மாண்டவன் மலருகிறான் -சந்தோஷ் -500 வது கவிதை-

மாண்டவன் மலருகிறான்
------------------------------------------

நான் மரித்துவிட்டேன்
நான் மரணித்துவிட்டேன்.
வாருங்கள்.. வாருங்கள்
நீங்கள் யாவரும் வாருங்கள்
என் இறுதிச் சடங்கிற்கு...!

இதோ இதுவே என் அழைப்பிதழ்.

எப்போது மாண்டேன்?
எப்படி மாண்டேன்.?

தோழர்கள் தோழர்களென
ஆர்பரித்து நட்பு விரல்பிடித்து நம்பியபோது
தோழன் ஒருவனின் தேள் விரல்கள்
என் செல்வமுதுகை கொட்டி கொட்டி
எனை சிதைத்ததே அப்போது
வெம்பி வெம்பி மாண்டேன்.

”எந்தன் புனிதமான நேயநதியில்
தீவைத்த போலிக்காரிகளே!
என்னில் நினைவுமீனாய் நீந்த
அனுமதியில்லை உங்களுக்கு..!
இனியொருமுறை
வந்துவிடாதீர்கள்.. இனியும் வந்து
என்னில் தீக்குளித்து வெந்துவிடாதீர்கள்”
எழுதி முற்றுப்புள்ளிவைத்தேனே அப்போது
இவ்வுலக உருண்டையினை
எட்டியுதைத்து காலுடைந்து
நெஞ்சம் வெடித்து மாண்டேன்.


தோழர்களே...! வாருங்கள்
நீங்கள் யாவரும் வாருங்கள்
எனக்கு இறுதிச் சடங்குச்செய்ய..!

வாருங்கள் ! வாருங்கள்..!
காற்றுத் தொலைத்த என் பூத உடலுக்கு
பூமாலை போடாதீர்கள்.
ஒரு பூமாலையின் விலை
ஒர் ஏழையின் பசி போக்கும்.

நான் நல்லவனாக வாழ்ந்திருந்தால்
உங்களின் விலைமதிப்பற்ற
ஒருத் துளி கண்ணீர் போதும்.
தீயவனாக தோன்றியிருந்தால்
உங்களின் பொன்போன்ற
ஒரு புன்னகை போதும்.

வாருங்கள்..! வாருங்கள்.!!
மின்மயானம் வரை உங்களுக்கு
பின்வரும் என் பிணம்.
மின்சூட்டில் பொசுங்கி
சாம்பலாகினாலும்
உங்களுக்காக தவம் கிடக்கும்
என் இலக்கியம்.
அப்போதாவது தீண்டதகாதவனென்
எழுத்துகளை தீண்டப்பாருங்கள்.

நான் கொளுத்திய இலக்கிய
தீப்பந்தச் சூடு உங்களுக்கு....
கொஞ்சும் சுடும் ! நிறைய உரைக்கும். !


ஏய் ! எனதிதயத்தை
கொன்றழித்த அரக்கியே !
துரோக்கதனலில் வீழ்த்திய
எனதினிய துரோகிகளே...!

மரித்தவன் நான் மீண்டும் மலருவேன்.
பாசம்,பந்தம் அன்பு,காதலென
முற்றும் துறந்த
கவிஞனாக..எழுத்தாளனாக..!
புத்த நிலை பெற்றவனாக....!
பெற்ற தமிழை முத்தமிடுவதற்காக..!
மலருவேன்... மலருவேன்....
இதோ மலரப்போகிறேன்...!



**

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (15-Nov-15, 3:08 pm)
பார்வை : 183

மேலே