ஞானம் தேடி ஒரு பயணம்- கட்டுரை-கவிஜி

ஒரு சாதாரண புள்ளியில் இருந்தே இந்தப் பயணம் தொடங்கியது.....11.30 வரை என்ன செய்வதென்று யோசித்து எப்போதும் போல....எழுதவே தொடங்கினேன்....எழுத்தை தாண்டி யோசிக்கும் எல்லாமும்.. எப்படியாவது எழுத்துக்குள் வந்து விடுவதுதான் எழுதுவதின் வரம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது........மழை வரும் நோக்கம் அதற்கு இருப்பினும்... வந்து விட்டால் நோக்கம் சிதறுமோ என்றுகூட என் மனம் தளும்பத் துவங்கியது..... எழுதியதெல்லாம் கவிதை, என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட நானும் விதிவிலக்கா என்றே யோசித்த தருணத்தில் எழுதியதில் முக்கால்வாசியை அழித்தே சிரித்தேன்..... ஆக்குவதை விட அழிப்பதில் கவிதையாகிறது....கவிதை மாதிரியும்......

சிந்தனை கலைத்த தம்பி ராஜ்...."அண்ணே.... கவுண்டம் பாளையம் வந்தாச்சு...." என்றான்....
நிமிட இடைவெளிகளில் கோபியும்.... குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்..." கவுண்டம் பாளையம்.... வந்து விட்டது"- என்று.....
வந்து விட்டதில் வந்தது எது என்று சொல்லும் வந்து விட்டது தான்.. வந்து விடுகிறதா... யோசித்துக் கொண்டே உடை மாற்ற "அபி சாரும் பூ மார்கெட் தாண்டி விட்டார்" என்று செய்தி கிடைக்க வேக வேகமாய் கிளம்பினேன்....

சித்தார்த்தனின் கலைதலோடு .... வழி எங்கும்... செவ்வக வரிகளின் புணருதலின் தீட்சண்யம்.... மனமெங்கும்.. இனம் புரியா மனம் புரியா வினை புரியத் துவங்கி இருந்தது..... "எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே.." என்று சம்பந்தமே இல்லாமல் அலை பாய்ந்த அறிவுக்குள் ஒரு முறை ஒலித்து வரி சுளித்து, வார்த்தை ஆக்கும் யோசனை எதுவோ.. என்றபடியே வேகம் கூட்டினேன்.....

கவுண்டம் பாளையம்............

ராஜ், கோபி இருவரும் மலர்ந்த அகத்தோடு... மலரும் முகத்தோடு வண்டிக்குள் ஏறிக் கொண்டார்கள்..... அடுத்து..... என்று யோசிக்க யோசிக்கவே .... அகன் அய்யாவிடம் இருந்து அலைபேசி... அலைந்து அலைந்து பேசியது... கூர் கொண்ட செவிக்குள் குத்து மதிப்பாக இடம் பொருள் புரிந்து விட.. "சரி... எவ்ளவோ பண்றோம்... இத பண்ண மாட்டமா..."- என்று நினைத்து கொண்டு....(சொல்லவில்லை.. சொன்னால் பயபுள்ளைக ஓட்டிடுங்க)

NGGO காலனி.... தெரிந்த இடம் தான்... தெரிந்த இடங்கள் சில போது தெரியாமலும் செய்யும் மாயத்தில் இடம் மாறிக் கிடப்பது என்னவோ மாயங்களின் சாயல்களோடு கொண்ட இடமேதான்.... தேவை இல்லாமல் வெடித்து விடுவதில் கவிதைக்கும் எனக்கும்... இடைவெளி நெருக்கம் அதிகம்...ஒரு வழியாக அகன் அய்யாவை வண்டியில் ஏற்றிக் கொண்டு... துடியலூர் வந்து அபி சாரை ஏற்றிக் கொண்டு.. வெள்ளைக் கிணறு நோக்கி பயணிக்க தொடங்கினோம்... மழை மேகம்...மெல்ல விலக கொஞ்சம் வெயில் முகம்.. வேறு முகமாய்... பளிச்சிட... சாலையின் நெரிசலில்.. ஊர்ந்த எறும்பின் மொத்தம் தேகம் கனக்காத காற்றுக்குள் கார் வைத்தது போல.. கடக்க கடக்க, கடக்க விடாமல் எப்போதும் போல அதே வெள்ளைக் கிணறு...

யாரைக் கேட்டாலும் ஞானியைத் தெரியவில்லை.. அகன் அய்யா அருகில் இருந்த அரசு பள்ளி ஒன்றில் விசாரித்தார்... ஒருவருக்கும் ஞானியைத் தெரியவில்லை......" யாருக்குமே தெரியவில்லை"- என்று புன்னகைத்தார்.... புன்னகை முழுக்க படிந்தும் படியாமலும்.... தமிழைத் தேடிக் கொண்டிருந்த வருத்தம்... எங்கள் அனைவருக்குமே புரிந்தது.. ஆளுக்கொரு கடை.. ஆள் என்று கேட்டு.. யாருக்கும் தெரியாமல்... "அண்ணாமலை ஸ்டோர் என்று கேளுங்கள்.. அதற்கு பக்கத்தில்தான் ஞானி அய்யாவின் வீடு"என்று அபி சாரின் நண்பர் ஒருவர் அலைபேசியில் அடிச்சு தூள் கிளப்ப... அதே வேகத்தில் வெள்ளைக் கிணறு பிரிவு வந்தோம்... வர வர.. யோசித்த மறதிக்குள் வெள்ளைக் கிணறு வேறு.. வெள்ளைக் கிணறு பிரிவு வேறு....கொண்டு வா.... கொன்று வா... க்கு இடையிலான....குழப்பம்....இரண்டிலும் நண்பன் சதிஷ்சோடு சுற்றிய நாட்கள்... என்னை வேறு எங்கோ அழைத்துச் சென்று பின் மூளைக்குள் ஒரு குத்து விட்டு.. கொண்டு போய் கோவை ஞானியின் வீட்டிலேயே விட்டது....

கோவை முத்துக்களில் ஒன்று கோவை ஞானி.... வரவேற்றார்.... அமர சொன்னார்.... அகன் அய்யா அவரை அறிமுகம் செய்து கொண்டு.. எங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தினார்.... அபி சார் ஏற்கனவே அவரிடம் அறிமுகம் இருந்த போதிலும், மீண்டும் ஒரு முறை கை குலுக்களில்... திறன் ஆய்வு செய்யப் பட்டோம்....குழந்தையின் மிருதுவோடு.... மென் சோகப் படிதலென... அவரின் கையின் குளிர்ச்சி....தித்திக்கும் முக்திக்கும் அமுதுக்கும்... தமிழ் என்றே பேர்... என்று காட்டுக் கத்து கத்திய கவிதைக்காரன் எனக்கு, கடிவாளம் போட்டது.......

பழுத்த அறிவின் பக்குவத்தோடு வார்த்தைகள் எழுந்தது....... நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது என்று அருகில் நின்று புரிந்து கொண்ட தருணத்தை அகன் அய்யாவுக்கே காணிக்கை ஆக்குகிறேன்.. ஒவ்வொரு முறையும் இப்படி, அவரின் தணியா தமிழ் தாகத்தை எங்களுக்கும் வாரி வழங்கி விடுவதில் நிகர் நின்று பார்த்தாலும் நேர் நிற்பவர் அவரே.... அவரின் பணிவோடு... அவரைப் பின் தொடர்ந்த போது ஞானி அய்யா பொதுவாக கேள்வியும் கேட்டு பதிலும் கூறினார்... அகன் அய்யா கொண்டு வந்திருந்த "எழுத்து" தோழர்கள் எழுதி அவரே தொகுத்த, "தொலைந்து போன வானவில்" நூலையும்...
இந்திய பாப்லோ நெருடா...அல்லது சிலியின் தமிழன்பன்....(இவர்கள் இருவரையும்...ஒன்றாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.... இரு வேறு வாழ்வின் முறைகள் இருப்பினும். ஹைக்கூவுக்கு சிறகைப் பொருத்தியவர்கள் என்பதால் இந்த வேற்றுமையில் ஒற்றுமை....) குறித்து பல அறிஞர் பெருமக்கள்... எழுதிய ஆய்வுரைகள் அகன் அய்யாவால் தொகுக்கப்பட்ட "தமிழன்பன் ஒரு மகாகவி"- என்ற நூலையும் கோவை ஞானி அய்யாவிடம் கொடுத்து... வாழ்த்து பெற்றோம்... வானம் கொஞ்சம் பெற்றோம்...

எடுத்துக் கோர்ந்த வார்த்தைகளை தெளிவான உச்சரிப்பில்... ஒரு தியானத்தைப் போல... செய்தார்... பார்த்துக் கொண்டே இருந்தோம்.... ஒரு கரு உருவாகி மெல்ல மெல்ல கவிதையாக.. மாறுவதை பட்டாம் பூச்சியின் வண்ணம் சுமந்து கண்டடை ந்தோம்...

"ஒரு கட்டத்தில் எல்லாருமே ஓய்ந்து விட்ட பொழுதில்.... தமிழன்பன் மட்டும்.. இன்னும் இன்னும் அசுர வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறார்... இல்லையா!"- என்று வியந்து, அதே சமயம்.. ஒரு சம காலத்துக் கவிஞனைக் கொண்டாடும் தோரணையில் அழுத்தம் திருத்தமாக அவர் மொழி ஆண்ட விதம்.. நாம் கற்றுக் கொள்ள வேண்டியது...அந்த வியப்பு..... நாம் கொண்டாடப் பட வேண்டியது.... வீரியமுள்ள சக எழுத்தாளனை படிக்காத, மனது வந்து பாராட்டாத எந்த எழுத்தாளனும்.... அவனுக்கென்ற ஓர் உன்னத இடத்தைப் பிடிக்கவே முடியாது என்று மூளையின் நரம்புகளில் எல்லாம் உணரப் பட்ட கணம்..... கனம்......

அகன் அய்யா... வாசித்துக் காட்டிய தொலைந்து போன வானவில்லின் தொகுப்பாசிரியர் உரை... ஞானி அய்யாவின் மனக் கண்ணில்... ஒரு கவிதைக் காட்டை விதைத்திருக்கும்..... விதைகள் உறங்கா பொழுதுகளாய் மீண்டும் அக்கவிதை செய்ய ஒரு படைப்பாளி மீண்டும் விதையாகி விடுவதிலே தான் மும்முரமாய் இருக்கிறான்.. அவர் அப்படித்தான் இருந்தார்....

"ஒரு மண்ணின் விடுதலைக்கு எந்த இலக்கியம் பயன் பட்டதோ.. ஒரு மனிதனின் அவலம் நீங்க எந்த இலக்கியம் பயன்பட்டதோ...அநியாயத்திற்கு எதிராகக் குரல் எழுப்பி கிளர்ச்சியை எந்த இலக்கியம் உண்டாக்கியதோ.... அந்த இலக்கியம்தான் மக்கள் இலக்கியமாக மாறும் தன்மையைப் பெற்றுவிடும்.. என்பது நம் விடுதலைக்குக் காரணமான பாரதியின் படைப்புகளிலும்... பாரதிதாசனின் வரிகளிலும்...பட்டுக்கோட்டையாரின் வரிகளிலும் உண்மையாப் போனது....."- இப்படி தொடரும்..... உரைக்குள் உறங்கா கத்தி ஒன்று இருக்க.....அதை எடுத்து எழுதுகோல் ஆக்குங்கள்...... உன் மைக்குள் உண்மை இருக்க.. அதுதான்... இலக்கியமாகும்... இலக்கிய தத்துவத்தில் தத்துவமும் இலக்கியமே... இலக்கியங்கள் சில போது வெளிப்படாமலும்... உறைந்திருக்கும்.. உரைவாளின் உன்னதம் போல...

பேச்சுக்கள் நின்ற எப்போதும் போலொரு அவை மணியில் எங்கள் அனைவருக்கும் ஞானி அய்யா, அவரின் புத்தககங்களைக் கொடுத்தார்.. கையில் இருந்த வேறு வேறு 5 புத்தகங்களில்.. யாருக்கு என்ன தலைப்பு ஒத்துப் போகிறது என்று கேட்டுக் கேட்டுக் கொடுத்தார்... புரிதலின் வாழ்வுக்கு... ஒரு படைப்பாளியே நியாயம் செய்கிறான்.. என்பதை நான் 'தத்துவம் பிடிக்கும்' என்று வாங்கிக் கொண்ட புத்தகத்துக்குள் புதிய சிருஷ்டியை மொழி அற்ற பொக்கிஷமாக உணர்ந்தேன்... மற்றவர்களும் அப்படியே உணர்ந்தார்கள்.....படைப்பவன் வாங்குவதை விடு... கொடுப்பதில்...நிறைந்து விடுகிறான்.... அவர் நிறைந்தார்....நிறைவுகளின் கணத்தை எட்டி நின்ற பொழுதில்தான்.... தூரம் புரிகிறது......... விடை பெற்று மீண்டும் வண்டி கிளம்பியது...... பசி கிள்ள.. உணவகம் தேடிக் கொண்டே.... கவிதை பசிக்கு உணவளித்த "எழுத்து" அலுவலகத்துக்கு விரைந்தோம்...அகன் அய்யாவும் அபி சாரும் எங்களோடு நிறைய பேசினார்கள்.... அறிவுப் பெட்டகங்களை நாம் இன்னும் சரியாக உபயோகித்துக் கொள்ளவில்லை என்று தான் நாங்கள் மூவரும் நினைத்துக் கொண்டோம்.....

தம்பி ராஜ்- இன் நினைவுக்குள் படிந்து விட்ட சோறின் கூடமென சிங்காநல்லூரில்..... இருந்த அந்த உணவகத்தில்... மனம் ஆற சாப்பிட்டோம்.... அடுத்த 10 நிமிடங்களில் "எழுத்து" அலுவலகம்..... வழக்கம் போல எனக்கும் எழுத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது..... வரவேற்கப் பட்டோம்... அமர்ந்தோம்.. சற்று கணத்தில் 'எழுத்து' தளம் நிர்வாகி தோழர் ராஜேஷ் குமார் வந்தார்... அவரும் வழக்கம் போல.. 'அது நான் இல்லைங்க' என்பது போல புன்னகைத்தார்...... அளவாக பேசினார்..... ஆனால் அழுத்தமாக பேசினார்... ஒரு நோக்கம்... இந்த வாழ்வுக்கு உண்டு.. ஆகவேதான் நான் பிறக்கிறேன்.... ஒரு தீர்க்கம் என வாழ்வெங்கும் இருக்கிறது.. ஆகவேதான் நான் வாழ்கிறேன்.... என்று சொல்லாமல் சொன்ன தோழர்... நமக்கு செய்திருப்பது சாதாரண காரியம் அல்ல.. பொதுநலம் ஆரம்பிக்கும் சுயநலம்.. சாதாரணமாக தெரியலாம்... அந்த நலத்தில் இருந்தே எல்லாமே விளைகிறது... என்பது தான் அசாதாரணம்...

"எழுத்து" தளம் மட்டும் இல்லை என்றால்... நீங்களும் நானும் இன்றும்... நாட்குறிப்பில்தான் எழுதிக் கொண்டு இருந்திருப்போம்... நல்லவர்கள் எல்லாரும் ஒன்று சேரும் தருணத்தில் தான்.. வாழ்வின் உன்னதங்கள் அரங்கேறுகின்றன...எல்லாருமே கூடி நிற்பது... ஒன்றுக்கு மட்டும் தான்... அது தமிழ்... எழுதும் போதே உணர்வுக்குள் பொங்கும்.. நிஜம் தமிழாய் சேருகிறது... தமிழை சேருகிறது.... .முன் நிற்கும் படைப்பாளிகள் காணாமல் போய் விடுவார்கள் .. முன் நிற்கும் படைப்புகள் .. காலம் தாண்டும்...... தோழர் ராஜேஷ்குமார் ... மிகப் பெரிய படைப்பை நம் முன்னே வைத்திருக்கிறார்.... இனியாவது கைகள் சேர்வோம்.. எல்லாரும் முன்னுக்கு போவோம்..அது தானே.. வளர்ச்சி... அப்போது தானே தமிழும் வளரும்.. அப்போது தானே ஒரு நோக்கம் தன் லட்சியத்தை அடையும்...

புத்தகம் பரிசளித்தோம்.... பட்டையம் கொடுத்தோம்... புகைப் படம் எடுத்தோம்....மனம் நிறைந்த வழி எங்கும்.. மாலை சூரியன்.. மஞ்சள் பூசிக் கொண்டான்... மழை வருமா.. என்று யோசித்த கணத்தோடு.. ராஜ் இறங்கிக் கொண்டான்..... அடுத்து.. அபி சாரை இறக்கி விட்டு... பின் அகன் அய்யாவை கொண்டு போய் விட்டு விட்டு.. பின் கோபியை பஸ் ஏற்றி விட்டேன்..... வீடு வந்து சேர்ந்த மனதுக்குள் ஞானி அய்யாவும் தோழர் ராஜேஷ் குமாரும்.... வயது தாண்டி.. ஒரு வித தியானத்துக்குள் இருப்பதை புரிந்தபடியே இன்னும் விசாலமாய் மனம் வேண்டி யோசிக்கத் தொடங்கினேன்...... கற்கவில்லை என்று தெரிவற்தகே எத்தனை கற்க வேண்டி இருக்கிறது... என்பதை அசை போடத் தொடங்கியது..... இந்த சின்ன அனுபவம்........

"அகராதிக்குள் சொற்கள்
பேசிக் கொண்டன....
நாம் இங்கேயே இருப்பதில் என்ன பயன்...."

அய்யா ஞானி அவர்கள் ஞாபகப்படுத்தும், அய்யா தமிழன்பன் அவர்கள் வரிகளில்... தொடங்கட்டும்... குறிக்கோளின் யோசனைகள்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (13-Nov-15, 1:08 pm)
பார்வை : 259

சிறந்த கட்டுரைகள்

மேலே