கோலங்கள் நம் வாழ்வினில்
மலர்கள் இடுகிறது மாக்கோலம் வாசலில்
முகங்கள் மலர்கிறது புலர்ந்த பொழுதினில் !
வைத்தப் புள்ளிகளை இணைத்த விரல்கள்
முடித்து மகிழ்கிறது முகிழ்ந்த கமலமாய் !
வைகறை வேளையில் வரைகின்ற கோலம்
வரவேற்கும் விடியலை எழுகின்ற ஞாயிறை !
பிறந்தகத்தில் பயின்ற நன்முறை பயிற்சியே
புகுந்தகத்தில் தொடரும் செய்முறை நன்றே !
நாகரீக மோகமும் நகரத்தின் வேகமும்
விஞ்ஞான உலகில் விந்தைமிகு உச்சம் !
இருந்தும் இப்பழக்கம் இன்றளவும் புழக்கம்
தலைமுறை வளர்ந்தும் வற்றிடாத வழக்கம் !
அலங்காரம் இல்லத்திற்கு அழகே என்றும்
சிங்காரம் சிந்தனைக்கு சிறப்பே நிச்சயம் !
வண்ணக் கோலங்கள் எண்ணத்தின் ஏற்றம்
வாழ்வின் கோலங்கள் வாழ்வியல் மாற்றம் !
கோலங்கள் மாறுவது கோளத்தில் நிகழ்வு
காலங்கள் மாறுவது இயற்கையின் நியதி !
எந்நிலை வந்தாலும் எதிர்கொள்க வாழ்வில்
தன்னிலை தவறாது வென்றிடுக தரணியில் !
கோலத்தில் இணைந்த புள்ளிகள் போலவே
கோளத்தில் இணைந்து வாழ்க இதயங்களே !
நலமோடு வாழ்ந்திடுக நானிலமே போற்றிட
உள்ளவரை உதவிடுக உள்ளம் நிறைந்திட !
பழனி குமார்
Palani Kumar N R
10.11.2015

