கடவுள்கள் உலகம்

கடவுள்கள் உலகம்
கொஞ்சம் பழக்கப்பட்ட காஞ்சிபுரம் தான். விற்பனைக்காக இதன் வீதிகளில் சமீப காலங்களில் அலைந்திருக்கிறேன். இருப்பினும் ஒரு நாளும் அதன் பேருந்து நிலையத்தில் அன்றுபோல் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது இல்லை.

காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனினும், எரிச்சல் ஏற்படுத்திய ஒரு காத்திருப்பு அன்று எனக்கு வாய்த்திருந்தது. காலையிலிருந்தே ஒன்றும் சாப்பிடவில்லை, மணி இரண்டு என கை கடிகாரம் காட்டி எரிச்சலில் எண்ணெய் ஊற்றிற்று. நான் சந்திக்க சென்றவர்கள் என்னை சேர்வதற்கு இன்னும் எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும் என்ற நிலை.

என் பின்னே ஒருவர் வாந்தி எடுப்பதுபோல் இருமி துப்புகிறார். விளம்பரம் என்ற பெயரில் அடி தொண்டையில் ஆணும் பெண்ணுமாக பேருந்துநிலைய ஒலி பெருக்கியில் அலறிக்கொண்டிருக்கிறார்கள். எதிரில் ஒருவன் பெண்களே இல்லாத வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவன் போல் வெகுநேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். பற்றாக்குறைக்கு சிறுநீர் நெடி.....இத்தனை கொடுமைகளுக்கும் என்னை தயார் படுத்திக்கொள்ளும் மனவுறுதிக்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்தக் காட்சி என் கவனத்தை ஈர்த்தது.

ஒரு ஆண் குழந்தை, அதற்குமேல் அழுக்காக இடமில்லாத ஒரு மேல் சட்டையோடு நடைபாதையில் புரண்டுக்கொண்டிருந்தது. அதன் அருகில் பெற்றோர் யாரும் இல்லை. எந்த ஏழைக்கு பிறந்ததோ, ஒருவேளை உணவையாவது இக்குழந்தைக்கு வாக்களிக்கும்போருட்டு பேருந்து நிலையத்தில்அந்த ஏழை பிழைப்புக்கு வழி தேடி போயிருக்ககூடும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கையிலே, படுத்திருந்த அவன் நகர்ந்து சென்று தூணுக்கு அருகில் இருக்கும் ஒரு அட்டைப் பெட்டியை துழாவ ஆரம்பித்தான். உள்ளிருந்து ஒரு சின்ன டார்ச் விளக்கை எடுத்து பற்களால் கடித்து துப்பினான். சில சீத்தா காய்களை எடுத்து அவன் பலம் கொண்டு வீசினான். ஐயோ ஒரு கிலோ சீத்தா பழம் என்ன விலைபோகிறது, அதை இவன் இப்படி வீணாக்குகிறானே என்று என் மனம் அல்பத்தனமாக அடித்துக்கொண்டது.

தொடர்ந்து வீசப்பட்ட ஒன்பது சீத்தா காய்களை அடுத்து வித்யாசமான ஒன்றை என் முன்னே வீசினான். அது இறந்துபோன ஒரு சிட்டுகுருவி. அய்யோ என்ற எண்ணம் முகத்தில் வெளிப்படுவதற்குள் மற்றொரு குருவியும் வந்து விழுந்தது. அட்டைப்பெட்டிக்கு அருகில் ஒரு உண்டிக்கல் இருப்பதை அப்போதுதான் கவனித்தேன். இன்னது நிகழ்ந்திருக்கலாம் என யுகித்தபிறகு, இறந்துபோன குருவிகளுக்காக உள்ளுக்குள் கண்ணீர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தேன்.

தரையில் கிடந்த சீத்தா காய்களை போவோர் வருவோர் கால்கள் பதம் பார்த்தன. பெரியவர் ஒருவர் குனிந்து ஐந்து காய்களை பொறுக்கி தன் பைக்குள் திணித்துக்கொண்டு கூட்டத்தில் மறைந்தார். என் பார்வையோ சிட்டுக்குருவிகளின் மீது குத்திட்டு நின்று, யாரும் அதை மிதித்துவிடக்கூடாது என தவம்புரிந்தது.

கடந்துபோன சீமாட்டி ஒருத்தி என் தவத்தின் மீது ஏறி நடந்து போனாள். அவள் செருப்புக்கு கீழே ரத்தமும் குடலுமாக பிதுங்கிவிட்டது சிட்டுக்குருவி. அருவருப்பும்,வலியும்,பரிதாபமும் கலந்து வெளிப்பட்ட எனது முகபாவத்தை யாரும் பார்பதை விரும்பாமல் கைகளால் மூடிக் கொண்டேன்.
ஒவ்வொரு பிறப்புக்கும் காரணம் உண்டாமே, இந்த சிட்டுக் குருவிகளின் பிறப்புக்கு காரணம் அவை யாருக்கோ இரையாவதாக இருக்குமென சற்றுமுன்வரை நினைத்தேன், இப்படி மிதிபட்டு நசுங்குவதால் யாருக்கு என்ன பயன்? இறப்புக்கும் பிறப்புக்கும் காரணமோ பயனோ ஏதும் இல்லாமல் போன சிட்டுக் குருவிகளோடு சில மனிதர்களையும் நினைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டேன்.

சிலநிமிடங்களுக்கு பிறகு அந்த குழந்தை என் கால்களுக்கு அடியில் உருண்டு வந்து விளையாட தொடங்கியது. சட்டென கால்களை உயர்த்தி சம்மணமிட்டு உட்கார்ந்துக்கொண்டேன் . அவனுக்கு மாறு கண்கள்,சற்று மனநிலையும் பாதிக்க பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 'அட கடவுளே' என்ற என் பதபதைப்பு நிற்பதற்குள் இருகைககள் அந்த குழந்தையை வாரிக்கொண்டது. நிமிர்ந்து பார்த்தேன், அவன் பத்து வயது சிறுவன், சட்டை இல்லை, பின் பக்கம் முழுவதும் கிழிந்து காற்றோட்டமான ஒரு கால்சட்டை மட்டும் அவனை அணிந்திருந்தது. குழந்தையை ஆரத்தழுவி முத்தமிட்டான். கொஞ்சியபடி தூக்கிகொண்டு சில அடிகள் முன்னால் நடந்து அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் அவன் வயது ஒத்த மற்றொரு பையனை காலால் உதைத்து எழுப்பினான். நான் உண்மையில் அங்கே தூங்கும் அவனை அவ்வளவு நேரமும் கவனிக்கவே இல்லை.

எச்சில் ஒழுக, தூக்க கலக்கத்தோடு எழுந்து அருகில் இருந்த தூணில் சாய்ந்தான். இரைச்சலில் அவர்கள் பேசிக்கொண்டது எதுவும் எனக்கு கேட்கவில்லை. குழந்தை சிதறடித்திருக்கும் காய்களை ஒருவன் மற்றவனுக்கு சுட்டிக் காட்டினான். தூக்கத்தில் இருந்து விழித்தவன் அதை இழப்பாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. உடைந்து கிடக்கும் டார்ச் விளக்கை எடுத்து பார்த்தான், பிறகு அவன் கையிலிருந்த குழந்தையை வாங்கி முத்தமிட்டான். மூன்று பேருமாக விளையாட ஆரம்பித்தார்கள். நசுங்கிப்போன சிட்டுக் குருவியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி சிரித்தார்கள்.
அந்த நிமிடம் முகம் சுலிக்கும்படி இருந்தாலும் அதில் ஏதோ ஆழமான நிதர்சனம் இருப்பதை உணர்ந்தேன்.

என் அலைபேசி அடித்தது, அன்றைய காத்திருப்பு முடிவதற்கான அழைப்பு அது. எழுந்து நடக்க தொடங்கினேன், தூரத்தில் அந்த குழந்தைகளின் குதூகலம் இன்னும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒப்புக்கொள்கிறேன்; குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான். இருவரின் உலகிலும் எந்த லாப நஷ்ட கணக்கும் இல்லை.

எழுதியவர் : மேரி டயானா (4-Nov-15, 4:51 pm)
சேர்த்தது : மேரி டயானா
Tanglish : kadavulgal ulakam
பார்வை : 98

மேலே