மகாகவியுடன் ஒரு மாலை நேரம்- பாகம் 4- சந்தோஷ்

வணக்கம் தோழர்களே....!


தோழர் அகன் அவர்களின் முயற்சியில்...அறிஞர்களின் மத்தியில் தமிழ் மொழியின் பெருமைக்குரிய இலக்கிய மாமேதைகளால் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது மிக சிறப்பான ஆனந்த அலைகளை விழாவில் பங்கேற்ற நம் தோழர்களிடையே ஏற்படுத்தியிருக்கும். தோழர் கவிஜிக்கும்... தோழர் தாகுவிற்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து.. “ மழையும் மழலையும் “ நூலை ஆர்வத்தோடு வாங்கிப்பார்த்தேன்.


நூல்கள் வெளியிடுவதற்கு முன்னர்
கவிஞர் சொற்கோ வாழ்த்து பா பாடியப்போது அரங்கம்..... புன்னகையிலும் ... கைத்தட்டல் ஒலியிலும் வசீகரமாய் நிரம்பியது. அந்த அளவிற்கு கவிஞரின் கவிதை மிக அருமையாகவும்....ஈரோடு திரு.தமிழன்பன் ஐயாவை போற்றக்கூடியதாகவும் இருந்தது.

வாழ்நாள் சாதனையாளர் விருது- 2015 .. மகாகவியை சிறப்பிக்கும் வகையில்”தமிழன்பன் விருது” எனும் பெயரில் அறிஞர் பெருந்தகைகளுக்கு பேராசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது. விருதுப் பெற்றவர்கள்

முனைவர். திரு. ஜெயதேவன்.
முனைவர் திரு. இராம.குருநாதன்
முனைவர் திரு. ய. மணிகண்டன்
முனைவர் திரு. இளவரசன் அமிழ்தன்.
மருத்துவர், இருதய சிகிச்சை நிபுணர் திரு. சொக்கலிங்கம்.
ஆசான் திரு. பெ.சேகர்.

நூல் வெளியீடு செய்யப்பட்ட பிறகு,
மேடையிலிருந்த இலக்கிய அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதில் கனல் கவிஞர்..இன்குலாப் அவர்களின் கனல் பேச்சு...... அவரின் இந்த முதிய வயதிலும் அடிக்குது அனல் வீச்சு...!

இன்குலாப் அவர்கள் மகாகவியை தமிழன்பன் அவர்களின் கவிதைகளை படித்துதான் கவிதை எழுதி கற்றுக்கொள்வாராம். மேலும் , தமிழன்பன் அவர்கள் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும்.. தனது கவிதைகளில் அரசியலை.. அரசியல்வாதிகளை சாடும் நேர்மை பொறுப்புணர்வை சிலாகித்து பேசினார். . தமிழன்பனின் கோபத்தில் நியாயமிருக்கும் “ எனவும் “ தமிழன்பனைப் போல எனக்கு நாசூக்காக...எதையும் கவிதையில் சொல்லத் தெரியாது. நேரடியாக தாக்கிவிடுவேன். “ என்றார்.

ஆம் மேடையில் பேசும் போதே... மகாகவி தமிழன்பன் எழுதிய ஒரு கவிதையை எடுத்துக்கூறி.... அரசியல்வாதிகளையும்.. வாரிசு அரசியலையும் விமர்சனம் செய்வதாக....தனது பேச்சினூடே சாட்டையை சுழற்றினார்.. மேடையில் கட்சி சார்புடையவர்கள் இருக்கிறார்கள். வாரிசு அரசியலுள்ள கட்சி என விமர்சிக்கப்படும் தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் இருக்கிறார் என எந்தவித தயக்கம் இன்றி பேசிய அவரின் அந்த ஆளுமை... அந்த உரையிலுள்ள வீரம் என்னை பெரிதும் ரசிக்கவைத்து.... ஒருவித ரசனை தாக்கத்தை உண்டாக்கியது. கவிஞர் இன்குலாப்பை இனியாவது தேடி படிக்கவேண்டுமெனும் ஆவல் அந்த நிமிடத்திலிருந்து எனக்கு உண்டானது

தோழர் மகேந்திரன் பேசும் போது மகாகவியின் படைப்புகளில் பொதுவுடைமைச் சிந்தனைகள் இருப்பதை குறித்து எடுத்துக்கூறியதோடு.. தனது இளமைக் காலத்தில் கவிஞர் இன்குலாப் எழுதிய பாடல் கேட்டு மெய்சிலிர்த்ததை நினைவுக்கூறினார்.

தமிழர் தலைவர். ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றும் போது.... “ தமிழன்பன் அவர்கள் அவர் சார்ந்த இலக்கியத் துறையில் ‘மகாகவி’ என அழைக்கபடும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் .எனவும் “எங்கள் புரட்சியின் பூபாளம்” என பெருமைப்படுத்தி மகாகவியை போற்றினார்.
.

“ ஊரோடு போவதற்கு எதுவும் தேவை இல்லை.. ஈரோடு போவதற்கு துணிவு , கொள்கை தேவை ” என ஆசிரியர் கூறியபோது அரங்கிலிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்று ரசித்தார்கள்.
ஆசிரியர் அவர்கள் மகாகவியின் கருத்தாழமிக்க.. சமுதாய இழிவு நிலையை எடுத்துரைக்கும் ஒரு கவிதையை எடுத்துக்கூறி. பேனாவை சாட்டையாக சுழற்றிக்கூடியவர் ஈரோடு தமிழன்பன் எனகூறி தனது உரையை நிறைவுச் செய்தார் ஆசிரியர். கி. வீரமணி.


இனமானப் பேராசிரியர் தி.மு. கழகப் பொதுச் செயலாளர் திரு. க. அன்பழகன் உரையாற்றினார். பொதுவாக நீண்ட நேரம் உரையாற்றக்கூடிய பேராசிரியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்....... மகாகவி தமிழன்பனையும் அவர் எழுதும் விதத்தை பெருமிதத்தோடு சுருக்கமாக எடுத்துரைத்து பேசினார். அரங்கில் கூடியிருந்த கவிஞர்கள் , இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வாழ்த்திவிட்டு .. தனது உரையை விரைவில் முடித்துக்கொண்டார்.

சிலம்பொலி திரு.செல்லப்பன் அவர்கள்..! திறனாய்வு இலக்கியத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவர். சிறந்த விமர்சகர். சிறந்த பேச்சாளர் என அறிந்து இருந்தாலும் அவரின் சிறந்த பேச்சை நேரிடையாக கேட்டது மாபெரும் உற்சாக உணர்வை கொடுத்தது. அவரின் உரையில் மகாகவி ஈரோடு தமிழன்பனை வெகுவாக பாராட்டிப் பேசினார். மேடைப் பேச்சு எவ்வாறு அமைய வேண்டும். மேடையிலுள்ள அறிஞர்களின் பெருமைகளை எவ்வாறு எடுத்துகாட்டுகளோடு எடுத்துரைக்க வேண்டும் என்பதை எல்லாம் சிலம்பொலி ஐயாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை.


இதனிடையே வாழ்நாள் சாதனையாளர் விருதுப்பெற்ற மருத்துவர். திரு. சொக்கலிங்கம் உரையாற்றினார். அவரின் உரையில் கைத்தட்டுவதால் ஏற்படும் உடல்நல பயன்கள் பற்றியும் . இளமையோடு இருக்க வேண்டுமெனில் உடற்பயிற்சி அவசியம் எனவும் வலியுறுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வகையில் அவருக்கே உரித்தான பாணியில் பேசியது பார்வையாளர்கள் மத்தியிலும் மேடையிலுள்ள அறிஞர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை கைத்தட்டலாக பெற்றது.

அடுத்தாக நீதிநாயகம் கே. சந்துரு.. உரையாற்றி மகாகவியை போற்றி பாராட்டினார். நூல் வெளியீடுகளுக்கு பாராட்டும் விருதாளர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.


அடுத்ததாக. நமது எழுத்துதள தோழர்களுக்கு... விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நமது தோழர் திரு.அகன் ஐயா ஒலிப்பெருக்கி மூலம் விருதாளர்களின் பெயர்களை சொல்லி அழைத்த விதம் நிச்சயம் தோழர்களுக்கு பெருமைக்குரியதாக இருந்திருக்கும்.

விழாவில் பங்கேற்று விருதுப்பெற்ற விருதாளர்கள் :

திருவாளர் ஷைலா ஹெலின்
தோழர். திரு. ஜின்னா.
தோழர் திரு. ஜி.ராஜன்
தோழர் திரு. டி.என்.முரளி
தோழர் திரு. பழனிகுமார்.
தோழர் திரு. பரிதி முத்துராசன் (சிந்தனைவாதி)
தோழர் புலவர் திரு. கருமலைத்தமிழாழன்.
தோழர் திரு.நரியனூர். ரங்கநாதன்.
தோழர் திரு. சுசீந்திரன்
தோழர் திரு. கருணாநிதி.
தோழர் திரு. ஆண்டன்பெனி(புதிய கோடாங்கி)
தோழர் திரு. விவேக் பாரதி
தோழர் திரு. ஆசை அஜித்
தோழர் திரு. விவேக் பாரதி
தோழர் திரு. வேளாங்கண்ணி
தோழர் திருமதி. புனிதா வேளாங்கண்ணி
தோழர் திருமதி. கெளதமி தமிழரசன்.
தோழர். திரு.ஹரிகுரு (தாகு ,கனா காண்பவன்)
தோழர். திரு.தேவராஜ்(கிருஷ்ண தேவ் )
தோழர் திரு.கோபாலகிருஷ்ணன் திருமூர்த்தி (சேயோன்)
தோழர். திரு.மனோ ரெட்.
தோழர். திரு.சுஜய் ரகு.
தோழர். திரு.கோபி சேகுவேரா
தோழர் திரு.ராஜ்குமார்
தோழர் திரு. ஐயப்பன்.
தங்கை கிருத்திகா தாஸ் சார்பாக ஒரு தோழர்.
அமெரிக்காவில் வசிக்கும் தோழர் திரு. மீ.மணிகண்டன் சார்பாக அவரின் தாயார்.

இவர்களுடன் இந்த பதிவை எழுதும் இரா.சந்தோஷ் குமார் எனும் நானும். .

**அழகாக மும்மடிப்பாக மடிக்கப்பட்ட கதர் துண்டு விருதுப்பெறுவோரின் கழுத்தில் அணிவித்து.. விருதுக்கான சான்றிதழும் விருதும் மகாகவி விருதாளர்களுக்கு வழங்கினார். விருதானது அழகான சதுர வடிவில் ஒரு கண்ணாடிக்கு பின்புலத்தில் அமைந்ததுபோன்ற தங்கத்தகடுப் போன்ற உலோக தகட்டில் மகாகவி ஐயாவின் உருவப்படத்துடன் விருதாளர் பெயர் மற்றும் விருதாளர்களின் உருவப்படத்துடன் பதிந்திருந்தது.


**விருதுப்பெற்ற யாருக்கும் கிடைத்திடாத கைத்தட்டல்கள் தம்பி விவேக் பாரதிக்கு கிடைத்தது. பள்ளி மாணவனாக..இந்த இளம் வயதில்.. மரபுக்கவிதையில் தனது எழுத்தாளுமையில் சிறந்து விளங்கும் விவேக் பாரதியை மகாகவி தமிழன்பன் ஐயா வெகுவாக பாராட்டினார் என அகன் ஐயா அவர்கள் ஒலிப்பெருக்கியில் பெருமிதத்தோடு சுட்டிக்காட்டியது. விவேக்கின் சகோதரனாக எனக்கும் மகிழ்ச்சிக் கொடுத்தது.


விருதளிப்புக்குப் பிறகு ... விழாவின் நாயகர்.. மகாகவி. ஈரோடு தமிழன்பன் ஐயா உரையாற்றினார்.
” கவிதை எழுதுவதில் ஒரு நோக்கம் இருந்திட வேண்டும் “ என்பதாக அவரின் பேச்சு அமைந்தது. மகாகவி உரையாற்றும் அழகை.. விஷயங்களை, ஒரு உன்னதமான காதலியை ஓர் அன்பான காதலன் ரசிப்பது போல.. கொஞ்சும் அழகுடைய மழலையை பேரன்புமிக்க ஓர் அன்னை ரசிப்பது போல . ஒரு தந்தையின் வசீகரப்பேச்சை இலக்கிய ரசனைமிக்க ஒரு மகள் ரசிப்பது போல.. தனை மறந்து.. சுற்றம் மறந்து... உலகை மறந்து.. மகாகவியே உலமென்று...... மகாகவி மீது வைத்த விழிப்பார்வையினை வழி மாற்றாமல்... உரையாற்றி முடியும் வரை....... பார்த்து கேட்டுகொண்டிருந்தார் மேடையின் ஒரு புறத்தில் நின்றுக்கொண்டிருந்த நமது தோழர் அகன் ஐயா. இதையெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருந்த நான் என் விழி வழியாக பதிவுசெய்துக்கொண்டிருந்தாலும் செவி வழியாக மகாகவியின் உரையை கேட்க தவறவிடவில்லை.

ஒரு முறை எனது ஒரு படைப்பில் அகன் ஐயா கூறியிருந்தார். ”என் ஞான தந்தை ஈரோடு தமிழன்பன் கவிதை படிக்காமல் என் பொழுது விடிவதில்லை ” என்று. இந்த இலக்கிய காதல் எவ்வாறானது.. எவ்வளவு ஆழமிக்கது. உணர்வுமிக்கது என்பதை இந்த விழாவில் நேரடியாக கண்ட ஒரே சாட்சி அடியேனே...! இந்த காதல்.. எந்த காதலை விடவும் ,,, மிக புனிதமானதுதான். பார்த்தேன்.....உணர்ந்தேன்............ மகிழ்ந்தேன்.

பொதுவாகவே ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் தான் கவிஞர் எனும் அடைமொழியை கூட தன்னோடு இணைத்துக்கொள்ள விரும்பமாட்டார் என தோழர்கள் சிலர் மூலம் அறிந்தேன். ” மகா கவி ” என நம்மால் ஈரோட்டு தமிழன்பரை நாம் அழைத்தாலும்..அதை அவர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது இந்த விழாவில் அவர் பேச்சு உணர்த்தியது. “ மகா தச்சன், மகா கொல்லன், மகா உழவன் என ஏதேனும் உண்டா,, அதே போலத்தான்.. மகா கவி “ என தமிழன்பன் அவர்கள் சொன்னாலும்.. ரசனை ரசத்தோடு ,,, மொழி சுகம் தந்து,,,,, இலக்கியங்கள் பல பரிமாறி.. கவிதையில் பல புதுமை புகுத்தி.... சமூகத்தின் விடிவெள்ளியாய்.... மேதையாய் தமிழ்தாயின் மடியில் அமர உரிமைப்பெற்ற , தகுதிப்படைத்த அன்பரை தமிழன்பரை........ மகாகவி என்ற அழைக்காமல் இருந்திட முடியுமா........?

(ஈரோடு தமிழன்பன் அவர்கள். ஏன் மகாகவி என அழைக்கப்படுகிறார். தெளிவுப்பெற
தோழர் திரு. அகன் தொகுத்தளித்த நூலான ”தமிழன்பன் ஒரு மகாகவி” வாசித்து பாருங்கள். )


நிறைவாக, அகன் ஐயா, நம் எழுத்து தள தோழர்கள் அனைவரையும் அழைத்து தமிழன்பன் ஐயாவுடனும்.. சிலம்பொலி செல்லப்பா ஐயாவுடனும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்ள செய்தார்.

அரங்கிலிருந்த தோழர்கள் அனைவரும் மகாகவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தப்போது... ஒருவன்.... மகாகவியிடம் சென்று ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டு. தீடிரென்று அவரின் மூவிரலுக்கு முத்தம் கொடுத்தும் விட்டானாம் . மகாகவிக்கோ ஆச்சரியம் கலந்த புன்னகை.. ஆம் ! ஒருமுறை மூவிரலுக்கு என் முத்தங்கள் என ஈரோடு தமிழன்பரை ரசித்து ஒரு கட்டுரை எழுதியவன், எழுதியதைப்போல வாய்ப்பு கிடைக்கும் போது முத்தம் கொடுத்து இருப்பான் என அறிய முடிகிறது. அவன் வேறுயாருமல்ல... இதை எழுதிக்கொண்டிருக்கும் சந்தோஷ் தான்.


பின்னர் விழா நிறைவுப்பெறும் தருணத்தில் விழா அழைப்பிதழில் எழுத்து தள தோழர்கள் சார்பாக பங்கேற்பாளர் எனும் வ்கையில் பெயர் அச்சிடப்பட்டு... சிறப்பு செய்யப்பட்ட தோழர் நிலாசூரியனை சந்தித்தேன். மிக மிக உன்னதமான அருமையான... நட்பான தோழர் அவர்.

நிலாசூரியனின் படைப்பு எப்போதும் தமிழ் உணர்வும்..சமூக விழிப்புணர்வும் மேலோங்கி நிற்கும். அடிக்கடி தொடர்புக்கொள்ள இயலாவிட்டாலும் நிலாசூரியன் எனக்கு நெருங்கிய தோழரே. விழாவிற்கு வரவேண்டும்.. என அவர் சிரத்தை எடுத்து வருகை தந்தமைக்கு மனமார பாராட்டுகிறேன். இதே போல ராம் வசந்த் அவர்களின் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. விருதும் அவருக்கு பரிந்துரைக்கபட்டிருந்தது. நூலிலும் அவரின் படைப்புகள் இருந்திருக்கிறது. என்றாலும் அன்புக்குரிய திரு,ராம் வசந்த் அவர்கள் விழாவில் பங்கேற்காமல் இருந்தது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. .. நட்புக்கொண்டிருக்கும் சகோதரன் எனும் உரிமையோடு எனது வருத்தத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். (வர இயலா சூழ்நிலை என்றாலும். கூட வாழ்த்துச் செய்தியேனும் தளத்தில் பதிவு செய்து இருக்கலாமே )

விருதுப் பட்டியலிலுள்ள சில தோழர்கள் விழாவிற்கு வருகை புரியாதது வருத்தம்தான். அயல்நாட்டில் வசிக்கும் விருதாளர்கள் விழாவில் பங்கேற்க முடியாது தான். அவர்கள் யார் மீதும் வருத்தம் கொள்வது சரியாக இருக்காது.. என்றாலும்.. உள்நாட்டில் , தமிழகத்தில்....வசிக்கும் சில விருதாளர்கள் நூலில் இடம்பெற்ற படைப்பாளிகள்... சில அசெளகரியங்கள், சூழ்நிலைகள் தவிர்த்து ..விழாவில் பங்கேற்க கூடாது என்பது போல பொருட்படுத்தாமல் யாரேனும் சிலர் இருந்திருந்தால்.. அவர்களின் தோழனாகவும் எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன்...


ஒரு நிகழ்வில் கலந்துக்கொள்வதும் கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்தான். ஆனால்.. தேடி வரும் கெளரவத்தை... உதாசீனப்படுத்தவது எத்தகை இழிவானது என்பதை கொஞ்சமேனும் புரிந்துக்கொள்ள வேண்டுகிறேன் தோழர்களே..!

இந்த கட்டுரை நான் ஏன் எழுதுகிறேன் என்றால்..
பயன் கருதா இலக்கிய சேவையாற்றும் தோழர் அகன் அவர்கள் விருது வழங்க மேற்கொண்ட சிரமங்கள். அர்பணிப்பு உணர்வை ஒருசிலர் ... புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. வந்தோம் பெற்றோம்.... சென்றோம் . என்பதாகவே இருந்தது அவர்களின் செயல்கள். அதற்காகவும்.....

.. சில நூறு படைப்பு எழுதி நானும் விருதுப்பெற்று விட்டேன் , இலக்கிய மேதாவிக் கொம்பு முளைத்துவிட்டது என ஆர்பாட்டம் செய்திடவும் இதை எழுதவில்லை. இந்த விழா எத்தகைய சிறப்பு மிக்கது. இந்த விழா எத்தகைய உற்சாகத்தை கொடுத்தது. இந்த விருதானது சாதிக்கத் துடிப்பவனை எந்த உச்சத்திற்கு கொண்டுச் செல்லும்.. விருது பெற்றவர்களில் சிலர் எத்தகை அருமையான திறமையான இலக்கிய மேதைகள்... அவர்களுடன்.... அறிமுக கவிஞனாக.. எழுத்தாளானாக நாம் விருது பெறும் போது கிடைத்த கம்பீரம் எத்தகையது.... என்பன என் உணர்தல்களை பதிவாக்கி..... ஒரு சிலருக்காகவது உத்வேகம் கொடுக்கும் எனும் நம்பிக்கையிலும்..... ஒரு சிலராவது..........இந்த விருது பற்றிய வீரியத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான்.


இந்த விருதும் விழாவும் கொடுத்த உற்சாகத்தை மிகச் சரியாக பயன்படுத்தினால்... கூடிய விரைவில் இலக்கியத்தில் விஸ்வரூப வெற்றிதான் யாவருக்கும்.....!

விழாவில் அகன் ஐயாவினால் வழங்கப்பட்ட புத்தகங்கள்.

தொலைந்து போன வானவில் ( 3 புத்தகங்கள் )
மழையும் மழலையும்.

மற்றும்


ஆதலினால் காதல் செய்வீர்- (பொள்ளாச்சி அபி அவர்களின் நாவல்)
எனக்கென்று ஒரு முகம் இல்லை (பெண் படைப்பாளிகளின் தொகுப்பு)
செங்காத்து வீசும் காடு.( பன்னாட்டுப் படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பு)
யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் (பன்னாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகள்)
அலகுகளால் செதுக்கிய கூடு (பன்னாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகள் )
இரண்டாம் திங்களின் இருபத்துநான்கு நாட்கள் ( கவிதை தொகுப்பு. நூல் ஆசிரியர் அகன் )

(இவையாவும் தோழர். அகன் அவர்களின் முயற்சியால் முந்தைய ஆண்டுகளில் வெளியாகிய புத்தகங்கள். பலரும் சென்றாண்டு நடைப்பெற்ற விழாவில் பெற்று இருந்தார்கள். பெற முடியாத ஒரு சிலருக்கு மட்டும் இப்போது....வழங்கப்பட்டது )தோழர் திரு.பழனிகுமார் ஐயாவும்.. அவர் எழுதிய நிலவோடு ஓர் உரையாடல் நூலை இனிப்புடன் சேர்த்து அளித்தார்.4 : 30 மணிக்கு ஆரம்பித்த விழா சுபமாய் இனிதே நிறைவுப்பெற்றது.

எழுத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தோழர்களுடன் நேரில் சந்தித்துப் பேசியது பெரிய உற்சாக மழைதான். நீண்ட நேரம் பேச வேண்டும் என விரும்பினாலும் மணி இரவு 9: 30 நெருங்கிவிட்டது. அனைவருடனும் நான் விடைப்பெற்று செல்வதற்கு முன்.. அனைவரும் என்னிடம் விடைப்பெற்று சென்றுவிட்டார்கள். விருதுப்பெற கவிக்கோ மன்றத்திற்கு தனியாக தான் வந்தேன். தனியாகவே திரும்பி செல்கிறேன்.. இல்லை இல்லை என்னுடன் இருக்கும் இத்தனை புத்தகங்களுடன்...

இந்தப் புத்தகங்களின் சுமையோடு......... கூடவே விருது எனக்களித்த பொறுப்புணர்வு சுமையும்... !

தங்கும் விடுதிக்குச் செல்ல அழைக்கப்பட்ட கால் டாக்ஸிகாரர் வெகுநேரமாகவரவில்லை.

தோழி ஒருவரிடம் அலைப்பேசியில் பேசியவாறு....பிரதான சாலை வரை நடந்துச்சென்றேன். நடந்தப்போது அண்ணாந்து பார்த்தேன்.

சென்னை மாநகர வானம் அந்த நேரத்தில் இருண்டுதான் கிடந்தது..ஆனால் எனக்கு மட்டும் ஒரு நம்பிக்கையில் விடிந்துக்கொண்டிருப்பதாக தெரிந்தது. ஆம்..! இப்போது என் கையில் இருப்பது “ தமிழன்பன் விருது “எல்லாம் சரி..

இவர் திறமையாளர். சாதிக்க கூடியவர்... வெல்லக் கூடியவர். ஊக்கம் கொடுத்திட வேண்டுமென.. கல்வித்துறையின் அதிகாரியாக. பல பணிகளுக்கு இடையே..இருந்தாலும் எழுத்து. தளத்தில் உலாவி........
தேடி தேடி ..அலசி ..அலசி.......... மெனக்கெடலோடு........... உழைத்து... திறனாய்ந்து... நமக்கெல்லாம் விருது அறிவித்தார் அகன் ஐயா........!

மாப்பிள்ளை போல.....................
சென்றோம்
பெற்றோம்.
வந்துவிட்டோம்.

விருது விருது என பெருமிதம் கொள்கிறோம்.

அவ்வளவுதானா தோழர்களே நமது நன்றியுணர்வு ? ??நன்றி தோழர்களே..!அன்புடன்

-இரா.சந்தோஷ் குமார்.

குறிப்பு : விழாவிற்காக மரபு மாமணி திரு .எசேக்கியல் காளிப்பன் அவர்களால் எழுதப்பட்ட வாழ்த்துப்பா படைப்பு எண் 267702 இல் பகிரப்பட்டிருக்கிறது. அனைவரும் வாசித்து மகிழவும்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (24-Oct-15, 4:20 pm)
பார்வை : 335

மேலே