-15, 4:18 pm)
பார்வை : 718

மேலே