எதிரும் புதிருமாகவே நகர்கிறது நம் காதல்

காலங்கள் செல்ல செல்ல
காதல்
கொடிமரத்தில்
கரையான்..

விரிசல் கண்ட
நம் மனங்களில் தான்
எத்தனை விசித்திர
வினவுகள்,
வசைவுகள்,
விளையாட்டாய்
விதியை நோகும்
வியாக்யானங்கள்......

உன்
இறந்தகாலத் தழும்புகள்
மறைக்க
பிறப்பெடுத்தேன்
என்கிறாய்
நீ

ஆறாத
காயங்களின் மேல் அமிலம்
எனக்காக
உன் இருப்பு
என்கிறேன்
நான்

அழிம்புகள் புரியாமல்
இருக்கிறேன்
இருக்கிறேன்
என்கிறாய்
நீ

எதற்கு
உன்
மௌனங்களால்
கத்தி கீறுவதற்கா?
கேட்கிறேன் நான்

கடந்து விட்டவைகளை
காலால்
தட்டித் துரத்தி
வா
பணித்தாய்
நீ

தட்டி விட்டவைகளின்
எச்சங்கள் என்னிடம்
இன்னும்..
என்னையும் சேர்த்து
எரித்தா விட
கேட்கிறேன் நான்

என்னையே
எப்போதும்
நினைத்திருக்காதே
கட்டளை பறக்கிறது
உன்னிடமிருந்து

நினையாதிருக்கக்
கூடாதென்று
உன் சொற்களால்
இதயத்தில்
பச்சை குத்தி வைக்கிறாயே
என்ன செய்ய
இது நான்

எப்போதும்
கட்டளைகளாய் நீ
எதிர்க் கேள்விகளாய் நான்
எதிரும் புதிருமாகவே
நகர்கிறது
நம் காதல்

நம்மைப் பிரிப்பதாய் நினைத்துக்
கட்டிப் போடுகின்றன
நம் ஊடல்கள்..

எழுதியவர் : செல்வமணி (3-Nov-15, 7:45 pm)
பார்வை : 320

மேலே