ஐஸ்க்ரீமுக்கும் இருக்குங்க ஹிஸ்டரி…
ஐஸ்க்ரீமுக்கும் இருக்குங்க ஹிஸ்டரி…
------------
கத்தரி வெயிலில் “ஐஸ்க்ரீம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே உடலும் மனமும் சில்லிடும். வீட்டைச் சுற்றும் தள்ளுவண்டி ஐஸ் ஆகட்டும், இரவு நேர குல்ஃபி ஆகட்டும் அல்லது அடுக்குமாடி கட்டடங்களில் குளிர்சாதன அறையில் குளிரூட்டப்படும் ஐஸ்க்ரீம் ஆகட்டும் அத்தனைக்குமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அது சரி இந்த ஐஸ் க்ரீம் எப்படித் தோன்றியது?
ஐஸ்க்ரீமுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. “ஃப்ரோஸன் கஸ்டர்டு’, “ஃப்ரோஸன் யோகட்’, “சோர்பெட்’, “ஜெலடோ’ என்று பலப்பெயர்கள் இதற்கு உண்டு.
கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே ஐஸ்க்ரீம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கி.பி 37-68-ல் வாழ்ந்த ரோமப் பேரரசன் நீரோ மலைகளில் இருந்து ஐஸ்கட்டிகளை வெட்டிக் கொண்டு வரச்செய்து அதன் மேல்புறத்தில் பழத்தால் அலங்காரம் செய்து சாப்பிட்டுள்ளான். கி.பி.5-ம் நூற்றாண்டில் க்ரீஸ் நாட்டு மக்கள் வெண்பனியில் தேன், பழங்கள் சேர்த்து சாப்பிடுவார்களாம்.
கி.பி. 618-197-ல் வாழ்ந்த சீன அரசன் டேங் ஐஸ்கட்டிகளையும் பாலையும் சேர்த்து ஐஸ்க்ரீமை உருவாக்கும் முறையை பின்பற்றினான். சில நூற்றாண்டுகள் கழித்து 1295-ல் மார்கோ போலோ சீனாவுக்கு விஜயம் செய்தார். அப்போது அங்குள்ள ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முறையை இத்தாலிக்குக் கொண்டு சென்றார். இதனால் ஐரோப்பா கண்டம் முழுவதும் ஐஸ்க்ரீம் புகழ் பரவியது. அதற்கு முன்பு வரை ஐஸ்க்ரீமின் சிறப்பு விளம்பரப்படுத்தப்படவில்லை.
இந்த ஐஸ்க்ரீம் ஐரோப்பியாவுக்கும் இடம் பெயர்ந்தது. அதன் பின்பு படிப்படியாக ஐஸ்க்ரீம் ரெசிபிகள் உருவாக ஆரம்பித்தன.
பாரசீக சாம்ராஜியத்தில் பனியின் மீது திராட்சை ரசத்தை ஊற்றி விருந்துகளில் பறிமாறுவார்கள். அதுவும் கோடைக்காலத்தில்தான் இதனை விரும்பி உண்பார்கள். பாரசீகர்கள் பனியை சேமிக்க தரைக்கடியில் உள்ள பிரத்யேக அறைகளை உருவாக்கினர். அல்லது மலையின் உச்சியில் மீந்திருக்கும் பனியை சேகரித்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.
1533-ம் ஆண்டு இத்தாலிய சீமாட்டி ஒருத்தி பிரஞ்சு சீமான் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாள். அப்போது சீரின் ஒரு பகுதியாக “ஜெலடியரி’ எனப்படும் ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்களை இத்தாலியிலிந்து பிரான்ஸூக்கு கொண்டு சென்றாள்.
100 ஆண்டுகளுக்குப் பின்பு நான்காம் ஹென்ரியின் மகள் இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்லûஸ மணந்து கொண்டபோது ஐஸ்க்ரீம், ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது. முதலாம் சார்லஸ் ஒரு ஐஸ்க்ரீம் கலைஞனின் ரெசிபியில் கவரப்பட்டு, அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று அந்தக் கலைஞனுக்கு ஆயுள் முழுவதுக்கும் பெருந்தொகையை ஊதியமாக வழங்கிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் அந்த ஐஸ்க்ரீமுக்கு தனித்துவமான புகழ் கிடைக்கும் என நினைத்தார்.
இந்தியாவில்…
இந்தியாவைப் பொருத்தவரை, 16-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர்கள் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானும் இடையில் 800 கி.மீ. நீளம் உள்ள ஹிந்து குஷ் என்ற மலைத்தொடரில் இருந்து குதிரை வீரர்கள் மூலமாக ஐஸ் கட்டிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். பழச்சாறு மூலம் தயாரிக்கப்பட்ட ஓர் இனிப்பை ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.
ஐஸ்க்ரீம் ரெசிபிகள்: ஐஸ்க்ரீமுக்கென்று தனியாக ரெசிபிக்கள் உருவாக ஆரம்பித்தது 18-ம் நூற்றாண்டில்தான். சமையல் முறைகள், குறிப்புகள் அடங்கிய ஆங்கிலத்தின் முதல் இதழான “மிசிஸ். மேரி ஏல்ஸ் ரெசிப்ட்ஸ்’-ல் 1718-ம் ஆண்டு முதல் ஐஸ்க்ரீம் ரெசிபி வெளியானது.
குளிர்சாதனப் பெட்டிக்கு முன்பு…
நவீன குளிரூட்டும் முறை கண்டுபிடிக்கும் முன்பு ஐஸ்க்ரீம் என்பது பெரும் செல்வந்தர்களுக்கே உரியதாக இருந்தது. பண்டிகைகளில், விருந்துகளில் மட்டுமே ஐஸ்க்ரீம் இடம்பிடிக்கும். அதனை உருவாக்குவதற்கும் கடினமாக உழைக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை உறைந்து போயிருக்கும் ஏரி, குளங்களிலிருந்து குளிர்காலத்தில் வெட்டி எடுத்து வருவார்கள். நிலத்தில் துளையிட்டு அதனை சேமித்து வைப்பார்கள். அதன் பின்பு நிலத்தில் மரத்தினாலான பெட்டிகளில் அல்லது செங்கலால் உருவாக்கப்பட்ட ஐஸ் வீடுகளில் வைக்கோல் பரப்பி அதன் மீது ஐஸ் கட்டிகளை வைப்பார்கள்.
மிகவும் புகழ் பெற்றத் தலைவர்கள், விவசாயிகள், தோட்ட முதலாளிகள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்ஸன் உள்ளிட்டோர் குளிர்காலத்தில் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து சேமித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட்டிரிக் டியடோர் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து, அதனை ஒழுங்கான வடிவங்களாக செதுக்கி, உலகம் முழுவதற்கும் கப்பலில் ஏற்றுமதி செய்து பெரும்பணம் படைத்தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்கப் ஃப்யூசெல் என்பவர்தான் முதன் முதலில் ஐஸ்க்ரீம் விற்பனையை பெரிய அளவில் செய்யத் தொடங்கினார்.
“பாட் ஃப்ரீஸர்’ முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு மற்றும் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதனுள் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் ஐஸ்க்ரீம் தயாரித்தனர். இதற்கு “பாட்-ஃப்ரீஸர்’ முறை என்று பெயர். இதில் பெரிய பாத்திரத்திற்குள் இருக்கும் உப்பும், ஐஸ்கட்டியும் சிறிய பாத்திரத்தினுள் வைத்துள்ள ஐஸ்க்ரீம் செய்யத் தேவையான பொருள்களின் வெப்பத்தை குறைத்து அதனை உறைய வைக்கும்.
சில காலத்திற்குப் பிறகு ஒரு பாத்திரத்தினுள் ஐஸ்கட்டிகள் மற்றும் உப்பைப் போட்டு, ஓர் உருளைக்குள் அடைக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை அதனுள் வைப்பார்கள். அதில் ஓர் கைப்பிடியும் இருக்கும். கைப்பிடியைச் சுற்றச் சுற்றச் உருளைக்குள் உள்ள ஐஸ்க்ரீம் கெட்டியாகிவிடும். இந்த இயந்திரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 1843-ம் ஆண்டு நேன்சி ஜான்சன் என்பவர் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். “பாட் ஃப்ரீஸர்’ முறைக்குப் பின்பு இந்தப் புதிய முறை வழக்கில் இருந்தது. நேன்சி, ஐஸ்க்ரீம் இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்ற பிறகு பலர் அந்த இயந்திரத்தை மேம்படுத்தி காப்புரிமை பெற்றனர்.
ஐஸ்க்ரீம்களை தொழிற்சாலையில் பதப்படுத்தும் முறையை 1870-ம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். இயற்கையான ஐஸ் கட்டிகளை வெட்டியெடுத்து சேமிக்கும் முறை இதன் மூலம் கைவிடப்பட்டது. 1926-ம் ஆண்டு நவீன ஐஸ்க்ரீம்கள் தொழிற்சாலைகள் தோன்றி, செயற்கை ஐஸ்கட்டிகள் உருவாக்கப்பட்டன.
+
வாணிஸ்ரீ சிவகுமார் -