காதலை சாகடிக்கும் காதலி வினோதன்

அவன் விழி வழி...

கருவிழியின் நாவால்
நீ நவிழ்ந்த காதலால்
கருவுற்றது என் கண்ணும் !

என் நாவில் காதல்
பிரசவிக்க வைத்தாய்
என்னை தாயாக்கி !

காதலைப் பெற்றதால்
பெற்றோர் ஆனோம்
மணமாகும் முன்பே !

வளர்ந்த காதலை
வார்க்கத் துடித்தோம்
அழகிய ஓவியமாய் !

வண்ணமாய்
வானமாய் - மகிழ் வனமாய்
மாறிற்று வாழ்வு !

ஒரே குருதிவகைதான்
சாதி வேறென
சாதி வேர்கள் சூழ்ந்தன !


அவள் விழி வழி...

அரசியல் வாதிகள்
கலாசார காவலர்களாக
உருமாறிக் கொண்டிருந்தனர் !

தளவாடம் கொணர்ந்து
தலை வாங்கி
தண்டவாளம் வீச
தயாராகியது அப்படை !


உயிர் விட வேண்டாம்
காதல் துறப்போம்,
நிதானமாய் சொன்னேன் !

கதறினான் ஏனென,
உடலளவில் தானே பிரிகிறோம்
மனது உனதே என்றேன் !

மற்றொன்றும் சொன்னேன் !
விடாப்படியாக உயிரற்று
போகவா பிறந்தோம் ?

வாழ்வோம் வெவ்வேறாய் !
ஒரு திருந்திய சமூகத்தை
உருவாக்க முற்படுவோம் !

நம் மகவுகளுக்காவது,
சாதி என்றோன்றின்
கால்தடம் தெரியாமல்
வளர்த்து எடுப்போம் !

உன்னை பிரிகிறேன் !
உன் உயிர் பிரியாமலிருக்க
மரணமொத்த வலியோடு !

ஒரு முட்டாள் சமூகத்தின்
கோரப் பிடியில் - நீ
கொலையாவதை
காணச் சகிக்காமல் !

மரண நொடிகளில் கூட
நீ மட்டுமே - விழிகளில்
நிறைந்திருப்பாய்
அதே காதலோடு !

இப்படிக்கு...
சாதி வெறிபிடித்த சமூகத்தில்
காதலன் சாகாதிருக்க
காதலை சாகடிக்கும் காதலி !

எழுதியவர் : வினோதன் (26-Oct-15, 3:39 pm)
பார்வை : 95

மேலே