தேவதைகள் தூங்குகிறார்கள் - பகுதி 2 - தேன்மொழியன்

தேவதைகள் தூங்குகிறார்கள் - பகுதி 2 - தேன்மொழியன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவளிடம் இரவு பேச வேண்டும் என்பதை விட ..இரவு முழுக்க என்ன பேசலாம் என்ற எண்ணத்தின் எல்லா பக்கத்திலும் அவள் அசைந்துக் கொண்டே வருகிறாள்...காலையில் அவள் கையில் திணித்த பஸ் டிக்கட்டைப் பார்த்தவாறே பகலின் பாதையெல்லாம் அனல் மறந்து குளிர்ந்தது என் பாதங்களுக்கு..நேசத்தின் நிறமெல்லாம் அவளின் போர்வைக்குள் புதைந்துக் கிடப்பதாய் உணர்கிறேன் ..திரும்ப திரும்ப அவள் திரும்பி படுக்கையில்... வேர் விடும் வெண்ணிலவில் ஒரு தீவை எனதாக்கி அதன் பரப்பு யாவிலும் அவள் முகம் பரப்பி ரசிக்கிறேன் ...அடைத்து வைத்த அறை சுவரை உடைத்து நிற்கிறாள் ...யாரிவள் ...? ஏன் இவள் ..? உதடு சரித்து அவள் சொல்லிய வார்த்தைக்குள் வாரி அணைத்த சுகங்களை என் யாக்கையோடு கோர்த்து வைக்கவோ ...ஒட்ட வைக்கவோ ..ஓரிடமின்றி ...ஓரப் பார்வைக்குள் ஒளிகிறேன் ...என்ன நினைத்து என்னிடம் போன் நம்பரைக் கொடுத்தாள் ..? ஒரு பள்ளத்தில் உருளும் உள்ளமென ...மூளையோடு மோதி மோதி பாதி முரண்பாட்டை முதுகில் சுமந்து சுழன்றேன் இரவு வரும் வரை ...

தொடு திரை எண்களை மெல்ல மெல்ல உரசி உரசி ..அவளது எண்ணை புதுமைத் தேடும் புலவன் போல வாசிக்கிறேன் ..8148476...பத்து எண் தான் அதுவும் பத்து எண்களில்..இனியவள் ..இனி இவள் ..என உள்வாங்கும் நுனி விரல் ..ஒரு பனித்துளியின் குரல் கேட்க ..பத்து எண்களையும் பதறாமல் அழுத்த ..அலைவரிசை அலைந்து திரிந்து அவளது கைபேசிக்குள் ராகமென முளைக்க ..எடுத்ததும் யாரென கேட்காமல் ..."விஜி .." என்றாள்..ஜப்பான் குரலில் ....பருவத்தின் உருவமெல்லாம் அவளின் புருவமாகி எனது செவி வருடி ..சில்லிடும் உடலை முள் குத்தி குருதிப் படிந்த ஒரு மஞ்சள் நிற மலரிதழ் மடிப்பில் மறைத்து வைக்கிறேன் ..அவள் உதடு உச்சரித்த எனது பெயரில் புரியாப் புதுமொழியின் படிம பாகத்தின் ஆழத்தில் உயிரின் விதையை உறைய வைத்து விதைக்கிறாள்...அவள் பேச பேச ...மவுனம் கற்ற மனது உருமாறி திசைமாறி திகைத்து ரசிக்க ..ஒவ்வொரு சொல்லிற்கும் புள்ளி வைத்து அவள் தொடர ..யாவும் ஒரு குழந்தை வரைந்த வண்ணக் கோலமென வானம் பார்த்து நெகிழ்கிறது ..

நீங்க கோவைல எந்த இடமென்றாள்...சற்று நேரம் சரிந்த என்னுடலை மெல்லப் பிடித்துக் கொண்டே ..மருத மலை பக்கத்துல ..சொல்லி முடித்து குரல் தாழ்த்திய என்னிடம் .." நா எந்த இடம்னு கேட்க மாட்டீங்களா "..என்றாள்..மழலை மொழியில் மீண்டும் மீண்டும் தீ தீண்டும் விரலின் குரலாய் ..நெஞ்சம் கிழித்தும் ..நிறைத்தும் ...உரையாடலை உறைய வைக்கிறாள் ...பத்து கிலோமீட்டர் வட்டத்தில்.. காந்திபுரத்தில் வளர்ந்த ஜப்பான் கூந்தலின் முன் நோக்கிய முகத்தை....நான் ஒரு முறைக் கூட கடந்ததில்லை என்பதை நினைக்க நினைக்க ஒரு உப்பு கடலின் உவர்ப்பே உடலெங்கும் ஊறி உலர்ந்தது ..

அவளின் ஜப்பான் குரலில் மர்மம் நிறைந்த காந்தப்புல ஈர்ப்பும் ..ஒரு மாயக் கண்ணாடியின் வார்ப்பும் மாறி மாறி சுகம் ஏற்றி சுழன்றது ..காயத்தைக் கரைய வைக்கும் கவிதை வரிகளை அவளின் உதடு வரியோடு தைத்து காதலின் காந்தார சிற்பமெனக் கதைக்கிறாள்...இரவை இமை முன் இழுத்து வைத்து நிலவை மட்டும் கவிழ்த்து வைத்து கவிதைச் செய்கிறாள் ..அலைப்பேசிக்குள் அலையென செவி தொடும் செவ்விதழ் உச்சரிப்பில் என்னுடல் தழுவும் மொழிகளை எப்படி எழுதினாலும் ஏடுகள் எரியும்...சாரல் தெளித்த உடலின் உணர்வை அவள் தனதாக்கி கொள்கிறாள் ..அதில் எனை எதிர்வினையாக்கி கொல்கிறாள் ..முதல் முறையே ..இரவில் இரண்டு மணி நேரம் பேசிய அவளை நான் எப்படி எடுத்துக் கொள்ள ..?..அதும் .."அப்பா வந்து விட்டார் " என்று சொல்லித் தான் அலைப்பேசியைத் துண்டித்தாள் ..பேசணும் போல இருக்கு என்றவள் பேசிக் கொண்டே உறைந்தாள் ..மனதை இழுக்கும் கொலுசைப் போல கொஞ்சிப் பேசிய அவளின் கோபம் எப்படி இருக்கும் ..? ..நள்ளிரவை கடந்தும் நான் மட்டும் புலம்பி திரிந்தேன் வழி தெரியும் வனத்திலும் வழி மறந்த வாசகனாய் ...

புலம்பி புலம்பி ..புது புலமை எரிந்து சாம்பலாகும் இடைவெளிக்குள் இதயத்தை கையில் எடுத்து தரையில் உருட்டி ஒவ்வொரு துடிப்பையும் அவள் பெயராக்கி கொண்டிருந்தேன் ..ம்ம்ம் ...அவள் பெயர் ஆழி அலைகளை ஏவி நிற்கும் நிறத்தில்.. நிலவைப் பிழிந்து தேன் நிறையும் எழுத்தில் உயிரின் கவியை தாவி செல்கிறது ..

" விஷாந்தினி "..அவள்...அவள் பெயரை சொல்லும் போது வியக்க வைக்கிறாள் ..நெருப்பென எறிந்த எனது வெறுப்புகளை இளம்மடிப்பு மலை பனித்துளிப் போலக் குளிர வைக்கிறாள் ..அனைத்தையும் அணைத்து முடித்தவள் ...எனை மட்டும் விடிய விடிய விழிக்க வைக்கிறாள் கனவின் காதல் கணுக்களில் ஒரு சிறுமியென அம்மானை ஆடியவாறு ...இரவின் குளிரை இழுத்து போர்த்திய எனக்கு ஒரு துளி தூக்கமும் வரமாய் கிடைக்கவில்லை ...மணித்துளிகள் மடிந்து மடிந்து மூன்று நாள் இப்படியே குளிர்ந்தது அவளின் சொல் வாசங்களில் ...நான்காம் நாள் நள்ளிரவில் ..."நாளை நேரில் சந்திக்கலாமா" என்ற அவளின் கேள்விக்குள் எனது கடந்த காலக் காயமெல்லாம் உடைந்துச் சிதறியது ...இடம் அவள் விரும்பும் இடமாக இருக்கட்டும் என்றேன் ..ஆனால் அவளோ " நீ இருக்கும் இடமே என் விருப்பம் " என்றாள் ..

அடுத்த நாள் ...காலை 7 ..

அழைத்தவள் ...அழகை அனுப்பிக் கொண்டே பேசினாள் ... அவள் அழைக்கும் போதெல்லாம் எனை அணைத்துக் கொண்டே பேசும் மாயைக் கற்றவள் ..எட்டு மணி நேர ரயில் பயணத்தில் அதும் விளக்கை அணைத்த ஒரு இரவில் எப்படி இவள் இவ்வளவு ஆழமாய் எனைப் புரிந்துக் கொண்டாள்..வார்த்தையில்லா பார்வைக்குள் யாவும் புரிதலாகி விடுகிறது அவளிடம் ...அடுத்த இரண்டு மணி நேரத்தில் காந்திபுரம் கணபதி சில்க்ஸ் அருகே அவள் காத்திருக்க போவதாய் அவள் சொன்னதும் ...நான் " எப்படியும் மருதமலையில் தானே சந்திக்க போகிறோம் ..அதனால் காந்திபுரத்திலிருந்து மருதமலை பஸ்ஸில் ஏறி வந்து விடு ..நா மருத மலையில் வெய்ட் பண்றேன் "...சொல்லி முடிக்கும் முன் செல்ல கோபத்தில் கன்னம் கிள்ளினாள் ..." நான் உன் கூட இங்கிருந்தே பஸ்ல வருணும் ..அதான் அப்படி சொன்னேன் "...எனும் அவளின் ஆசையை தகர்க்க மனமின்றி எட்டு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பி ...சரியாய் 8.40 மணிக்கு கணபதி சில்க்ஸ் அருகே ....


ஒன்பது மணிக்கு தான் அவள் வருவதாய் சொன்னாள் ..அதனால் சற்று பொறுமையாய் சென்றேன் ..செல்லும் வழியெங்கும் அவள் கரு நிழலாகி ..கரு நிழலை மஞ்சள் நிறமாக்கி என்னுடனே நடக்கிறாள் ..நெடுஞ்சாலை முழுக்க அவள் நெஞ்சத் துடிப்பின் ராகம் ..இப்போது 8.50 ..கணபதி சில்க்ஸ் முகப்பில் ..தீபாவளி சமயம் என்பதால் கூட்டம் அதிகம் ..வியாபார யுத்தியில் மக்கள் மனதை ஏமாற்றும் எல்லா விளம்பர வாசகமும் ஒரு குழந்தையை கூட விட்டு வைக்காமல் ஈர்த்தது ..அத்தனை கூட்டத்தின் நடுவில் அவளைத் தேடி சுழலும் எனது விழிகள் வியர்த்து நிற்க ..அவள் எனைப் பின்புறமாய் முறைத்துக் கொண்டே நின்றாள் ..மெல்ல எனது மணிக்கட்டைப் பிடித்து " விஜி " என்றவளை ஒரு தயக்கமில்லா மயக்கத்தில் மீண்டும் மீண்டும் ரசித்து நின்றேன் அசையாத ஒரு யானை பொம்மையென ...

நீல மஞ்சள் சுடிதாரில் நின்றவள் வலது நுனி விரலில் துப்பட்டாவை சரி செய்தவாறு புருவம் சுருக்கி ..இதழைச் சுழித்து .." எங்க விஜி எனக்கு பூ " என்றாள் கார் கூந்தலை பார் முழுக்கப் பரப்பி நிற்கும் ஒரு தேவதையாய் ..அவள் கேட்கும் விதத்தில் எத்தனை பதங்கள் ..சுகம் சுரக்கும் ஊற்றை ஊதி ஊதி தேகமெங்கும் தெளிக்கிறாள் ..காத்திருப்பதாய் சொன்ன நேரத்திற்கு முன் நான் வந்தும் ..எனக்கு முன் அவள் நின்றது மூளை மேடுகளை முடக்கி மூழ்க செய்கிறது ...அக்கறையின் அடுத்த கட்டமும் உச்ச கட்டமும் அவளாகிறாள் ...

மருதமலை பஸ்ஸில் இருவரும் அமர இடம் கிடைத்தப் பிறகே ஏறினோம் ...நாற்பது நிமிடப் பயணம் முழுக்க என் இடதுத் தோளில் தலைச் சாய்த்து ..அவளின் இடதுக் கையால் எனது தாடியைத் தடவிப் பார்த்து ...சிரித்தாள் ..நானும் சிரித்தேன் ...மொத்தத்தில் ஒருவரை ஒருவர் ரசித்தோம் ..மஞ்சள் நிற கைப்பேசியை உள்ளங்கைக்குள் வைத்து அதன் விளிம்பை உதட்டோடு உரசிக் கொண்டே என்னிடம் பேசும் இவளின் குரலை ..சிரிப்பை ..நேரில் ..அதும் அருகில் அமர்ந்து ரசிப்பது ..முதிர்ந்துப் பின் உதிர்ந்து போன காதலுக்கும் கற்பனை கவிகளைக் காதுக்குள் திரையிடும்....." பூ நல்லாருக்கா " என்றவளிடம் "உன் கூந்தல் அழகு" என நான் சொல்லும் நிஜத்தை ரசிப்பவள் ....திரியைத் திருடிய தீபமென பெரும் இரவை தன் கூந்தலுக்குள் ஒளித்து மயக்குகிறாள் ..கடிகாரம் கட்டாத அவளின் கைகள் ..வளையலின் வசியத்தை வர்ணங்களில் மிளிரச் செய்கிறது ..அவளின் சுடிதார் அவள் உடுத்தினால் மட்டுமே தேவதைக்கு உடையாகி விடுகிறது ..மேகத்தின் தாகத்தை அவளின் பாதமென பார்க்கையில் எனது காதல் மட்டும் போதாது அவளுக்கு ...பார்த்துக் கொண்டே வந்தவள் பத்து நிமிடம் உறங்கியும் விட்டாள்..தேவதை தோள் மீது உறங்கும் போது உறைந்துப் போன என்னுடலிலிருந்து உயிரை இறைவன் நினைத்தாலும் பிரிக்க முடியாது ..மருத மலையும் வந்து விட்டது ..

இறங்கியதும் ...எனது வலது கையின் கணுக்களுக்குள் அவளது கையை தைத்துக் கொண்டாள்..மரம் அடர்ந்த மருத மலைக்குள் நாங்கள் மட்டுமே நடக்கிறோம் ...பாதை மாறி ..பாதையை மாற்றி ..பின் பாதங்களை மாற்றிக் கொண்டோம் ..வனம் எங்களின் வானமென விரிந்தது ..மஞ்சள் பூக்களை தரை முழுதும் பரப்பிய ஒரு மரத்தின் மடியில் அமர்ந்தோம் ...அவளின் மெல்லிடைக்கும் எனது இடைக்கும் இடைவெளி மட்டும் இல்லாமல் போனது ..சட்டைக் காலரை கடித்துக் கொண்டே காதல் செய்கிறாள் ..அவளின் துப்பட்டா துளசி வாசமென தூக்கியது ..இருவரும் தொட்டுக் கொண்டே யாரும் விட்டு செல்லா காதலின் அத்தனை படிநிலைகளையும் ரசித்தோம் ...உடலை கவியாக்கி..பகலை இரவாக்கி கொண்டோம் ...

முதல் முத்தம் கேட்ட எனது உதட்டின் உச்சரிப்பை ஊமையாக்கும் வேகத்தின் ..தாடி வைத்த கன்னத்தை அவளின் உதட்டோடு ஒட்டி உரசி ..தீர தாகத்தின் தீர்வே இல்லா மோகத்தின் முதல் வரியை முழு ஆழத்தில் விதைத்த அவளின் வீச்சில் ..அவளுக்கே அத்தனை காதலும் அடிமையென சுழலும் ..முதல் முத்தம் முடித்த அவள் மூன்றாவது முத்தத்தில் மூழ்கி கொண்டிருந்தாள் ..காமமில்லா காதலில் கற்பனைக்கூட பிறப்பதில்லை என்பதை அழுத்தி பதித்தாள் கன்னத்தில் ...எனது ஒட்டு மொத்த சுகத்தின் முகத்தை அவளே ஆள்கிறாள் ...அடக்கவே முடியா நரம்பின் புரட்சிகளில் அடங்கி நீள்கிறது அவளின் நடனம் ...மின்னல் வெட்டும் சத்தங்களில் எல்லாம் ஒரு முத்தமிட்டு வருடுகிறாள் ..முத்தத்திற்கு பின்னான அவளின் புன்னகை ..இனி இதழ்களுக்கும் தூரமில்லையெனும் துள்ளலாய் துளிர் விடுகிறது ..அவளின் விழி எனது வெளியெங்கும் பரவி தேன்மொழி கவிதையென வழியெங்கும் வளர்கிறது ...

மாலை 4 மணிக்கு ....

கணபதி சில்க்ஸில் அவளுக்கென ஒரு புடவை .,அவளுக்கு பிடித்த புடவை ..எடுத்ததும் ..தீபாவளி இரவின் வானமாய் புன்னகை வீசுகிறாள் பேசும் உதடு வரிகளோடு ....பிரிந்துச் செல்ல மனமின்றி உறைந்து கிடைக்கும் பனிக்கட்டிக்குள் இருவரின் மனமும் ..சாலை இடைவெளியில் எங்களை பிரித்த மாலை ஒரு மயக்கத்தின் மறு உருவத்தை மடிக்குள்ளே மடித்து வைத்து ரசிக்கிறோம் ..

காதல் தாங்கி நிற்கும் கணமெல்லாம் ..நாணம் மோதிய மலரின் கானமென நீள்கிறது ..இன்னும் இன்னும் ...இறுக இறுக ..பருகி ரசிக்கும் பக்குவம் வரும் ...வரும் வரை நேசம் விரியும் ...விரியும் நேசத்தில் காதலின் புது தத்துவம் வேர்விடும் ..

மீண்டும் இரவு பேசணும் ...இரவை பகலாக்கி கொண்டு ...


- தேன்மொழியன்


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேவதைகள் தூங்குகிறார்கள் தொடர் கதையின் அடுத்தடுத்த பாகங்களை எழுத விரும்புவோர் கவிஜி அவர்களை விடுகை மூலம் தொடர்புக் கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார் ) (25-Oct-15, 4:29 pm)
பார்வை : 281

மேலே