கடலில் கலந்த கண்ணீர்

..கடலில் கலந்த கண்ணீர்....
தினமும் சூரியனை திங்கும் அந்த மேற்கு மலைக்கு எதிரே தான்
என் ஊர்.
ஒரு முருகன் கோவில் அருகில் மாதா கோவில்..
ஊருக்கு ஒதுக்குபுறமாய்
நான் இருக்கும்
அந்த ஒற்றை பனைமரம்..
என் அம்மையை பார்த்தீரா...
பாட்டி..
குமரா.
சிரிப்பு
என்று சத்தங்கள்
வந்து கொண்டே
தான் இருக்கும்
என் பனையைத்தேடி..
எனக்காகவே
முற்றத்தில் சிந்திவிட்டு போகும் குழந்தை..
ராணுவம் கிழக்கு நோக்கி முன்னேறிவிட்டது
வானொலி கதைத்துக் கொண்டு இருந்தது...
எல்லோரும் அங்கும் இங்குமாக ஓட..
அடுத்து நம்ம ஊர் தான்
ஊர் காற்று சொல்லிக் கொண்டே
பதுங்கு குழியை நோக்கி ஓடி ஒளிந்து கொண்டது..
நரைத்து போன உயிர் ஒன்று
இருமி கொண்டே இருந்தது...
எதுவுமே செய்ய முடியாத
முருகனும் , மாதாவும் ஊமையாய் நின்றார்கள்..
அவர்களை இடிக்க
இயந்திர மிருகம் வரும் என்று தெரியாமல்..
உயிரை கையில் பிடித்துக் கொண்டு..
தன் வீடு, தன் தெய்வம் ,
தன் தெரு,
தன் காற்று,
தன் மரம் ,
தன்னையும் விட்டு விட்டு..
கொஞ்சமாய் உயிரையும்
நெஞ்சு நிறைய துக்கத்தையும் எடுத்துக் கொண்டு.
அந்த ஊரின் உயிர்களெல்லாம்
கால்போன திசையில் எதையோ தேடிப் போனது..
யாரிடமும் கேட்காமல்
அந்த திண்ணை
ஜன்னல்
என்று சொந்த வீடு போல்
ஓடியாடி விளையாடிய அந்த ஊர்க்காற்று மட்டும்
பதுங்கு குழிக்குள் இருந்து எட்டி பார்த்தது
தனியாக இருந்த அந்த நரை உயிரின்
கையை பிடித்துக் அழுது கொண்டு இருந்தது
என்னை சுவாசிக்க
யாருமே இல்லையா?
என்று..
ஊரே ஊர்வலமாய் போக நானும் என் ஒற்றை பனையை விட்டு சிறகொடிந்து பறந்தேன்
எப்படி காற்றடித்தாலும் ,
புயலோ, மழையோ,
அந்த பனைதான்
அது வீடு மட்டுமல்ல என்
உயிரும் கூட
எனக்கு முன்பே பல பிணங்கள்
நடந்து கொண்டு இருந்தது
உயிர்களை தொலைத்து விட்டு..
நாங்கள் போகிறோம் காற்றடிக்கும் திசையை நோக்கி..
நான் அழுவதில்லையாம்
யாரோ
சொன்னார்கள்..
ரத்தம் வடிவதை யாரும் பார்க்ககமலே..
நாங்கள் கேட்டது என்ன...?
விடை தெரிந்தவர்கள் யாருமே பதில் சொல்லவில்லை,
பேசத் தெரிந்தும் ஊமையாய் ஓர் கூட்டம்
கடலுக்கு அந்த பக்கமாய் இருக்கிறதாம்,
நாம் எங்கே போகிறோம் என்று கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில் இது..
நாங்கள் அழுது நிரம்பிய
கடலின் கரையில் கால்கள்
ஒடிந்து நின்றது..
நான்கு ஐந்து துடுப்பு படகு
..
கையில் ஆளுக்கொரு பை
கொஞ்சம் துணி,
மனது நிறைய ஏக்கம்,
நெஞ்சு நிறைய பாரம்,,
நக இடுக்கில் ஒட்டி
இருந்த
என் ஊர் மண்ணின் துகள்..
புறப்பட தயாராக நின்றது படகு..
இனி இருக்க இடமில்லை
நான் இருக்கிறேன்
நீ ஏறி கொண்டு போடா
...
கையில் தடியோடு
நின்றது
உயிர் வெறுத்த பழம் ஒன்று..
கூடவே வந்த அந்த சிறுவன் வீட்டு நாயும் குலைத்துக் கொண்டே இருந்தது
நாங்கள் கண்மறையும் வரை..
கண்ணீரில் மிதந்த படகு கரை தொட்டது..
எல்லாம் தொலைத்தும் இறங்கினோம்
ஏதோ வெறுமை,
கையாளாகத தனம்,
சொந்த வீட்டை அனாதையாக விட்டு
எதோ நம்பிக்கையில் வந்தோம்...
இங்கே எல்லாம் கிடைத்தது
..
ஆனால்
என் பனைமரத்தை காணவில்லை,
அந்த முருகன் கோவில் மணியோசை கேட்கவில்லை..
பார்க்கும் கண்கள்
எல்லாம்
எங்களை பரிதாபமாய் பார்த்தது
எனக்கு அது சுட்டது..
துரு பிடித்த இரும்பு கம்பியால் துடிக்கும் இதயத்தை இருக்ககட்டியது போல
அமைதியாய் ஒரு போர்களம் மனதுக்குள் நடந்து கொண்டே இருந்தது..
என் ஒற்றை பனையும்
உள்ளே எரிந்துகொண்டே இருந்தது...
எனக்கு எங்கள் ஊரில் பெயர்
காக்கை..
இங்கோ தீயில் வாட்டி எடுத்த சொல்லால் உருவான
நான் விரும்பாத அகதீ..
என் பனை மீண்டும் முளைக்குமா..?
கிழக்கு சூரியன் மீண்டும் உதிக்குமா...?
..🌺மஞ்சள் நிலா 🌙