சுற்று சுற்றி
சுற்று சுற்றி
நான் மத்திய தரத்துக்கும் கீழான பொருளாதார வசதி உள்ளவன். மாசம் சம்பளம் வாங்கியபின் மத்திய வர்க்கம் இருபது அல்லது இருபத்தி ஐந்து தேதி வரைக்கும் தாக்கு பிடிக்கும். ஆனால் என்னால் அவ்வளவு தூரம் சம்பளம் வாங்கிய பின் ஏற்படும் செலவுகளை சமாளிக்கும் திறனை இழுத்தடிக்க முடியாது பத்து அல்லது பதினைந்து தேதிக்குள் சுத்தமாக வடிந்து போய், சில்லறைகாசுகளாக பொறுக்கி செலவுகளை ஈடு கட்டும் நிலைமையில் இருப்பவன். நான் மட்டுமல்ல என்னுடன் ஒரே இடத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் நண்பர்கள் கூட்டம்.
இத்தனை கதைகளை ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கு இப்பொழுது அவசரமாய் ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதுவும் என் நண்பன் பழனியப்பனுக்கு அறுநூறு ரூபாய் தேவைப்படுகிறது என்று என்னிடம் கேட்ட பின்னால். அவன் பையன் படிக்கும் பள்ளியில் கட்ட வேண்டி, வேறொருவரிடம் அறுநூறு ரூப்பாய் கடன் வாங்கி கட்டிவிட்டான். இன்றைய தேதியை சொல்லி அன்று மாலைக்குள் அதை திருப்பி கொடுத்து விடுவதாக சொல்லி விட்டான். ஆனால் அன்று அவனிடம் பணம் சுத்தமாக கரைந்திருந்தது. அவனுக்கிருந்த நம்பிக்கையான ஒரே நண்பன் நான் மட்டுமே. என்னிடம் காலையில் வீட்டுக்கே வந்து வாய் திறந்து அறு நூறு ரூபாய் கேட்டு விட்டான்.
நான் சிறிது நானயஸ்தன் என்பதனையும் உங்களுக்கு சொல்லி கொள்கிறேன். அது போல கடன் கேட்ட நண்பனும் தான். நாங்கள் கடன் வாங்கினாலும் சொன்ன தினத்தில் கொடுத்து விடுவோம், அவ்வளவு நாணயஸ்தர்கள் என்றாலும் மீண்டும் கொடுத்தவரிடமே கடன் கேட்டு விண்ணப்பம் செய்து விடுவோம். மனமிருந்தால் அப்பொழுதே எங்களிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விடுவார், இல்லையென்றால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தருவதாக சொல்லுவார்.
சரி விசயத்துக்கு வருவோம், நண்பன் கேட்டது அறுநூறு, அதை வட்டமாக்கினால் என்ன? எனக்கு நானூறு கிடைத்தால் இந்த மாச செலவுக்கு தாக்கு பிடிக்கலாம். அதனால் எனக்கு நன்கு தெரிந்த நண்பன் அமீரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டேன்.
அச்சோ இப்பத்தான் கையில இருந்து வேறொருத்தருக்கு கொடுத்தேன். கொஞ்சம் முன்னாடி கேட்டிருக்கலாம். கையை விரித்து ஆறுதலாக கொஞ்சம் வார்த்தைகளையும் சொல்லி அனுப்பி விட்டான். ஏமாற்றத்துடன் எனது வீதியின் கடைசியில் குடியிருக்கும் ராஜேந்திரனிடம் சென்றேன்.
இரண்டு சட்டை பைகளையும் விரித்து காட்டியவன் ஒத்தை பைசா இல்லாம நானே என்ன பண்ணறதுன்னு முழிச்சுகிட்டிருக்கேன். சட்டென என்னை கழட்டி விட்டான்.
அடுத்து? அம்புஜக்கா, ஆராவமுதன், மாரியம்மா, இப்படி கூட இருந்த எல்லா நண்பர், நண்பிகளிடமும் கேட்டு இல்லை என்பதை பல வடிவங்க்களில், பல வார்த்தைகளின் சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.
பணத்தின் அருமை அதை கடன் வாங்க நேரும்பொழுதுதான் தெரியும் என்பது எவ்வளவு சத்தியமான உண்மை.
கடைசி கடைசியாக என்னிடம் அகப்பட்டவன் சுந்தரம், பாய் முடைந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பவன். ஏற்கனவே பலரிடமும் கடன் கேட்டு இல்லை என்று வித விதமான வடிவங்களில் கேட்டு சோர்ந்து போயிருந்த என் முகத்தை பார்த்து மனம் இளகிவிட்டானோ என்னவோ? இன்னைக்கு சாயங்காலம் ஒரு பார்ட்டி கொஞ்சம் பணம் கொடுக்கணும், கொடுத்துட்டா உனக்கு கொடுத்துடறேன். நம்பிக்கையாய் சொன்னான்.
அப்பாடி தருகிறேன் என்று சொன்னவன் இவன் ஒருவன் தான். போய் பழனியப்பனிடம் தைரியப்படுத்தினேன். ‘கவலைப்படாதே மாப்பிள்ளை’ இன்னைக்கு சாயங்காலம் ஒருத்தரு பணம் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காரு, அவருகிட்டே வாங்கி உனக்கு கொடுத்துடறேன்.
என் வார்த்தையின் மீது அவனுக்கு நம்பிக்கை, முகம் மலர தலையாட்டி விட்டு சென்றான்.
அன்று மாலை சுந்தரத்திடம் சென்ற போது சுரத்தில்லாமல் இருந்தான். சொன்ன பார்ட்டி என் கிட்ட இது வரைக்கும் பணம் கொண்டு வந்து தரலை. என்ன செய்யலாம்?
ஐயோ மனம் ‘பக்கென்றாகிப்போக’ நண்பா கைய விரிச்சிறாதே, கெஞ்சினேன். பத்து நிமிடம் யோசித்தவன், என் கிட்ட ஐநூறுதான் இப்ப இருக்கு இழுத்தான். போதும் அதை கொடு, இரண்டு மூணூ நாள்ல திருப்பி கொடுத்துடறேன். அவனிடமிருந்து ஐநூறை பிடுங்கி கொண்டு, வேக வேகமாய் சைக்கிளை மிதித்து பழனியப்பனிடம் கொண்டு போய் கொடுத்தேன். இவ்வளவுதாம்ப்பா கிடைச்சுது. சொன்ன சொல்லை காப்பாற்றிய திருப்தியில், நான் எதிர்பார்த்த நானூறு ரூபாய் கிடைக்காமல் போனாலும் மகிழ்வாய் சொன்னேன்.
என்னை நீண்ட நேரம் எதிர்பார்த்து காத்திருந்திருப்பான் போல சட்டென ஐநூறை என்னிடமிருந்து வாங்கி கொண்டவன், சைக்கிளை திருப்பு என்றான். விவரம் புரியாமல் சைக்கிளை திருப்பியவனிடம் என்னை அந்த “பாய் கடைகிட்ட” இறக்கி விடு, என்று பின்புறம் ஏறிக்கொண்டான்.
சைக்கிளை மிதித்து ‘பாய்’ கடையின் முன்னால் அவனை இறக்கி விட கடையின் முன்புறம் உட்கார்ந்திருந்த சுந்தரத்திடம் ஓடியவன் மன்னிச்சுக்குங்க, எனக்கு ஐநூறுதான் இப்ப கையில கிடைச்சிருக்கு, பாக்கி நூறு அப்புறமா தாறேன் என்று சொன்னான்.
சுந்தரம் பழனியப்பனிடம் இருந்து பணத்தை வாங்கியவன் சற்று தள்ளி முன்னால் திகைப்பாய், நின்றபடி இதை பார்த்து கொண்டிருந்த என்னை அழைத்து “இந்தாப்பா ‘ஐநூறு’ ஆயிரம் ரூபாயா கொடுத்திரு.
பழனியப்பன் என்னை பார்க்க, நான் சுந்தரத்தை பார்க்க, சுந்தரமோ ஐநூறை என் கையில் திணிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். .