ஆரோக்கியமான ஒய்வு அமைதியாய் ஒதுங்கு டீவி வேண்டாம்
நேற்று தொலைத்த தொலைந்து போன
முகவரிகள் மனவரிகள்
காலை எழுந்ததும் கண் விழித்ததும்
மனக்கண்ணின் வெளிச்சத்தில் தெரியும்
முட்கள் முகடுகள் வடுக்கள் ....
இன்று நான் செய்யப்போவது
என்ன ஏன் எப்படி என்று
கேள்விகள் கணைகளாய்
என் சுயத்தை சோதிக்கும்,
என்னிடம் என்னை தேடும்,
எனக்குள் எதையோ யாசிக்கும்...
என்னை சீண்டும் ஏச்சுக்கள் பேச்சுக்கள்
என்னை குலைக்கும் ஏளனங்கள்
எதிராளியின் இறுமாப்புகள்
எக்காளப்பார்வைகள் எனக்குள் குழப்பும்
அன்றாட அழற்சிகள் டீ வி சீரியல்கள்...
என்னை நானே காத்துக்கொள்ள
எத்தனை தான் எனக்குள் போராட்டங்கள்....
நான் என்றொரு அடையாளம்
அழகான ஓவியமாய்
எனக்கும் எல்லோருக்கும்
ஏற்புடையதாய் இருந்திட,
நானே சீர் செய்திட செதுக்கிட
செப்பனிட ஓய்வில் நான் தெளிந்திட....
முடியவில்லையே,
என் சுற்றம் சூழலும்
நான் விலக்க முடியாதவை,
தனித்திருக்க, தவமிருக்க,
ஞானம் பெற, ஒருநிலைப்படுத்த..
நான் என்றொரு பிம்பம்
கண்ணாடியில் தெரிகிறது,
கண்ணாடியை துடைத்தால்
அந்த பிம்பம் சரியாகுமா?
ஆகாது, என்பதை அறிந்தேன்...
நிஜத்தை சுற்றி கிடக்கும்
நிழலை நோக்கினேன்;
நிழல் சரியாயிடில்
நிஜம் நேராகுமோ?
என் சுயம் நலம் பெற
மனக்கண்மேல் படிந்த
கோளாறுகள் சரிப்படுத்த
கேள்விகள் எவை எவை?
சிந்தையை பாதிக்கும் காட்சிகளிலிருந்து
என் கவனத்தை திருப்பினேன்,
பார்வைகள் பாதிப்படையாதிருக்க
இமைகதவுகளை சாத்தினேன்;
எண்ணம் சொல் செயல் கவனம்
அனைத்திலும் உள் விசாரணைகள்,
குறுக்கு சமாதானங்கள், தேற்றல்கள்..
எங்கே விரிசல் ஏனந்த உடைசல்
என்று ஒவ்வொன்றாய் அலசிப்பார்த்ததில்
என் சுயம் சீரானது, விழி சுற்றி கவலை
வளையங்கள் காணாது போனது,
மனச்சுமை கழன்றது புத்துணர்வில் நின்றது..
நான் என்னை மீண்டும் சீரமைத்தேன்...