ஒத்தையில ஒரு நடை

மொத்தமா வெளிச்சம்போச்சு,
சுத்தமா இருட்டு ஆச்சு,
சத்தமா கத்துது இங்க,
தவளையும் மத்த பிராணியும்,
தொட்டு நான் நடந்தமண்ணில்,
கெட்டியா பிடிக்கும் சேறு,
பக்கமா பகுந்துகொள்ள,
ஆளரவம் இங்கனயேது,
அத்தன காலந்தாண்டி,
பின்னுக்கு போனது மனசு,
இங்கதான் ஓடியாடுவேன்,
பக்கமா பலபுள்ளைக,
மெத்தனம் காட்டி ஆடுவோம்,
எருதுக சத்தம்போடும்,
எங்களோட ஆடுக ஆடும்,
கோழிக தெறிச்சு ஓடும்,
சேவலுக வெறச்சு நிக்கும்,
அத்தன மாடுகளுந்தான்,
குலுதாலிய சத்தமா கொறைக்கும்,
பக்கமா குட்டி குஞ்சுக,
கூட்டமா துள்ளி ஓடிடும்,
அத்தன அருமையவிட்டு,
பட்டணம் படிக்கப்போனேன்,
ஆயிரம் லச்சமாகியே,
நானெங்கோ ஓயரம் போனேன்,
இப்பயோ இருட்டுகட்டி,
பாதையே மறைஞ்சி போச்சு,
எத்தன கடுப்பு எனக்கு,
என்னடா இப்பிடி இங்க,
தட்டுனது பெருங்கல் ஒன்னு,
ரத்தமது சொட்டிப்போச்சு,
பக்கமா வீடு நெருங்க,
அங்கன எங்க பாட்டனார்,
குச்சிய ஊனிக்கிட்டு,
ஒத்தையா உட்கார்ந்திருக்கார்,
வியர்வையில் வழிஞ்ச எனக்கு,
சட்டுன்னு ஒத்த யோசனை,
மொத்தமா ஊருக்கில்ல,
கடந்துவந்த தடத்துக்காச்சும்,
விளக்குக போட்டிருக்கலாம்,
மத்தவகளாச்சும் என்ன,
இதச்சொல்லி கேட்டிருக்கலாம்,
முப்பது வருசம் ஆச்சே,
அவலமிது மாறலயேப்பா !
எத்தனபேரு மறந்தான் !
தான் பிறந்து வாழ்ந்த கிராமத்த !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (28-Oct-15, 9:19 pm)
பார்வை : 70

மேலே