குழையும் வண்ணம்
குழையும் வண்ணம்
---------------
-ரா. சோமசுந்தரம்
ஜன்னலற்ற ஜன்னலான கண்ணாடிச் சாளரங்களில் மோதிச் சலித்தது காற்று. கட்டடங்களுள் நுழைந்து, எதையாவது தள்ளி, முன்புபோல கோப்புகளைப் புரட்டி விளையாட முடிவதில்லை. ஆத்திரத்துடன் தரையிறங்கி, சாலையில் கிடந்த மணலை அள்ளித் தூற்றியது. முழங்கையால் தடுத்தும், முடியாமல் அவள் கண்களில் மண் பட்டு வலித்தது. காற்றின் கை இழுத்த கூந்தலை மீட்டு, முதுகில் தள்ளினாள்.
கணக்குகளை முடித்துக் கொண்ட ஒரு கடையின் ஷட்டர் வேகமாக அதிர்ந்து இறங்கியது. எதிர்வரிசைக் கடைகளின் வெளிச்சம் அவள் நின்ற பேருந்து நிழற்குடையின் அடிவரை நீண்டுப் படுத்திருந்தது.
நசுங்கிய அலுமினியக் கூடைக்குள் டிபன் கேரியர் முணுமுணுக்க நிழற்குடைக்குள் வந்து நின்ற ஒரு கிழவி, “”இப்பவே இப்பிடி குளுருதே” என்று சொல்லி அவளிடம் பேச்சு கொடுத்தாள். அவள் பதில் சொல்லவில்லை.
“”27டி போச்சா கண்ணு”
“”இல்ல”
“”எவ்ளோ நேரமா நிக்கற”
“”இப்பதான் வந்தேன்”
இனி எதையும் கேட்காதே என்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு பின்னகர்ந்தாள். கிழவி சாவகாசமாய் புகையிலையை வாயில் அதக்கிக்கொண்டு, நிழற்குடையின் தரையில் உட்கார்ந்து, கால்களை சாலையில் நீட்டினாள்.
கிழவியின் மீது அவளுக்கு இரக்கம் வந்தது. தன்னைப்போலவே உழைக்கும் பெண். விதவை. திருமணம் நடந்திருக்கலாம், பிள்ளையும் பெற்றிருப்பாள். பிறகு ஏன் இந்த ஓயாத உழைப்பு! அவளிடம் பேச விரும்பினாள். அதற்கான நேரம் கடந்துவிட்டது.
அவளுக்கு யாரிடமும் அதிகம் பேசுவது பிடிப்பதில்லை. தயக்கம். கொஞ்ச நேரம் பேசியதுமே ஏனோ சலித்துவிடுகிறது. அது அம்மாவாக இருந்தாலும் சரி. இந்த மருந்துக் கடை வேலைக்கு வந்த பிறகுதான் இப்படியாக எல்லார் மீதும் இனம் புரியாத வெறுப்பு. எப்போதும் தனித்து ஒதுங்கி நின்றது மனது.
இத்தனை தயக்கத்திலும்கூட, அவன் இந்த வழியாக செல்ல நேர்ந்தால், நிறுத்திப் பேச வேண்டும் என்று விரும்பினாள். பேச வேண்டிய வார்த்தைகளைக்கூட தொகுத்து வைத்திருந்தாள். அவன் இன்றும் அவளைக் கடந்துசெல்லக் கூடும்.
நேற்றும் இதேபோல, இதற்கு முந்தைய பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள். இந்தக் கிழவியைப் போல யாராவது- பேசாமல் நிற்க மட்டும் - துணைக்கு வரமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தாள். தனியாக நிற்க அச்சமாக இருந்தது.
இரவில் கடைசி பஸ்ஸூக்காக இங்கு நிற்கும்போது கடந்து செல்லும் சிலர் வாகனத்தை ஓரம் நிறுத்துவார்கள். உடன் நிற்கும் யாராவது ஒரு பெண் ஓடிப்போய் ஏறிக்கொள்வாள். அவள் தனியாக நிற்கும்போது சிலர் வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு திருப்பிப் பார்ப்பார்கள். இருட்டில் அடையாளம் தெரியவில்லை போல என்று மனதில்படும்.
நேற்று அவர்களில் ஒருவனாகக் கடந்துபோனவன் பைக்கை நிறுத்தாமல் அவளிடம் திரும்பி வந்தான். அவளை இருட்டில் உற்றுப் பார்த்தான். சீறிப்பாய்ந்த வாகன ஒளியில் இருவரும் தங்கள் முகங்களை அடையாளம் கண்டனர். அவன் அடிக்கடி மருந்துக் கடைக்கு வருகிறவன்தான்.
“”நீங்க லெட்சுமி மெடிக்கல்ஸ்தானே”
“”..ம்…”
“”லேட்டாச்சுன்னா இந்த ஸ்டாப்பிங்க்ல நிக்காதீங்க”
அடுத்த ஸ்டாப்புக்கு போங்க. இந்த நேரத்துல அந்த மாதிரியான பொண்ணுங்கதான் இங்க நிப்பாங்க”.
ஆத்திரமும் அழுகையும் அடக்க முடியாதவளாய், அவனுக்கு நன்றி சொல்லும் பாவனையில் அசட்டுத்தனமாக குட்மார்னிங் சொல்வதுபோல கையை அசைத்துவிட்டு படுவேகமாக நடந்தாள். அவன் பைக்கில் வேகமாக அவளைக் கடந்து போனான்.
வீட்டில் அம்மா, அண்ணா,அண்ணி எல்லாரும் சொன்னார்கள். “இந்த வேலையை விட்டுட்டு வேறு வேலை பார்’. காலையில் கிளம்பி பகலெல்லாம் மருந்துக்கடையில் வேலைபார்த்து, இரவில் வீடு வருகிறவளுக்கு வேலைதேட நேரம் இல்லை. மற்றவர்களுடன் பேசிப் பழகி, காரியம் சாதிக்கும் திறமையும் இல்லை. பேசக்கூடிய ஓரிரு பெண்களும், வேறு சில மருந்துக் கடையைத்தான் பரிந்துரைத்தார்கள். ஆனால் மருந்துக் கடையே வேண்டாம் என்று தீர்மானித்திருந்தாள். மருந்துக் கடை என்பதாலேயே அவளிடம் “ஆணுறை’ கேட்கும் ஆண் மகனை வெறும் வாடிக்கையாளன் என்று அவளால் ஏற்க முடியவில்லை. “விற்கிறோம், கேட்கிறான். என்ன தவறு?’ தோல் மருத்துவர் பிரியாவிடம் நிறைய ஆம்பிளைங்க வர்றாங்க. மருந்து எழுதித் தர்றதில்லையா!’ என்று கடைத் தோழியர் சொன்னாலும் மனம் ஏற்கவில்லை. “அது வேறு இது வேறு’
இந்த உலகம் முழுதும் காமம் நிரம்பி வழிவதாக அவளுக்குள் எண்ணம் வலுத்தது. தோழிகள் தங்கள் சென்போன்களில் ஆண் நண்பர்கள் அனுப்பும் செக்ஸ் ஜோக்ஸை அவளிடம் காட்டினால் திட்டுவாள். அந்த செல்போன்களில் அவர்களது ஆண் நண்பர்கள் பதிவு செய்து தரும் 2 நிமிட ஆபாச படங்களை தோழிகள் ரசிப்பதை தடுக்க முயன்று முடியாததால் அழுதாள். அதிலிருந்து அவளை அவர்கள் பல விஷயங்களில் ஒதுக்கிவிடத் தொடங்கினர்.
தோழிகளைவிட்டு விலக நினைக்கிறோமா அல்லது மருந்துக் கடை வேலையை விட்டுவிட விரும்புகிறோமா என்று தீர்மானிக்கவே அவளுக்கு மூன்று மாதங்கள் ஆயிற்று. கடைசியாக அவள் மருந்துக்கடை வேலையை விட்டுவிடுவதுதான் ஆழ் மன விருப்பம் என்று முடிவு செய்தாள். ஆனால் யாரை அணுகுவது? அவளுக்கு யாரும் பழக்கம் இல்லை.
ஏதாவது ஒரு அலுவலகத்தில் மாலை 5 மணியோடு முடிகிறமாதிரி ஒரு வேலையைத் தேடிக்கொள்ள விரும்பினாள். அது எடுபிடி வேலையாக இருந்தாலும் சரி. பிளஸ் டூ தேறிய பெண்ணுக்கு வேறு என்ன வேலை கிடைத்துவிடும்!. சுயதொழில் தொடங்கலாம். அதற்கு ஒரு தொழிலைத் தேர்வு செய்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சிக்கும் பணம் வேண்டும்.
அவளுக்கு பணம் கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை.. அவளுக்கான தொழில் எது என்பதும் பிடிபடவில்லை.
அழுகையுடன் ஒரு சிறுமி நிழற்குடை மேடையில் ஏறினாள். அவளைத் தொடர்ந்து, பச்சிளம்குழந்தையை டர்க்கி டவலில் சுற்றி மார்போடு அணைத்தபடி ஒரு பெண்ணும், கனமான ஒரு பெரிய சூட்கேசுடன் ஒரு பெரியவரும் நிழற்குடைக்குள் வந்து நின்றனர். குழந்தையை டர்க்கி டவலால் மேலும் இறுக்கமாகச் சுற்றினாள் அந்த பெண்.
“”பொழுதோட வூடு போவக்கூடாது? பச்சைக் கொழந்தைய இந்த குளுர்ல தூக்கிட்டு போறியேம்மா” கிழவி சொன்னாள். இதற்கு அவர்கள் பதில் தரவில்லை. “”பாவம், இந்தப் புள்ளயும் குளிர்ல நடுங்கிட்டு நிக்குது, ரொம்ப நேரமா”. அந்தக் கிழவியின் இரக்கம் அவளிடம் குற்றவுணர்ச்சியைத் தூண்டியது. அவளிடம் பதில் பேச விரும்பினாள், ஆனால் பேசவில்லை.
அவன் வழக்கம்போல இன்று கடைக்கு மருந்து வாங்க வந்திருந்தான். சர்க்கரை நோயாளிக்கான மாத்திரைகளைச் சொன்னான். நிச்சயமாக அவை அவனுக்கு இல்லை. உள்-அறையிலிருந்து கவனித்தாள். அவளை அவன் தேடுவதைப் பார்த்தாள். தோழியிடமிருந்து மாத்திரைகளை தானே வாங்கி வந்து நீட்டினாள். சிரித்தான். “பிரச்னையில்லாம வீடு போனீங்களா..’ என்றான், மெதுவாக. அந்த வார்த்தையில் கபடமில்லாத அக்கறை இருந்தது.
தலையாட்டினாள்.
“எங்க வேலை செய்றீங்க?”
“விஜயா பாங்க்-ல அட்டன்டர்”
“”அந்த நேரத்துல போனீங்க..”
“மார்ச் மாசம் கடைசியிலே இப்படித்தான் ஒரு பத்து நாளைக்கு லேட்டாகும்”
“”நேத்து சொன்னதுக்கு தேங்க்ஸ்” மெல்லிய முறுவலுடன் இறங்கியவன், திரும்பிக்கூட பார்க்காமல், பைக்கின் முன்உறையில் மாத்திரைகளை வைத்து, சாலையைப் பார்த்தபடி ஸ்டார்ட் செய்து விரைந்தான்.
“இன்றும் கூட வங்கியில் வேலை இருக்கலாம். அவனும் தாமதமாகப் புறப்படலாம். அவள் இங்கு நிற்பதைக் கண்டால், நின்று பேசுவானா? இல்லையென்றாலும் அழைத்துப் பேச வேண்டும். அல்லது ஒரு மதிய வேளையில் வங்கிக்கே சென்று பேசினால் என்ன..? அந்த மாதிரியான பெண்கள் நிற்கும் இடம் தெரிந்தவனுக்கு அது மாதிரியான தொடர்புகள் இருக்குமோ! அவனை நம்பிப் பேசலாமா?’
ஆண்கள் மீது அவளுக்கு பொதுவாகவே மரியாதை இழந்திருந்தாள். முகம் மட்டுமே அறிந்த ஒரு பெண் மீது அவன் கொண்ட இரக்கம்தான் அவளை அவன்மீது மரியாதை கொள்ள வைத்தது. “அவன் பலருடன் பழகும் வாய்ப்புள்ளவன். ஒரு குறைந்த சம்பளத்துக்கு மனதுக்குப் பிடித்த ஒரு சிறிய வேலையைத் தேடிக்கொள்ள அவன் உதவுவான் என்று நம்பினாள்.
பிளஸ் டூ படிக்கின்ற காலத்தில் அவள் மனவெளியில் காதல் நிரம்பிக் கிடந்தது. அவள் விஜய் ரசிகை. சிம்ரனும் விஜய்யும் திரையில் டூயட் பாடுகிறபோது அவள் மனவெளிக்குள் விஜய்யை அழைத்துச் சென்றுவிடுவாள். ஆனால் மருந்துக் கடை வேலைக்கு சேர்ந்த பிறகு, வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தது. அவள் வாழ விரும்பிய வாழ்க்கை, கனவின் விளிம்பிலேயே இருந்தது. அந்த வாழ்க்கை யாரோ சிலருக்கு மட்டும்தான் என்ற எண்ணம் மனதில் சுமையாக இறங்கியது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. சுற்றியுள்ள அனைத்தின் மீதும் வெறுப்பு உண்டானது. எல்லாரையும் விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கத் தொடங்கினாள். காதில் செல்போனில் பேசிக்கொண்டே வந்து, சீட்டு கொடுத்து, சில்லறை கொடுத்து, மருந்து வாங்கி இறங்கிச் செல்லும்போதும் கழுத்தொடியப் பேசும் பெண்களைப் பார்த்து வியப்பாள். “செல்போன் பில்லுக்கு பணம் எப்படிக் கிடைக்கும்? மறுமுனையில் நிச்சயம் ஒரு ஆணாகத்தான் இருக்கும்’.
“நான் பேசினால், அவனைக் காதலிக்க முயலுவதாக அவன் நினைப்பானோ?..’
புதிதாக இந்த எண்ணம் எழுந்ததும் அவளுக்கு மனஇறுக்கம் வலுத்தது. கைக்குட்டையை மேலும் மேலும் மடித்து உருட்டிக் கசக்கினாள். அவன் இந்த வழியாகச் சென்றாலும் பேசக்கூடாது என்று பின்னகர்ந்தாள். வேறு வேலை தேடுவதற்கான ஒரு வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்றும் பதற்றமாக இருந்தது.
“அவனுக்கு திருமணமாகியிருக்கலாம். அல்லது அந்த வங்கியிலேயே இன்னொரு பெண்ணை காதலிக்கலாம்’. இந்த எண்ணம் பதற்றத்தைக் குறைத்தது.
“அவன் நடவடிக்கை நல்லவிதமாக இருக்கிறது. எல்லாருடனும் நன்றாகப் பழகுகிறான். இந்த உதவி கேட்பதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்க மாட்டான்’
ஒரு நர்சரி பள்ளியில் அல்லது குழந்தை காப்பகத்தில் வேலை செய்யும் ஆசை இருந்தது. குழந்தைகள் அன்பைத் தவிர எதையும் எதிர்பார்ப்பதில்லை. வார்த்தைகளை தேர்வு செய்து பேச வேண்டியதில்லை. பேசவே வேண்டியதில்லை. சிரித்தாலே போதும். அவள் தயக்கமின்றி குழந்தைகளுடன் பழகும் காட்சிகளை விரித்த மனது, அவளை மெல்ல பகல்கனவிற்கு நகர்த்தியது.
“”27டி வருமா?”
குழந்தையை வைத்துக்கொண்டிருந்த பெண்தான் அவளிடம் கேட்டாள் அவள் பதில் சொல்வதற்கு முன்பாகவே, கிழவி பேசினாள். “”கடைசி பஸ் போவலம்மா, வரும்”. தன்னை புறக்கணித்தவர்களிடம் கூட வலிய பேசும் அந்தக் கிழவியின் எளிய மனம் பிடித்திருந்தது. பதில் பேசாமல் இருக்கும் இவர்களை அவமானப்படுத்தும் வகையில், கிழவிக்கு பதில் சொல்ல நினைத்தாள். வழக்கம்போல தயக்கம் தடுத்தது. பதில் சொல்லும் வார்த்தைகளை சேகரித்தபோது, காலம் கடந்துவிட்டிருந்தது.
எதிர்வரிசையில் இருந்த பெரிய கடையின் விளக்குகள் அணைந்தன. நிழற்குடை இருண்டது. கடையின் மேலாக டிரான்ஸ்பரன்ஸி போர்டில் ஒரு ஆணும் பெண்ணும் இறுக்கமாக கட்டிப் பிடித்து சிரித்துக்கொண்டிருந்தனர். கிளர்ச்சியை வலிந்து தூண்டும் அந்தத் தோற்றம் அவளுக்குப் பிடிக்கவில்லை. பார்வையை சாலையின் பக்கம் திருப்பினாள்.
27 டி வந்தது
பெரியவரும் அந்த பெண்ணும் முன்வாசலில் ஏறினார்கள். கிழவி தன் அலுமினியக் கூடையுடன் பின்வாசலுக்கு ஓடினாள். இவளும் கிழவியைப் பின் தொடர்ந்தாள்.
வாணிஸ்ரீ சிவகுமார் -